Archive for the ‘கட்டுரை’

டெல்லி குண்டு வெடிப்பில் (2005) குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை – அ.மார்க்ஸ்

No Comments →

இதை வெறும் செய்தியாக வாசித்துக் கடந்ததோடு மட்டுமின்றி சற்று விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கவும் வேண்டும். மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் எல்லாமும் கூட இது குறித்துப் பேசி இருக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்து The Hindu (Feb 21, 2017) மட்டுமே, மிகவும் பாராட்டத்தக்க வகையில், இது குறித்து ஒரு அருமையான தலையங்கம் தீட்டி இருந்தது. சமூக ஊடகங்களிலும் யாரும் இதைப் பெரிதாகக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. முஸ்லிம் வார இதழ்களில் மட்டும் இது பற்றி எழுதக் கூடும்.

2005 அக் 29ல் நடைபெற்ற அந்த குண்டு வெடிப்பு டெல்லியைக் குலுக்கிய ஒன்று. 67 பேர்கள் கொல்லப்பட்டார்கள். 200 பேர் காயமடந்தனர்.

புலனாய்ந்த காவல்துறை முகமது ஹுசைன் ஃபஸ்லி, முகமது ரஃபிக் ஷா, தாரிக் அகமத் தர் என மூவரைக் கைது செய்து அவர்கள் மீது ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ (UAPA) உட்பட, கடுமையான அனைத்துச் சட்டங்களின் கீழும் வழக்குத் தொடர்ந்து அவர்கள் வாழ்வை அழித்தது.

11 ஆண்டுகள் முடிந்து, மேலே குறிப்பிட மூவரில் முதல் இருவர் மீதான குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என இன்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது நபர் தாரிக் அகமது தர் மட்டும் தண்டிக்கப் பட்டுள்ளார். அவரும் கூட அந்தக் குற்றச் செயலுக்காகத் தண்டிக்கப்பட வில்லை . ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதற்காக அவருக்கு அந்தத் தண்டனை. அவர்களுக்குக் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ஏதோ நடவடிக்கையில் வேறு அவர். பங்கு பெற்றாராம். வேடிக்கை என்னவென்றால் எந்தக் குற்றத்திற்காக அவர் தண்டிக்கப்பட்டாரோ அதை புலனாய்வு செய்த போலீஸ்காரர்கள் அவர் மீது சுமத்தி இருக்கவில்லை. வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரீடேஷ் சிங்தான் தன் தீர்ப்பில் இந்தக் குற்றத்தக் கவனப்படுத்தித் தண்டித்துள்ளார். புலனாய்வுத் துறை சாட்டிய குற்றச்சாட்டு, அதாவது பொது இடத்தில் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தர் விஷயத்திலும் நிரூபிக்கப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கது. ஆக அந்தக் குண்டு வெடிப்புக்காகக் குற்றம்சாட்டப்பட்ட மூன்று முஸ்லிம்களுமே இன்று அந்தக் குற்றத்திலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர். UAPA சட்டம் கொடூரமானது. தண்டனைகளும் வழக்கமான குற்றங்களைக் காட்டிலும் அதிகம். எனவே தீர்ப்பைத் தெளிவாக வாசித்தோமானால்தான் தர் மீதுள்ள குற்றச்சாட்டைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆக இரண்டு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களும் அவர்களது குடும்பங்களும் 11 ஆண்டுகளுக்கும் மேல் அனைத்துத் துயரங்களையும் சுமந்து, நானும் நீங்களும் புரிந்து கொள்ளவே முடியாத சோகங்களைச் சந்தித்து….. இன்று ஒரு மிகப் பெரிய கேள்விக்குறியுடன் எதிர்காலத்தை எதிர் கொண்டு நிற்கின்றனர்.

இந்தத் தீர்ப்பில் இரண்டு அம்சங்கள் நம் கவனத்துக்கு உரியவை. 1. பொதுவாகப் புலனாய்வுத்துறை சாட்டும் குற்றச்சாட்டைக் கீழ் நீதிமன்றங்கள் அப்படியே ஏற்று உச்சபட்சமான தண்டனை வழங்குவது வழக்கம், அப்படி இல்லாமல் இந்த வழக்கில் மிகவும் நேர்மையாக, எந்த விதமான அழுத்தங்களுக்கும் பணியாமல், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரீதேஷ் சிங் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். அவரை நாம் மனதாரப் பாராட்டியாக வேண்டும்.

2. தான் சுமத்திய குற்றச்சாட்டை நிறுவுவதில் புலனாய்வுத்துறை மிக மோசமாகத் தோற்றுள்ளது (“miserably failed”) என மிகத் தெளிவாக புலனாய்வுத் துறையைத் தன் தீர்ப்பில் நீதிபதி ரீதேஷ் சிங் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது. இப்படியான கொடும் பயங்கரவாதத் தாக்குதல்களில் அவசரமாகக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் காட்டிக் கொள்ளும் நோக்கில் யாராவது இரண்டு மூன்று முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து வழக்கை முடித்து விடுவது என்பதன் மூலம் உண்மையான குற்றவாளிகள் மற்றும் அமைப்புகள் தப்பிக்க நேர்வது கவனத்துக்குரிய ஒன்று. மக்கா மசூதி, சம்ஜாதா எக்ஸ்பிரஸ், மலேகான் குண்டு வெடிப்பு, முதலான வழக்குகளில் ஒரு மிகப் பெரிய சதிக் கும்பல் தொடர்ந்து இப்படி கொடூரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டும், அதன் மூலம் சமூகத்தைப் பிளவு படுத்தும் தம் நோக்கத்தை நிறை வேற்றிக் கொண்டும் நீண்டகாலம் இருக்க நேர்ந்ததற்கு இத்தகைய அணுகல்முறையே காரணம். தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டு வெடிப்பும் இத்தகையதே.

3. முஸ்லிம்களைக் குற்றம் சாட்டுவது புலனாய்வுத் துறைகளுக்கு மிகவும் எளிதானதாகவும் வசதியான ஒன்றாகவும் உள்ளது. அவர்கள் மீதான குற்றங்களை நிறுவுவதற்கு அவர்கள் அதிகச் சிரமம் படத் தேவையில்லை. அவர்கள் முஸ்லிம்கள் என்பதொன்றே அதற்கான நிரூபணமாக இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இங்கு வகுப்புவாதிகளும் காவல்துறையும் ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்களாக ஆகிவிடுகின்றனர்.

“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””’

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கை இப்படித் தொடர்ந்து அழிந்து கொண்டிருப்பது அந்தக் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் இழப்பு என்பதோடு முடிந்து விடுவதல்ல. அதன் மூலம் ஒட்டு மொத்தமான நாட்டு நலன், சமுக ஒற்றுமை எல்லாமே பாதிக்கப்படுகிறது என்கிற புரிதல் இங்கு யாருக்குமே இல்லாமல் போனது கவலைக்குரிய ஒன்று.

இப்படிக் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் சிறையில் வாடிதங்களின் நிகழ் காலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் இழந்த சுமார் 22 முஸ்லிம் இளைஞர்கள் பற்றிய விவரங்களைப் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் நூலாக வடித்துள்ளார். ஒரு நான்காண்டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இந்தப் பட்டியலை பிரகாஷ் காரட் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துக் கொடுத்ததோடு சில முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்தனர். இப்படிக் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். என்பதும் பொய்க் குற்றம் சாட்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் அந்தக் கோரிக்கைகளில் அடக்கம்.

இரண்டாண்டுகளுக்கு முன் டெல்லியில் NCHRO அமைப்பு ஒரு மாநாடு நடத்தி இது குறித்த கவன ஈர்ப்பைச் செய்தது. அப்போது சுமார் 30 க்கும் மேற்பட்ட அப்பாவிகள் தாம் இப்படித் தண்டிக்கப்பட்ட கொடுமையை அங்கு நேரில் வந்து வழக்கு விவரங்களுடன் முறையிட்டதை எனது ‘முஸ்லிம்கள்’ நூலில் பதிவு செய்துள்ளேன்.

எனினும் பெரிய அளவில் இதுவிவாதத்திற்குள்ளாகாதது வேதனை.

கல்வியும் குழந்தைகளும் – மு. சிவகுருநாதன்

No Comments →

குழந்தை நேயப்பள்ளிகள் (Child Friendly Schools)

ஒரு இனிமையான கருத்தாக்கம். சீர்மிகு காவல், மனித நேயக் காவல் என்பதுபோல் இதுவும் வெற்று முழக்கமாக இருக்கக் கூடாது.

கல்வியின் ஒவ்வொரு அலகும் குழந்தையுடன் முரண் எதிர்வை உண்டாக்குகிறது. எதுவுமே இன்று குழந்தைகளுக்கு Friendly ஆக இல்லை. இதனைச் சாத்தியப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி, பாடத்திட்டம், பாடநூல்கள், அரசுகள், சட்டங்கள், உளவியல், குடும்பம், சூழல், உரிமைகள், மொழிகள், விளையாட்டுகள் எதுவுமே குழந்தைகளுடன் முரணி நிற்கின்றன. இந்த உறவுகள் மேல்-கீழ் எனும் ஆதிக்கப்படிநிலைகளில் அமைந்துள்ளன. குழந்தைகளை இயல்பாக நேசிக்கும் எவருக்கும் கல்வி என்கிறபோது நேயம் போய்விடுகிறது.

குழந்தைகள் X பெற்றோர்கள்

குழந்தைகள் ஒரு கருவி, மூலதனம், வருங்கால முதலீடு, அடிமைகள், இவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

குழந்தைகள் X ஆசிரியர்கள்

விசுவாச அடிமைகள், சேவை செய்ய வேண்டியவர்கள், அறிவூட்டப்பட வேண்டியவர்கள், திருத்தப்பட வேண்டியவர்கள், கண்டித்து வளர்க்கப்பட வேண்டியவர்கள்

குழந்தைகள் X சட்டங்கள்

வயதெல்லைக் குழப்பங்கள், 6-14 கல்வி உரிமை, 0-3, 14-18 க்கான கல்வி உரிமை, குழந்தைத் தொழிலாளர் வயது 16, பெற்றோருடன் பணி செய்ய உதவும் சட்டத்திருத்தம்

குழந்தைகள் X பள்ளி

சிறைச்சாலைகள், கட்டுப்பாடுகள், தண்டனைகள், மதிப்பீடுகள், தேர்வுகள்

குழந்தைகள் X பாடத்திட்டம்

பொருட்படுத்தாத பாடத்திட்டம், திணிப்புகள், அந்நியப்படுத்தல், வட்டாரங்களைப் புறக்கணிக்கும் பொதுப்பாடத்திட்டம், உள்ளூர் தன்மைகள் புறக்கணிப்பு

குழந்தைகள் X பாடநூல்கள்

பெரும் சுமை, அறிவுக்கான ஒரே கருவி, வேதநூல், இதைத்தாண்டி ஏதுமில்லை, வெறுப்பின் உச்சம்

குழந்தைகள் X குடும்பம்

பள்ளியை பிரதியாக்கம் செய்கிறது, குழந்தையைத் தவிர அனைவரும் ஆசிரியர்கள், படிப்பு பற்றி மீண்டும் கேட்கப்படுகிறது, எச்சரிக்கைகள்

குழந்தைகள் X உளவியல்

நடத்தைகளை பொதுமைப்படுத்தும், தனித்த உள்ளூர் நிலவரங்களைக் கணக்கில் கொள்ளாமை, இயல்பூக்கங்கள், மனவெழுச்சிகளில் வட்டார, சமூகத் தலையீடுகளைப் புறந்தள்ளும். (உம்) சாதி, மதம், தீண்டாமை

குழந்தைகள் X சூழல்

மிரட்டும் சூழல், கல்வி பற்றிய தவறான புரிதல், தேர்வு தொடர்பான தாக்குதல்கள்

குழந்தைகள் X சமூகம்

குழந்தமை குறித்த உணர்வு, கல்வி மதிப்பீடுகள், மதத் தாக்கம், விலகும்-விலக்கும் தன்மைகள், மாற்றுத்திறனாளிகளைப் போன்று குழந்தைகளுக்கும் கழிப்பறை வசதிகளின்மை

குழந்தைகள் X அரசு

அரசின் புறக்கணிப்பு, சமூக விலக்கம், தனித்த நிதி ஒதுக்கீடு இன்மை, சட்டங்களை அமலாக்கக் குறைபாடு

குழந்தைகள் X உரிமைகள்

உரிமைகள் மறுப்பு, குழந்தைகள் ஆணையங்களின் செயல்பாடின்மை, சமூக வன்முறை, குடும்ப-பள்ளி-ஊடக வன்முறைகள்.

குழந்தைகள் X மொழிகள்

குழந்தை மொழி-வட்டார மொழி நீக்கம், பொதுமொழிப் பயன்பாடு, அந்நியத்தன்மை, வட்டார அளவிலான ஆசிரியர்கள் இன்மை.

குழந்தைகள் X விளையாட்டுகள்

விளையாட்டு மறுப்பு, விளையாட்டு காட்சி ரூபமாக மாறிப்போன அவலம் (கிரிக்கெட் லைவ், இணைய விளையாட்டுகள்)

குழந்தைகள் X இலக்கியங்கள்

குழந்தை இலக்கியப் பற்றாக்குறை, மதச்சாயமிட்ட இலக்கியங்கள், சிறுவர்களுக்கு ஒவ்வாத இலக்கியங்கள், குழந்தமையைப் புறக்கணிக்கும் இலக்கியங்கள்

குழந்தைகள் சூழலை விட்டு விலகும்/விலக்கும் காரணிகள்

• பால் பாகுபாடுகள்
• உளவியல் போதாமைகள்
• குழந்தைகள் பற்றிய புரிதலின்மை
• கல்வி பற்றிய தவறான எண்ணங்கள்
• தேவைகளைப் புறக்கணித்தல்
• பாடச்சுமைகள்
• சொந்த வேலைகளில் ஈடுபடுத்துதல்
• ஊக்கமின்மை
• உள்கட்டமைப்புக் குறைபாடு
• சமூகச் சூழல்
• ஆதிக்கம் செலுத்தும் சக்திகள்

இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. குழந்தை நேயப்பள்ளிகளை அடைய நிறைய தூரம் பயணிக்க வேண்டும். அரசு நம்முடன் இணைய வேண்டும். அப்போதுதான் வெற்றி சாத்தியப்படும்.

(04.02.2017 அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த ‘மனித நேயப் பள்ளிகள் குறித்த ஆசிரியர்கள் கலந்துரையாடலுக்கு’ தயாரிக்கப்பட்ட குறிப்புகள்.)

கனவுலகத்தில் சஞ்சாரிப்பவர்களா ஆசிரியர்கள்? (2) – மு. சிவகுருநாதன்

No Comments →

பகுதி இரண்டு…

(ஜன. 30,31 – 2017 ஆகிய இரு நாள்கள் “பாடத்துடன் நற்பண்புகளை இணைத்துக் கற்பித்தலும் கற்றலும்” (VITAL – Value Integrated Teaching And Learning) பயிற்சி 9, 10 தமிழ் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. அதன் அனுபவப் பகிர்வு இது.)

எட்டு:

காந்தியின் பிள்ளைகள் சரியாக இல்லை.

இது காந்தியைப் பற்றி வைக்கப்படும் மிக மோசமான அவதூறு. காந்தியைப் படிக்காமல் போகிறபோக்கில் இவ்வகையான நச்சுப் பரப்புரை செய்யப்படுகிறது. இது என்ன மாதிரியான மனநிலையை வெளிப்படுத்துகிறது என்பது உலகறிந்த ஒன்று. ஜவகர்லால் நேரு – இந்திரா காந்தி – ராஜூவ் காந்தி என்பது போன்ற நிலை இருந்தால்தான் சரியென்பது மிகவும் அபத்தம். காந்தி அரச பதவிகளையும் அதிகாரத்தையும் ஒருங்கே எதிர்த்தவர்.

காந்திக்கு 4 ஆண் குழந்தைகள். (ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ்) இதில் முதல் மகன் ஹரிலால் காந்தி மட்டும் காந்தியுடன் முரண்பட்டு, தானும் காந்தியும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகக் காரணமாக இருந்தவர். காந்தியின் படுகொலைக்குப் பிறகு உண்மையை உணர்ந்த இவர் சில மாதமே உயிருடன் இருந்தார்.

மணிலால் காந்தி தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் போராடியவர். 25 முறை சிறை சென்றுள்ளார், 14 ஆண்டுகள் சிறை வாழ்க்கை. இவரது மகன் அருண் மணிலால் காந்தி, காந்தீய சித்தாந்த அறிஞர். எம்.கே. காந்தி அகிம்சை ஆய்வு மையத்தை அமெரிக்காவில் நிறுவியவர். துஷார் காந்தி இவரது மகன், எழுத்தாளர், அரசியல் விமர்சகர். மணிலால் காந்திக்கு சீதா காந்தி, இலா காந்தி ஆகிய இரு மகள்கள், இலா காந்தி தென்னாப்பிரிக்க விடுதலைப் போரில் பங்கு பெற்றவர், 1994 – 2004 காலகட்டத்தில் தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்.

ராம்தாஸ் காந்தி 1948 –ல் காந்தியின் இறுதிச்சடங்கைச் செய்து அஸ்தியைக் கரைத்தவர். டாடாவில் எண்ணெய் ஆலையில் பணி செய்தார். ராம்தாஸ் – நிர்மலா பென் தம்பதிகள் வார்தா ஆசிரமத்தில் சொந்த உழைப்பில் மிக எளிமையாக வாழ்ந்தவர்கள். 1969 -ல் இவர் இறந்த பிறகு நிர்மலா பென் தொடர்ந்து சமூகப்பணியாற்றினார்.

காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே தண்டிக்கப்படக்கூடாது, அது காந்தியின் வழியல்ல என்று அப்போதைய கவர்னர் ஜெனரல் ராஜாஜிக்கு கடிதம் எழுதினார். ஆனால் அரசால் அது நிராகரிக்கப்பட்டது. கோட்சேவை மன்னித்துவிட்டதாக அவருக்கும் கடிதமெழுதினார். ரஜனிஷ் காந்தியை நிராகரித்து பேசியபோது, அதற்கும் உரிமை உண்டென்றார். இதுதானே காந்தியின் பாதை. இவருக்கு சுமத்ரா, கனு, உஷா ஆகிய மூன்று பெண்கள். கனு ஹார்வார்டில் கல்வி கற்ற அறிவியலாளர்.

தேவதாஸ் காந்தி ராஜாஜி மகள் லெட்சுமியை காதல் திருமணம் செய்துகொண்டவர். இந்தக் காதலை அறிந்த காந்தி சில கட்டுப்பாடுகள் விதித்தார், 5 ஆண்டுகள் காத்திருந்து காந்தியின் சம்மதத்துடன் இவர்கள் மணமுடித்தனர். பூனா ஒப்பந்தத்தில் காந்தியின் சார்பில் கைசாத்திட்டவர். ‘டைம்ஸ் ஆப் இன்டியா’வின் ஆசிரியர் குழுவில் இருந்தார். சமூக, அரசியல் செயல்பாட்டாளர். இவருக்கு நான்கு குழந்தைகள். மூத்தவர் ராஜ்மோகன் காந்தி, வரலாற்றாசிரியர், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பணி செய்தவர், மாநிலங்களவை உறுப்பினர், எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்டவர்.

இரண்டாவது மகன் கோபாலகிருஷ்ண காந்தி கவிஞர், நாவலாசிரியர். அயல்நாட்டு தூதர், ஆளுநர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர். இவரது கட்டுரை ஒன்று பிப். 01, 2017 ‘தி இந்து’ நாளிதழில் வெளியாகியிருந்தது.

மூன்றாவது மகன் ராமச்சந்திர காந்தி, தத்துவ அறிஞர். அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையை நிறுவியவர். இவர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு பல்கலைக்கழங்களில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது மகள் லீலா காந்தி சமூக வரலாற்றாசிரியர், சிகாகோ பல்கலைக்கழகம். உலகில் எந்த ஒரு தலைவருக்கு இல்லாத நீண்ட மரபுத்தொடர்ச்சி காந்திக்கு மட்டுமே உண்டு. இந்த உண்மைகளை மறந்து பிரதமரின் மகன் பிரதமர், முதல்வரின் மகன் முதல்வர் என்கிற வருணாஸ்ரம, மநு நீதிக் கருத்தாக்கங்களைக் கொண்டு அணுகுவது நேர்மையல்ல.
ஒன்பது:

ஆங்கிலக் கல்விதான் நம்மை அடிமைப்படுத்தியது.

ஆங்கிலக்கல்வி பற்றிய இந்தப்புரிதல் மிகவும் தவறானது. நமது தவறான மொழிக்கொள்கைக்கு இதுவும் ஓரு உதாரணம். இந்தி, ஆங்கில மொழி ஆதிக்கத்தை எதிர்ப்பது வேறு. அந்த மொழிகளைப் படிப்பது வேறு. இன்றுள்ள சூழலில் இந்தி போன்ற ஒரு மொழியைப் படிப்பதைவிட ஆங்கிலம் போன்ற ஒரு உலக மொழியைக் கற்பதே சிறந்தது.
ஆங்கிலம் வழியாக நாம் நாம் நிறைய பெற்றிருக்கிறோம். சமஸ்கிருதம், இந்தி வேண்டும் என்று சொல்பவர்கள்தான் ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்கிறார்கள். எனவே இதன் உள் அரசியலைப் புரிந்துகொள்ள விளக்கம் தேவையில்லை.

தங்களது குழந்தைகளை தனியார் ஆங்கில வழிப்பள்ளிகளிலும் கேந்திரிய வித்யாலயாக்களில் இந்தியும் படிக்க வைத்துவிட்டு, ஆங்கிலத்தை எதிர்ப்பதாகச் சொல்வதும் தமிழ்ப் பெருமை பேசுவதும் அபத்தமின்றி வேறில்லை. பிரிட்டன் ஆட்சி வருவதற்கு முன்பு நாம் என்ன சுதந்திர நாட்டிலா இருந்தோம்? மன்னர்களிடமும் மதத்திடமும் அடிமைப்பட்டுக் கிடக்கவில்லையா? ஆங்கிலத்தை மொழியாகக் கற்கப் போகிறோமா, அல்லது எல்லாமாக ஏற்றுக்கொள்கிறோமா என்பதுதான் இன்றைய கேள்வி.

பத்து:

இந்திய அரசியல் சட்ட அடிப்படை உரிமைகள் 06; கடமைகள் 11.

1976 –ல் இந்திய அரசியல் சட்டம் பகுதி 4 அ -வில் 11 பிரிவுகள் (a -விலிருந்து k முடிய) அடிப்படைக் கடமைகளாகச் சேர்க்கப்பட்டது. கடமைகள் 11 என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம்.

அடிப்படை உரிமைகள் 06 என்று சொல்வது தவறு. இந்திய அரசியல் சட்டத்தில் பகுதி 3 -ல் பிரிவு 12 முதல் 35 முடிய குடிமக்களின் உரிமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பாக சிலவற்றை பாடநூலில் குழந்தைகளுக்குப் பட்டியலிடுகிறார்கள். அதனாலேயே 6 உரிமைகள் என்று சொல்வது எவ்வாறு சரியாகும்? பாடநூல்கள் வேதநூல்கள் அல்ல; இரண்டும் விமர்சனத்திற்குட்பட்டதே என்கிற உண்மையை நாம் எப்போது உணர்ந்துகொள்ளப் போகிறோம்?

பதினொன்று:

மாற்றுக் கருத்துகளை ஏற்கும் மனநிலை இன்மை, முற்போக்கு முத்திரை குத்தும் மனப்பான்மை.

கல்வியாளர் மாடசாமி சொல்வதைப் போல ஆசிரியர்கள் ‘நிரம்பி வழிபவர்களாக’ இருப்பதை மாற்ற முடிந்தால் அது கல்வியின் வெற்றி. ஆனால் புதிய சிந்தனைகளை ஏற்காத மனநிலை, அவற்றை அறிந்துகொள்ள அல்லது விவாதிக்க இடமில்லாத மனப்போக்கு, காரண – காரியமற்ற தகவல்களை எவ்விதக் கேள்வியும் இன்றி அப்படியே ஏற்கும் தன்மை நிரம்ப விரவிக்கிடக்கிறது. சக ஆசிரியர்கள் கேள்வி கேட்பதை அனுமதிக்காதவர்கள் மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்வர்?
புதிய கருத்துகள் வந்தால் அதெல்லாம் முற்போக்கு என்று முத்திரை குத்துகிறார்கள். தாங்கள் பிற்போக்கு அல்லது பழமைவாதிகள் என்று ஒத்துக்கொள்வதானே பொருள்! நாடு மதச்சார்பற்ற நாடாக இருப்பினும் கல்வியை மதச்சார்பற்றதாக மாற்ற முடியாத நிலையின் விளைவே இதுவாகும். இப்போது அரசே வேதக்கல்வியின் புகழைப் பாடுகிறது. அத்துடன் சேர்ந்து நாமும் தமிழ் மொழி, கலாச்சாரப் பெருமை பேசிவிட்டு போகப் போகிறோமா?

பனிரண்டு:

சொல் வேறு செயல் வேறு, இதுதான் ஆசிரியர்களின் நன்னெறியா?

“செயல் அதுவே சிறந்த சொல்”, என்பார்கள். ஆனால் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்னும் இரண்டக நிலையைக் படித்தவர்கள் கடைபிடிக்கலாமா? “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான், அய்யோன்னு போவான்”, என்று பாரதி வெதும்பிப் பாடியது இதைத்தானே!

ஒருபுறம் மொழிக் கலாச்சார பெருமை; மறுபுறம் ஆங்கில வழிப் படிப்பு. சாதி முறை, மூடநம்பிக்கைகளை எதிர்ப்பதிலும் இரட்டை நிலைப்பாடு இருக்கலாமா? சமூக சமத்துவம் பேண ஏதாவது செய்ய வேண்டாமா?

பதிமூன்று:

திறந்த வெளிகழிப்பிடங்கள் பற்றிய குறும்படங்கள் சொல்வதென்ன?

இன்று சூழலியல் சார்ந்த புரிதல் சற்று மேம்பட்டுள்ளது. ஆனால் பாடநூல்களும் ஆசிரியர்களும் இன்னும் பழைய மாவை அரைப்பது கொடுமை. கடுந்தீங்கு விளைவிக்கும் அணுக்கழிவுகள், தொழிலகக் கழிவுகள் பற்றி ஏதும் பேசாமல், பாடநூல்களும் ஆசிரியர்களும் திறந்த வெளியில் மலம் கழிப்பதைப் பற்றியே பேசுவது வேடிக்கை. மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டமும் இதே கதைதான். 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் போபால் நச்சு வாயுக்கசிவிற்கு இழப்பீடு வழங்க முடியாதது மட்டுமின்றி, அந்தக் கழிவுகள் இன்னும் அங்கிருந்து அகற்றப்படவில்லை என்பது எவ்வளவு வேதனையானது. ‘தூய்மை இந்தியா; விற்கு இவையும் அணு உலைகழிவுகளும் தெரியப் போவதில்லை.

கார்ப்பரேட்களும் அவரது ஆதரவாளர்களும் தெருவில் மலம், சிறுநீர் கழிக்கும் இடங்களைத் தூய்மை செய்து படம், வீடியோ எடுத்து விளம்பரம் செய்துகொள்கிறார்கள். கழிவறைகளைக் கட்டுவது குறித்து யாரும் யோசிப்பது இல்லை. வீடுகளில் கழிவறை கட்டச்சொல்லும் இவர்கள் பொது இடங்களில் ஏன் கழிவறைகளைக் கட்டி உரிய முறையில் பராமரிக்கச் சொல்வதில்லை. வெளியே செல்லும் போது கழிவறைகளை தூக்கிச் செல்லமுடியுமா என்ன?

பதினான்கு:

புராண-இதிகாசங்களின் வழியே நன்னெறிக்கல்வி.

இந்து மத வேதங்கள், புராணங்கள், மநு நீதிக்கதைகள், ராமயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் வழியே நன்னெறிகளைப் போதிக்க முயலவது ரொம்பவும் அபத்தம். இவை பகுத்தறிவை, மாணவர்களை மழுங்கடிப்பவை மட்டுமல்ல; பிளவு படுத்துபவையும் கூட. இதைப்பற்றி நான் முன்பு குறிப்பிட்ட கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளேன். அவற்றை இங்கு தவிர்க்கிறேன்.

பதினைந்து:

ஆதாரங்கள் இல்லாமல் எதையாவது சொல்லிச் செல்லும் போக்கு.

• அன்னை தெரசா நன்கொடை வேண்டி கையேந்தியபோது கைகளில் காறித்துப்பினர். அதைத் துடைத்துக் கொண்டு, எனக்கு அளித்தது போதும் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று கேட்டாராம்.
• முன்னாள் மேற்குவங்காள முதல்வர் ஜோதிபாசுவிடம் தேசியகவி பாரதியின் சிலை அமைக்க அனுமதி கேட்டார்களாம். தேசியகவி ரவீந்தரநாத் தாகூர் மட்டுமே, இம்மாதிரி சொல்லிக்கொண்டு இங்கு வராதீர்கள், என்று சொல்லி அவர்களை விரட்டினாராம்.
அரசியல் கட்சிகளின் நாலந்தர மேடைப் பேச்சாளிகளைப் போல இம்மாதிரி ஆதாரமில்லாத கருத்துகளை உதிர்ப்பது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? நமது சமூகத்தில் ஆதாரப்பூர்வமான கருத்துகளைவிட இவற்றிற்கு பெருமதிப்புள்ளதை அறியலாம்.

பயிற்சி அனுபவத்திலிருந்து இரு உதாரணங்கள்:

இதைப்போன்ற ஒரு பயிற்சியின் போது பாடநூலில் பல்வேறு பிழைகள் இருக்கின்றன என்று சொன்னபோது, வல்லுநர்கள், அறிஞர் குழுவால் தயாரிக்கப்பட்ட பாடநூலில் பிழைகளே சாத்தியமில்லை என்று பல ஆசிரியர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பிறிதொரு தருணத்தில் சாலைகளில் நடந்து செல்வோர் (பாதசாரிகள்) நடைமேடை இல்லாத இடங்களில் எதிரே வரும் வாகனங்களைப் பார்த்தவாறு வலப்புறமாக நடக்கவேண்டும் என்பதே விதி என்று சொன்னபோதும், இல்லை என ஆட்சேபிக்கப்பட்டது. இடப்புறமாக செல்லும் விதி, வாகன ஓட்டிகளுக்குத் தானே தவிர பாதசாரிகளுக்கு அல்ல. ஆனால் இதுபோன்ற அவதூறுக் கருத்துகள் வெளிப்படும்போது எவ்வித சலனமும் ஏற்படுவதில்லை.

இவையனைத்தும் நாம் ஆசிரியர்கள் மீது வைக்கும் பல்வேறு விமர்சனங்களுக்கு வலு சேர்ப்பதாகவே இருக்கின்றது. திராவிட, பெரியார் எதிர்ப்பு பகுத்தறிவு எதிர்ப்பாக உருக்கொள்கிறது. நாத்திகவாதமே இந்திய தத்துவமரபில் அடிப்படை என்பது நிருபிக்கப்பட்ட ஒன்று. (பார்க்க: இந்திய நாத்திகம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, வெளியீடு: பாரதி புத்தகாலயம்) போலித் தமிழ் வெறி ஆங்கிலத்தை விலக்குகிறது. தமிழ்ப்பெருமை வெறியாக மாறுகிறது. இம்மாதிரியான உணர்ச்சிகளைத் துண்டி இளைய சமுதாயத்தை அழித்துகொள்ளும் மனநிலையில் ஆழ்த்துவது துரோகச் செயலாகவே இருக்கமுடியும்.

மாணவர்களுக்கு அப்துல்கலாம் ‘ரோல் மாடலாக ‘ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு வாயாளிகள் (பிரசங்கிகள், சொற்பொழிவாளர்கள், பேச்சாளர்கள்) ‘ரோல் மாடலாக’ இருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியது. இவர்கள் எதையும் படிப்பதில்லை. சமஸ்கிருத சுலோகங்களைப் போல நான்கைந்து பாடல்களை மனப்பாடம் செய்துகொண்டு, நீட்டி முழக்கு வாய்க்கு வந்தபடி எதையும் பேசியும் பணம் பார்க்கும் இவர்களிடம் எந்த உண்மைகளும் இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் சொல்வதை அப்படியே வேதவாக்காக எடுத்துக்கொள்வது அறிவீனமாகவே போகும். சமூகப் பொறுப்புமிக்க ஆசிரியர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

இன்னொரு புறம் மொழி,கலாச்சார தேசியர்களின் பாதிப்பும் ஆசிரியர்களிடம் உள்ளது. பன்மைத்தன்மை கொண்ட நமது மாநிலம் மற்றும் நாட்டிற்கும் கலாச்சார தேசியம் தேவையற்றது, மக்களை பாசிச மயப்படுத்துவது. குறிப்பிட்ட சிலரை வெளியேற்றுவது இந்த வெறுப்பரசியல் நிலைப்பாடு. மாறாக காந்தி போன்றோர் வலியுறுத்திய அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தேசியமே நமக்குத் தேவை. இவை கடந்தகால அனுபவங்களும் வாசிப்புகளும் நமக்கு உணர்த்துபவை. இம்மாதிரியான பொய்மைகளையும் பிறர் மீதான காழ்ப்பை உமிழும் கருத்துகளையும் ஆசிரிய சமூகம் கைக்கொள்ளுமானால், அது வருங்கால சமூகத்திற்குப் பெருந்தீங்காக அமையும்.

(பயிற்சியில் கலந்துகொண்ட விரிவுரையாளர்கள், கருத்தாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது சில கருத்துகள் மட்டுமே இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. நாகரீகம் கருதி அவர்களது பெயர்கள் இங்கு தவிர்க்கப்படுகின்றன.)

கனவுலகத்தில் சஞ்சாரிப்பவர்களா ஆசிரியர்கள்? (1) – மு. சிவகுருநாதன்

No Comments →

(ஜன. 30,31 – 2017 ஆகிய இரு நாள்கள் “பாடத்துடன் நற்பண்புகளை இணைத்துக் கற்பித்தலும் கற்றலும்” (VITAL – Value Integrated Teaching And Learning) பயிற்சி 9, 10 தமிழ் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. அதன் அனுபவப் பகிர்வு இது.)

தமிழ்ச்சமூகத்தில் தமிழ், சமூக அறிவியல் பாடங்களுக்கு இருக்கும் வரவேற்பு உலகறிந்த ஒன்று. இந்நிலையில் நற்பண்புகளை இணைக்க இவ்விரண்டு பாடங்களையும் தேர்வு செய்துள்ளனர். அறிவியல் போன்ற இதர பாடங்களில் நற்பண்புகளை வளர்க்க முடியாது என்பது மூட நம்பிக்கையா, அல்லது அவற்றில் மூட நம்பிக்கைகளை இணைக்க வழியில்லையா என்பது தனியே ஆய்வுக்குட்படுத்த வேண்டிய செய்தி.

வாரத்தில் சமூக அறிவியல் பாடவேளை 5 மட்டுமே. இதில் தேசியப் பங்கு மாற்றகம் (NSE) வெளியிட்டுள்ள பொருளியல் நூலையும் கற்பிக்க வேண்டும். அரசுப்பாடநூலில் உள்ள பொருளியல் பகுதியைவிட இது சிறப்பாக இருப்பதை இங்கு குறிப்பிடுவது நலம். பாடப்பகுதிக்கு மாற்றாக இதை இணைப்பது நல்லது. ஆனால் நடக்குமா? முதல் வகுப்பு முதல் மெட்ரிக் (?!) பள்ளிகளில் அரசு மற்றும் தனியார் பாடநூற்களைக் கற்கும் சுமை இருக்கிறதே! அதை அரசு கண்டு கொண்டதா என்ன? இங்கு மட்டும் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?

நீதிபோதனை வகுப்புகள் குறித்து முன்பு எழுதிய கட்டுரை ஒன்றின் இணைப்பை இங்கு தருகிறேன். http://musivagurunathan.blogspot.in/2015/10/41-45-41-45.html
தேவைப்படின் சொடுக்கி வாசிக்கவும். பயிற்சியில் கூறப்பட்ட, ஆசிரியர்களால் பகிரப்பட்ட சில செய்திகளையும் அது தொடர்பான கருத்துகளை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

ஒன்று:

மணலும் மணல் சார்ந்த பகுதி பாலை. குறிஞ்சியும் முல்லையும் தன் இயல்பில் திரிவது பாலை, என்றுதான் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதை இவ்வாறு எளிமைப்படுத்துவது பொருத்தமாக இருக்காது. தொல்காப்பியர், திருவள்ளுவர் போன்றவர்கள் சொல்லியிருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. உலகின் வெப்ப மற்றும் குளிர் பாலைகள் உள்ளன. ரஷ்யாவில் அமுதார்யா, சிர்தார்யா ஆகிய இரு நதிகளால் உருவான ஏரல் கடல் (ஏரி) வறண்டு போயுள்ளது. அண்டார்ட்டிகாவின் பெரும்பகுதி பாலைவனமே. பாலையாதல் (Desertification) இன்றுள்ள மிக முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நாநிலங்களும் பாலையாகும் வாய்ப்புண்டு.

இரண்டு:

சுவாமி விவேகானந்தர் ஒரு நாளில் 10,000 பக்கங்கள் வாசித்தார்!
ஆதாரம்? புலவர் இரா.இளங்குமரன் சொன்னாராம்! இது சிலரால் மட்டுமே முடியக்கூடிய செயலாம்! ‘டிஸ்கவரி’ சேனலில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பினார்களாம்! அவர்கள் ஒரு பக்கத்தை பார்த்த மாத்திரமே அதை முற்றாக உள்வாங்கும் தன்மை உடையவர்களாக இருப்பர் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. எனக்கு ‘எந்திரன்’ பட சிட்டி ரோபோ தான் நினைவுக்கு வந்தது. இயந்திரத்தைக் கொண்டு ஸ்கேன் செய்யவே சில மணிநேரம் பிடிக்கும் செயலிது. கடவுள் நம்பிக்கைகளைவிட மிக மோசமானது, இம்மாதிரியான நம்பிக்கைகள். “பகுத்தறிவு’ என்று ஒன்று கிடையாது. இது தமிழர்களை ஏமாற்றிய ஒன்று”, என்றும் சொல்லப்பட்டது. இதில் பெரியார் மீதான காழ்ப்பைத் தவிர வேறில்லை.

மூன்று:

எல்லோருக்கும், எல்லா காலங்களுக்குமான ‘ரோல் மாடலாக’ அப்துல் கலாமை முன்னிறுத்தும் போக்கு.

முன்மாதிரிகளை மாணவர்கள், இளைஞர்கள் கண்டடையவேண்டும். மேலிருந்து திணிக்கப்பட முடியாது. உலகமயச் சூழலில் பெரிய நிறுவனங்களின் உயர் பொறுப்புகளுக்கு வரும் அதிக ஊதியம் பெறுபவர்கள் இவ்வாறு சொல்லப்படுவது மிக மோசமான ஒன்று. சுந்தர் பிச்சை, சந்திரசேகரன், நாதெள்ளா பொன்றவர்கள் இவ்வரிசையில் வருகின்றனர். அப்துல் கலாமிற்கு பின்பு குடியரசுத்தலைவர் பதவிக்கு ‘இன்போஸிஸ்’ நாராயணமூர்த்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது இங்குக் குறிப்பிடத்தகுந்தது. குடியரசுத்தலைவர் பதவி கார்ப்பரேட் சி.இ.ஓ. பதவி போன்றதல்ல. கார்ப்பரேட் கம்பெனி சி.இ.ஓ.க்களும் அரசியல், கருத்தியல் புரிதல் இல்லாதவர்களும் அமரும் இருக்கையல்ல அது.

நான்கு:

ஒரு தன்னம்பிக்கைக் கதையாம். நன்கு படித்த, அதிக மதிபெண் பெற்று தேர்வுகளில் வென்ற ஒரு பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி அப்துல் கலாமைச் சந்தித்து, இந்தியாவின் குடியரசுத் தலைவராவதுதான் தமது கனவு. அதற்கான விதிகள் திருத்தப்படும் வரை, 35 வயது வரும்வரை காத்திருப்பேன், என்றாராம். அதற்காக அதிக ஊதியம் தரும் வேலைவாய்ப்பையும் புறக்கணித்தாராம்!
இது என்ன கூத்து? இதில் என்ன நம்பிக்கை இருக்கிறது? மூடநம்பிக்கை என்று வேண்டுமானால் சொல்லலாம். இது போன்ற கதைகள் மாணவர்களிடம் என்ன விளைவை வெளிப்படுத்தும்? (இது குறைபாட்டிற்காக சொல்லப்படவில்லை. இதற்கு வேறு சொற்கள் தெரியவில்லை.)

அய்ந்து:

தேசியகீதம், தேசியக்கொடி போன்றவை அவமதிக்கப்படக்கூடாது. முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் தேசியக்கொடியை மடித்து, சுருட்டி அளித்தவிதத்தைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது தாங்க முடியவில்லை; நெஞ்சு வெடிப்பதைப் போல உணர்ந்தேன் என்று ஒருவர் சொன்னார்.
இது தொடர்பான பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இவற்றை மதிப்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. இருப்பினும் மதரீதியான ஒரு மிகையுணர்ச்சியைக் கற்பிக்கும் போக்கு வருத்தமளிக்கக்கூடியது.
திரையரங்கில் தேசியகீதம் இசைப்பதை நிறுத்தியது ஒரு நல்ல நடைமுறை. திரையரங்கிற்கு வருபவர்கள் பள்ளி மாணவர்களைப் போல ஒழுங்கிற்கு ஆட்பட்டவர்கள் இல்லை. மேலும் எல்லோரும் ஒன்றாக வந்து எழுந்து செல்வார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. இப்போதைய மத்திய அரசு மீண்டும் இந்த தேசிய உணர்வைக் கையில் எடுத்துள்ளது.

ஜெயலலிதா இறுதிச்சடங்கில் ராணுவ மரியாதைகளுடன் இந்திய ராணிவத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் தேசியக்கொடி அவமதிக்கப்பட்டதாக கருத இடமில்லை. அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு தேசியக்கொடியை அகற்றுவது இயல்பான நடைமுறை. இதில் அவமதிப்பு எங்கே வந்தது? இம்மாதிரியான போலிப் பக்தியையும் மிகை உணர்ச்சியையும் கட்டமைப்பது சமூகத்திற்கு நல்லதல்ல. கிரிகெட் மைதானங்களில் நடைபெறும் அவமதிப்புகளை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? ஏனிந்த இரண்டக நிலை?

ஆறு:

தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரம் மட்டுமே முதன்மையானது; உயர்வானது.
மொழிப்பெருமை, இனப்பெருமை, கலாச்சாரப் பெருமை மூலமாக நன்னெறிகளைப் போதிக்க இயலாது. மாறாக சகிப்பின்மையும் வெறுப்புணர்ச்சியும் வளரவே இது வழிவகுக்கும். ஒற்றைக் கலாச்சாரம் இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்திலும் கிடையாது. இங்கு இன்று பல்வேறு கலாச்சாரங்கள் இணைந்து மனித நேயத்தோடு வாழ்ந்து வருகின்றன. ஜல்லிக்கட்டு போன்ற ஒற்றை அடையாளம் தமிழ் கலாச்சாரம் அல்ல; இதிலிருந்து அந்நியப்பட்ட பல்வேறு பிரிவுகளும் இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு பெருமை பேசுவதும் உணர்வைகளைத் தூண்டுவதும் ஆசிரியர்களுடைய பணியாக இருக்க முடியாது.

ஏழு:

1330 திருக்குறள்களை தினமும் ஒன்றாகப் படித்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை அல்லது ஆத்திச்சூடியைப் படித்தாலே நன்னெறி உற்பத்தியாகிவிடும்.
திருக்குறள், ஆத்திச்சூடி போன்றவற்றில் நல்ல கருத்துகள் இருக்கின்றன. ஆனால் இதுவே இறுதியானது என்று வரம்பு விதிக்கக் கூடாது; முடியாது. மேலும் 1330 குறள்களும் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்றதல்ல. பரிசுகளுக்காக சிறுவர்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பதற்கு நிகரானது இது. வேத மந்திரங்களைப் போல மன்னம் செய்வதும் குறளைப் படிப்பதும் ஒன்றல்ல.

மரண தண்டனை என்றொரு குற்றம் – ஆல்பெர் காம்யு

No Comments →

பழிக்குப் பழி வாங்கும் சட்டம் பொருத்தமற்றது என்ற உண்மை ஒருபக்கம் இருக்கட்டும். திருடனிடம் அவன் திருடிய பணத்திற்குச் சமமான தொகையை அவனுடைய வங்கிக் கணக்கிலிருந்து கழித்துக் கொள்வது போதுமான தண்டனையாக இல்லாமலிருக்கலாம். அதே போன்று தீயிட்டுக் கொளுத்துபவனைத் தண்டிப்பதற்காக அவனது வீட்டைத் தீயிட்டுக் கொளுத்துவது அளவுக்கு அதிகமானதாகவே தோன்றும். கொலை செய்தவரின் மரணத்தின் மூலமே பலியானவரின் கொலை ஈடு செய்யப்பட வைத்துக் கொள்வோம், ஆனால் தலை துண்டிக்கப்படுவது வெறுமனே சாவு அல்ல. சித்தரவதை முகாம் என்பது சிறையிலிருந்து எப்படி முற்றிலும் மாறுபட்டதோ அதேபோல, சாரம்சத்தில் மரண தண்டனை என்பதும் வாழ்க்கையைப் பறிப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மரண தண்டனை என்பது நிச்சயமாக ஒரு கொலை தான். அது, செய்யப்பட்ட கொலைக்குச் செலுத்தப்பட வேண்டிய சரியான விலையாகவும் இருக்கிறது. அது சாவோடு ஒரு விதியையும் சேர்க்கிறது. அதாவது எதிர்காலத்த்தில் பலியாகப் போகிறவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய எச்சரிக்கையை, ஓர் அமைப்பை, சுருக்கமாகச் சொல்வதெனில் சாவைவிடப் பயங்கரமான அறவியல் துன்பங்களின் மூல ஊற்றாக விளங்குகின்ற ஒன்றை – அது சாவுடன் சேர்த்து விடுகிறது. ஆகவே இவை சரிசமமானவையாக இருக்க முடியாது, முற்றிலும் வன்முறை சார்ந்த ஒரு குற்றத்தைவிட திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு குற்றம் மிகவும் கொடியது என்று பல சட்டங்களும் கருதுகின்றன. முன்கூட்டியே திட்டமிட்ட கொலைகளிலேயே உச்சபட்சமானதாக விளங்கும் மரண தண்டனையுடன் ஒரு குற்றவாளியின் செயலை – அது எவ்வளவுதான் திட்டமிடப்பட்டதாக இருப்பினும் – ஒப்பிட முடியுமா? குற்றத்திற்குச் சமமான தண்டனை என்று மரண தண்டனையை நாம் நியாயப்படுத்தினால், கீழ்க்கண்ட ஒரு காட்சியை நாம் கற்பனை செய்ய வேண்டும். குறிப்பிட்ட ஒரு நாளில் நீங்கள் கொடுரமாகக் கொலை செய்யப்படுவீர்கள் என்று ஒருவரிடம் முன்பே கூறுதல், அந்த நாள்வரை அவரைக் கருணையுடன் ஒரிடத்தில் அடைத்தும் வைத்திருத்தல். இப்படிப்பட்ட ராட்சசத்தனமான, பயங்கரமான சித்திரவதையை நாம் சாதாரணமான, இயல்பான வாழ்க்கையில் எதிர்கொள்வதே இல்லை.

துன்பப்படாமல் சாவது குறித்து நமது சட்டபூர்வமான சான்றாயர்கள் பேசும்போது, அவர்கள் எதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்று அவர்களுக்கே தெரிவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களுக்குக் கற்பனை வளமும் கிடையாது. மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் மீது மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் சுமத்தப்படும் இழிவுப்படுத்தக்கூடிய, நிலைகுலையைச் செய்யக்கூடிய அச்சமானது மரணத்தைவிட மிகக் கொடுரமான ஒரு தண்டனையாகும். இது பலியானவரின் மீது சுமத்தப்படாத ஒரு தண்டனையாகும். பலியானவர், அவருக்கு இழைக்கப்பட்ட கொலை பாதக வன்முறையின் காரணமாக எழுந்த அச்சத்திலும்கூட, தனக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமலே சாவை நோக்கி விரைந்து செலுத்தப்படுகிறார். அந்தப் பேரச்சத்தின் கால அளவு அவர் உயிரோடிருக்கும் காலத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. அவரது வழ்க்கையைத் தாக்கிய அந்த அபத்த நிலையிலிருந்து தப்பிவிட முடியும் என்ற நம்பிக்கை ஒருபோதும் அவரைவிட்டு நீங்குவதேயில்லை. அதே நேரத்தில், ம்ரண தண்டனை விதிக்கப்பட்டவர் மீது பேரச்சம் திணிக்கப்படுகிறது. அவருக்கு நம்பிக்கையினூடாகச் சித்ரவதையும், மிருகத்தனமான துயரத்தினால் எழும் வேதனையும் மாறி மாறி நிகழ்கின்றன. வெறும் மனிதாபிமானத்தால் வழக்கறிஞரும் மதகுருவும், தண்டனைக் கைதி அமைதியடைய வேண்டும் என்பதற்காகச் சிறையதிகாரிகளும், அக்கைதியின் தண்டனைக் குறைக்கப்படும் என்று ஒருமனதாக உறுதியளிக்கிறார்கள். அதை முழு மனதோடு அவர் நம்புகிறார். பிறகு அவர் நம்பிக்கை

(*பிரான்ஸின் விடுதலையின்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட ரோமென் (Roemen) தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் எழு நூறு நாட்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு சிறையில் இருந்தார். இது மிகவும் அருவருப்பானதாகும். பொதுச் சட்டத்தின்கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தாங்கள் சாகப்போகும் அந்தக் காலை நேரத்திற்காக வழக்கமாக மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருக்கிறார்கள். தண்டனை நிறைவேற்றப்படுவதற்காகக் காத்திரு்க்கும் காலத்தைக் குறைக்க விரும்பினால், தப்பிப் பிழைப்பதற்கான வாய்ப்புகளைப் பேணிக்காக்க விரும்பினால் அது சிரமமானதாக இருக்கும். மேலும், பிரான்ஸில் கருணை மனுக்களின் மீதான ஆய்வு என்பது, சட்டமும் மரபும் எந்த அளவு அனுமதிக்கிறதோ அந்த அளவுக்கு மன்னிப்பது குறித்தான வெளிப்படையான விருப்பத்தை விலக்கி வைக்காத விதத்தில் ஒரு தீவிரத் தன்மையோடு மேற்கொள்ளப்படுகிறது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

**ஞாயிற்றுக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றும் நாளாக இருப்பதில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறைப் பகுதிகளில் சனிக்கிழமை என்பது எப்போதும் நல்லதொரு பொழுதாகவே இருக்கும்.)

வைக்க முடியாத நிலையை எட்டுகிறார். அவர் பகலில் நம்பிக்கையோடு இருக்கிறார். இரவில் நம்பிக்கையிழந்து விடுகிறார்.வாரங்கள் செல்லச் செல்ல நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும் அதிகரிக்கின்றன. அவை தாங்கிக் கொள்ள முடியாதவையாகவும் மாறுகின்றன. அனைத்து விவரணைகளின்படி, தோலின் நிறம் மாறுகிறது. அச்சம் ஒரு அமிலத்தைப்போல் வேலை செய்கிறது.’ நீங்கள் சாகப் போகிறீர்கள் என்பதை அறிந்திருப்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை’, என்று பிரஸ்நே (Fresnes)வைச் சேர்ந்த மரண தண்டனையைப் பற்றி கார்தூஸ் (Cartouche) சொன்னார்: ‘ஏன்? ஒருசில நிமிடங்கள் மட்டும்தானே அதனை அனுபவிக்க வேண்டியிருக்கும்?’ ஆனால் அது நிமிடங்களில் முடிவதல்ல, பல மாதங்கள் நீடிக்கக்கூடியது. நீண்ட காலத்திற்கு முன்னதாகவே மரண தண்டனை விதிக்கப்பட்ட மனிதருக்கு தான் கொல்லப்படப் போகிறோம் என்பது தெரியும். மரண தண்டனையைக் குறைப்பது மட்டும்தான் அவரைக் காப்பாற்றக் கூடிய ஒரே விசயம். அவரைப் பொறுத்தவரையில் அது சொர்க்கத்திலிருந்து வரும் கட்டளையைப் போன்றது. எந்த விதத்திலும் அவரால் அதில் தலையிட முடியாது. எல்லாமே அவரைச் சார்ந்திராமல் நடக்கின்றன. இனியும் அவர் ஒரு மனிதராக இல்லை. மாறாக, மரண தண்டனை நிறைவேற்றுபவர்களால் கையாளப்படக் காத்திருக்கும் ஒரு பொருளாக இருக்கிறார். ஒரு ஜடப் பொருளைப் போல் அவர் வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் இன்னும் உணர்வோடு இருக்கிறார் அது தான் அவரது முக்கிய எதிரி.

நன்றி: மரண தண்டனை என்றொரு குற்றம் என்ற நூலிலிருந்து..

வெளியீடு: பரிசல்.

வீரப்பன் வழக்கில் 4 பேர் உட்பட 15 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு: வழக்கு விவரங்கள் – கோ.சுகுமாரன்

No Comments →

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவ கிரிதி சிங் ஆகியோர் இன்று (21.01.2014) வீரப்பன் வழக்கில் சைமன், பிளவேந்திரன், ஞானப்பிரகாசம், மீசைக்கார மாதையன் உள்ளிட்ட இந்திய அளவில் 9 வழக்குகளில் பல்வேறு சிறைகளில் வாடும் 15 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் மாநில ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் வழங்கப்பட்ட கருணை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படுவதற்கு ஏற்பட்ட காலதாமதத்தைக் கணக்கில் கொண்டு 15 பேரின் மரண தண்டனைகள் ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

இத்தீர்ப்பு 154 பக்கங்கள் கொண்டவை. மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட 15 பேரின் வழக்கு விவரம், அவர்களது நிலைமை, சிறையில் இருந்த காலம், மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்த காலம் ஆகியவை குறித்துக் காண்போம்.

1) 1993ம் ஆண்டு தமிழக – கர்நாடக மாநில எல்லையில் பாலாறு அருகில் நடந்த வெடிகுண்டு வெடித்து போலீசார் உடப்ட 22 பேர் கொல்லப்பட்டனர். இவ்வழக்கு உள்ளிட்ட நான்கு வழக்குகளில் தடா சட்டத்தின்கீழ் 12 பெண்கள் உட்பட 124 பேர் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் சென்ற 2001ல் 109 பேரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. மேலும், சைமன், பிளவேந்திரன், ஞானப்பிரகாசம், மீசைக்கார மாதையன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்து (Sou moto proceedings) மேற்சொன்ன நான்கு தமிழர்களுக்கும் 29.01.2004ல் தூக்குத் தண்டனை விதித்தது. இந்நால்வரும் 14.07.1993 முதல் இன்று வரையில் 20 ஆண்டுகள் 6 மாதங்களாக கர்நாடக சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். 9 ஆண்டுகள் 11 மாதங்களாக தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர். குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை 9 ஆண்டுகள் கழித்துக் காலதாமதமமாக நிராகரித்துள்ளார்.

2) உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் (60), ராம்ஜி (45) ஆகியோர் சொத்துத் தகறாரில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 2 பெரியவர்கள், 3 குழந்தைகள் உட்பட 5 பேரை கொலை செய்த வழக்கில் இருவருக்கும் 1997ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நன்னடத்தை சான்று அளித்தும் மாநில ஆளுநரிடம் அளிக்கப்பட்ட கருணை மனுக்கள் இவ்வழக்கு ஆவணங்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் இருந்ததால் விசாரணை நீதிமன்ற தீர்ப்பு நகல் தாக்கல் செய்யப்படாதால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 06.10.1996 முதல் இன்று வரையில் 17 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறையில் உள்ளனர். 16 ஆண்டுகள் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர். இவர்களது கருணை மனுக்கள் 11 ஆண்டுகள் கழித்துக் காலதாமதமாக குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

3) கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன் குமார் (55) ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பேரைக் கொலை செய்த குற்றத்திற்காக 2002ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் இன்று வரையில் 15 ஆண்டுகள் 11 மாதங்கள் சிறையில் உள்ளார். இவர் 14 ஆண்டுகள் 10 மாதங்களாக தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி உள்ளார். இவரது கருணை மனு எட்டரை ஆண்டுகள் கழித்துக் காலதாமதமாக குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

4) உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த குருமீத் சிங் (56) தன் குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரைக் கொலை செய்த குற்றத்திற்காக 1992ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் விசாரணைக் கைதியாக இருந்த போது ஒரு ஆண்டு பிணையில் வெளியே இருந்த காலம் போக 16.10.1986 முதல் இன்று வரையில் 26 ஆண்டுகள் 3 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 21 ஆண்டுகள் 5 மாதங்களாக தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி உள்ளார். குடியரசுத் தலைவர் இவரது கருணை மனுவை 6 ஆண்டுகள் 11 மாதங்கள் கழித்துக் காலதாமதமமாக நிராகரித்தார். இந்த செய்தி இவருக்கு மூன்றரை ஆண்டுகள் கழித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் பரிந்துரை செய்தும், அப்போதைய உள்துறை அமைச்சர் எற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5) அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சோனியா (30), அவரது கணவர் சஞ்சீவ் குமார் (38) ஆகியோர் சொத்துத் தகராறு காரணமாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட தன் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரைக் கொலை செய்த வழக்கில் 2002ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் 12 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 6 ஆண்டுகள் 5 மாதங்கள் கழித்து தாக்கல் செய்த கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் 5 ஆண்டுகள் 10 மாதங்கள் கழித்துக் காலதாமதமாக நிராகரித்துள்ளார். இதில் சோனியா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

6) உத்தரகாண்டைச் சேர்ந்த சுந்தர் சிங் (40) மனநிலைப் பாதிக்கப்பட்டு தனது மனைவி மற்றும் 5 குழந்தைகளையும் கொன்ற வழக்கில் 2004ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் தனக்கு மனநிலைப் பாதிக்கப்பட்டதால் இக்கொலைகளை செய்ததாக கூறியதை யாரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இவரை பரிசோதித்த டேராடூன் மருத்துவமனையைச் சேர்ந்த மூன்று மனநல மருத்துவ நிபுணர்கள் இவருக்கு வகைப்படுத்த முடியாத மனச்சிதைவு நோய் (Undifferentiated Schizophrenia) உள்ளது எனவும், தொடர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமெனவும் சான்று அளித்துள்ளனர். மேலும், இவர் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற மன ரீதியில் தகுதியற்றவர் எனவும் சான்று அளித்துள்ளனர். தற்போதைய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் இவருக்குச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இவரது கருணை மனு இரண்டரை ஆண்டுகள் கழித்துக் காலதாமதமாக குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. மனநிலைப் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதும், இந்திலிருந்து மீள நடந்த சட்டப் போராட்டமும் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்குக் குறித்துப் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

7) உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஜாபர் அலி (48) தனது மனைவி மற்றும் 5 மகள்களைக் கொன்ற குற்றத்திற்காக 2003ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர் 27.07.2002 முதல் இன்று வரையில் 11 ஆண்டுகள் 6 மாதங்கள் தனிமைச் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். இவரது கருணை மனு குடியரசுத் தலைவாரால் 7 ஆண்டுகள் 5 மாதங்கள் கழித்துக் காலதாமதமாக நிராகரிக்கப்பட்டது. இவரது கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது 3 மாதங்கள் கழித்தே இவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8) மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவரான மங்கள்லால் பரேலா (40) தனது 5 மகள்களையும் கொலை செய்த குற்றத்திற்காக 2011ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மனநிலை சரியில்லாதவர் என போபால் மனநல மருத்துவமனை நிபுணர் சான்று அளித்துள்ளார். தனக்கு மனநிலை சரியில்லை என்று கூறி அனுப்பிய கருணை மனு ஒரு ஆண்டுக் காலம் கழித்துக் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவரது கருணை மனு நிராகரிக்கப்பட்ட செய்தி சிறை அதிகாரிகளால் வாய்மொழியாக கூறப்பட்டுள்ளது. அதற்கான எழுத்துமூலம் ஆணை எதுவும் அளிக்கப்படவில்லை.. இவரது மனநிலையைக் கணக்கில் கொண்டு உச்சநீதிமன்றம் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.

9) கர்நாடகாவைச் சேர்ந்த சிவா (31), ஜடேசாமி (25) ஆகியோர் 18 வயதுடைய பெண்ணைப் பாலியல் வன்புணர்வுச் செய்த குற்றத்திற்காக 2005ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களது கருணை மனுக்கள் 13.08.2013 அன்று குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு, பெல்காம் சிறையில் 22.08.2013 அன்று காலை 6 மணிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது சிறை விதிகளுக்கு முரணானது. அதாவது கருணை மனு நிராகரிக்கப்பட்டு 14 நாட்கள் கழித்துத்தான் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது சிறை விதி. இவர் 15.10.2001 முதல் இன்று வரையில் 12 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 8 ஆண்டுகள் 5 மாதங்கள் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருந்துள்ளார். இவரது கருணை மனு 6 ஆண்டுகள் கழித்துக் காலதாமதமாக குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சிறைகளில் மனித உயிர்கள் பலியாகி புள்ளி விவரங்களாக கிடப்பது தடுக்கப்படுவது எந்நாளோ? – கோ.சுகுமாரன்

No Comments →

2009ம் ஆண்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் மரணமடைந்த சரவணன் என்பவருக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனை சென்ற டிசம்பர் 18 அன்று இறந்துப் போன சரவணனின் மனைவி ஆரியமாலாவிற்கு ரூ. இரண்டரை லட்சம், அவரது தாயார் நீலவேணிக்கு ரூ.50 ஆயிரம் என அத்தொகைக்கான காசோலைகளை சிறைத்துறை அதிகாரி வழங்கியுள்ளார். காலங்கடந்து வழங்கப்பட்ட நிவாரணமாக இருந்தாலும், வினோத் (15), வித்யா (12), விக்னேஷ் (8) ஆகிய மூன்று குழந்தைகளோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஆரியமாலாவிற்கு இந்நிவாரணத் தொகைப் பெரும் ஆறுதலானது. இன்னமும் இதற்குப் பொறுப்பான காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தனிக்கதை.

திண்டிவனத்தைச் சேர்ந்த பழங்குடி குறவர் வகுப்பைச் சேர்ந்த சரவணன் புதுச்சேரியில் தங்கியிருந்துக் கொத்தனார் வேலைப் பார்த்து வந்துள்ளார். இவர் மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்றுமில்லை. இவர் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பார் என்று கருதி 24.06.2009 அன்று காலையில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். போலீஸ் காவலில் அவரைக் கடும் சித்தரவைதைக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும், அவர் மீது ஒதிஞ்சாலை மற்றும் காலாப்பட்டு காவல்நிலையங்களில் சந்தேக வழக்குகள் போட்டு அன்றைய தினம் மாலையே நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கடும் சித்தரவதைக்கு ஆளான சரவணனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைச் சிறைத்துறை அதிகாரிகள் கவனித்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உரிய சிகிச்சை அளிக்காமல் சிறைக்குள் அனுமதித்ததால், மறுநாள் 25.06.2009 அன்று சரவணன் சிறைக்குள் இறந்துப் போகிறார்.

தகவலறிந்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது அவரது காது, மூக்கு ஆகியவற்றில் ரத்தம் கசிந்திருந்துள்ளது. தலையில் காயம்பட்டு ரத்தம் வழிந்திருந்துள்ளது. மேலும், இரண்டு கால்களிலும் அடிப்பட்டு கட்டுப் போடப்பட்டிருந்துள்ளது. இடது பல்லும் உடைந்திருந்துள்ளது.

சரவணன் போலீசாரின் சித்தரவதையால்தான் இறந்தார் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மை. குறவர்கள்  என்றாலே திருடர்கள் என்ற போலீசாரின் பார்வை ஒரு அப்பாவி இளைஞனின் உயிரைப் பறித்ததுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஆரியமாலா தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பிய புகாரின் அடிப்படையிலேயே மேற்சொன்ன இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் காலங்கடந்து வழங்கிய நிவாரணம் என்றாலும், இது நன்றியோடு வரவேற்கப்பட்ட வேண்டிய ஒன்று.

இந்நிலையில், அகில இந்திய அளவில் சிறைக்குள் நிகழ்ந்த சாவுகள் குறித்து சில தகவல்கள் கிடைத்தன. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள தகவல்களின்படி 2008-2009ம் ஆண்டில் 1527 பேர் இந்திய சிறைகளில் இறந்துப் போயுள்ளனர். இதில் 60 பேர் பெண்கள்.

மாநில வாரியாக பார்த்தால் உத்தரபிரதேசத்தில் 287, பிகாரில் 133, ஆந்திராவில் 131, மகாராஷ்டிராவில் 124, மேற்கு வங்கத்தில் 98, மத்தியபிரதேசத்தில் 86, குஜராத்தில் 74, பஞ்சாப் 70, கர்நாடகாவில் 72, தமிழ்நாடு 69 ஆகும். மேகாலயா, நாகாலந்து தலா 3, கோவா, புதுச்சேரி தலா 2, அருணாசல பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் தலா 1 என சிறை மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த சிறை மரணங்களில் 90 சதவீதம் இயற்கையானவை. மற்றவை தற்கொலைகள், சிறைவாசிகளால் கொலை, வெளியாட்களால் கொலை, தீ விபத்திலும், சிறை அதிகாரிகளின் அலட்சியத்தாலும் மரணம் என பல்வேறு காரணங்களால் நடத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்திய அளவில் பல்வேறு சிறைகளில் 2007-2008ல் மட்டும் மொத்தம் 1787 பேர் இறந்துள்ளனர். இதில் ஆண்கள் 1735, பெண்கள் 52 பேர். 2006-2007ல் மட்டும் மொத்தம் 1477 பேர் இறந்துள்ளனர். இதில் ஆண்கள் 1443, பெண்கள் 34 பேர். இவை சிறைவாசிகளுக்குப் போதிய பாதுகாப்பற்ற நிலை இருப்பதைப் பறைசாற்றுகின்றன.

2009ல் இந்தியாவில் உள்ள 1200 சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தேசிய குற்றப் பதிவேடு அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 1276 சிறைச்சாலைகள் உள்ளன. இதில் மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 304 பேர் மட்டுமே அடைத்து வைக்க முடிகிற அளவுக்கு இடமுள்ளது. ஆனால், மொத்தம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 396 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அதாவது இருக்க வேண்டிய அளவை விட 99 ஆயிரத்து 92 கைதிகள் கூடுதலாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தேசிய குற்றப் பதிவேடு அலுவலக தகவல்கள் கூறுகின்றன.

இந்த தகவல்கள் சரவணன் இறந்துப் போன 2009 ஆண்டிற்கான புள்ளி விவரங்கள். இனி 2012 ஆண்டிற்கான விவரங்களைக் காண்போம்.

2012ல் தேசிய குற்றப் பதிவேடு அலுவலக தகவல்கள்படி இந்தியாவில் மொத்தம் 1571 சிறை மரணங்கள் நடத்துள்ளன. இதில் 1516 ஆண்கள், 55 பெண்கள். இதில் ஆண்களில் இயற்கை மரணம் 1345 பேர். தற்கொலை 87, மரண தண்டனை நிறைவேற்றம் 1, சிறைவாசிகளாலேயே கொலை 4, தீ விபத்து 10, கவனக்குறைவு மற்றும் அத்துமீறல் 2, பிற 22 ஆகும். பெண்களில் இயற்கை மரணம் 47, தற்கொலைகள் 5, வெளியாட்களால் கொலை 3 ஆகும். இதில் இயற்கை மரணம் கூடுதலாக இருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. அதாவது ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்படுவதில் தேவையற்ற காலதாமதம், ஆயுள் கைதிகள் 60 வயதைத் தண்டியவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரை செயல்படுத்தப்படாமை, போதிய மருத்துவ வசதி இல்லாமைப் போன்றவைதான் இதற்குக் காரணம்.

இதில் இயற்கை மரணம் என்பதில் எத்தனை தற்கொலைகள், கொலைகள் மறைந்துள்ளன என்பது குறித்து விசாரித்தால் தான் தெரியும். பல மரணங்கள் இயற்கையானதாகவே பதிப்பட்டு வருகின்றன.

சிறைகளில் போதிய மருத்துவ வசதி இல்லாமைக்கு அண்மைக் கால எடுத்துக்காட்டாக தென்தமிழன் படும் துயரத்தைக் கூறலாம். 1987ல் அரியலூர் மருதையாற்றில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று திருச்சி சிறையில் உள்ளார். இவரை முன்விடுதலை செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் விடுதலை செய்யப்படவில்லை. நீதிபதி கே.சந்துரு வழங்கிய இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இன்று அவர் மனநிலை முழுதும் பாதிக்கப்பட்டு, திருச்சி அரசுப் பொது மருத்துவமனையில் சுயநினைவின்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். தமிழக அரசு அவரை விடுதலை செய்ய வேண்டுமென பலரும் குரல் கொடுத்த பின்னரும் அவர் விடுதலை செய்யப்படவில்லை.

சிறைகளில் அளவுக்கு அதிகமாக கைதிகளை அடைத்து வைப்பதும் பெரும் பிரச்சனையாகவே உள்ளது. 2012 ஆண்டுக் கணக்குப்படி இந்திய சிறைகளில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 169 பேர் மட்டுமே அடைத்து வைக்குமளவுக்கு இடவசதி உள்ளது. ஆனால், 3 லட்சத்து 85 ஆயிரத்து 135 சிறைவாசிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் கவலைப்படவில்லை.

கைதிகளின் உரிமைகள் பற்றி சுனில் பத்ரா வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த போது வி.ஆர்.கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோல், பல்வேறு தீர்ப்புகள் வந்தாலும் சிறைச்சாலைகள் மேம்படுத்தப்படவில்லை. சிறைச் சீர்திருத்தம் குறித்து ஓய்வுப்பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்ட பல்வேறு ஆணையங்களின் பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சிறைவாசிகளின் உரிமைகள் பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

சிறைகளில் பணிபுரியும் காவலர்கள் பல்வேறு இன்னல்களுடனேயே பணியாற்றி வருவது கவலையை அதிகப்படுத்துகிறது. இதுகுறித்து மத்திய அரசும், மாநில அரசுகளும் போதிய கவனம் செலுத்த வேண்டும். .

வானுயர்ந்து நிற்கும் மதிற் சுவருக்குள் நடக்கும் எவையும் நம் கண்ணில் படாமல் போகலாம். ஆனால், அங்கே தினம் தினம் மனிதர்கள் வதைப் பட்டுக் கொண்டும், மரணத்தை எதிர்நோக்கியும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவைகள் கவனிக்கப்படாமல் போவதன் காரணம் குற்றவாளிகள் பற்றிய நமது சமூகத்தின் மதிப்பீடே. அந்த மதிப்பீடு மாறாமல் சிறைகள் மேம்படப் போவதில்லை.

சிறைவாசிகள் குறித்து பேரறிஞர் அண்ணா “இளைஞனாக உள்ளே சென்று, வயோதிகனான பிறகே, சிறையினின்றும் வெளியே வந்தவர்கள் எத்தனை பேர்! திடகாத்திரராகச் சிறை சென்று, கண்மங்கி, கைகால் இளைத்து நடை தளர்ந்து, நரையுடன் வெளிவந்தவர்கள் எத்தனை பேர்! குடும்பத்திலே ஒரு மணிவிளக்காக இருந்துவிட்டுச் சிறையினின்று வெளிவந்தபோது குடும்பத்தவரிலே ஒருவருமில்லையே என்ற கதறும் நிலை பெற்றவர் எவ்வளவு?, பூங்காவை விட்டுப் போய்ச் சிறையிலே வாடி, வெளியே வந்து பாலைவனத்தைக் கண்டு பரிதவித்தவர் எவ்வளவு! சீமானாக இருந்து சிறை சென்று, வெளிவந்தபோது, செப்புக் காசுமின்றி, சென்று தங்க இடமுமின்றி, நாடோடியானவர்கள் எவ்வளவு! கருகிப் போன தங்கம்! கசங்கிய மலர்கள்! வறண்டு போன வயல்கள்! சரிந்த சபா மண்டபங்கள்! மண்மேடான மாளிகைகள்! நரம்பொடிந்த வீணை! நதியற்ற நகரம்! எனத்தக்க நிலை பெற்ற நற்குண நாகங்கள் நம் வணக்கத்துக்கு உரியரன்றோ! வாழ்க அவர் நாமம்!” என்று கூறியுள்ளதைக் இங்குக் குறிப்பிடுவது பொருத்தம்.

சிறைகளில் மனித உயிர்கள் பலியாகி புள்ளி விவரங்களாக கிடப்பது தடுக்கப்படுவது எந்நாளோ?