மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் – இரங்கல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 10.10.2009 அன்று விடுத்துள்ள இரங்கல் செய்தி:

இந்திய அளவில் புகழ்பெற்ற மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் மறைவுக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் பிறந்தவர் டாக்டர். கே.பாலகோபால். கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்று, வாரங்கலில் உள்ள கக்காடியா பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் பேராசிரியராக பணியாற்றிவர். தன் வேலையை உதறித் தள்ளிவிட்டு முழு நேர மனித உரிமைப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

கடந்த 8-ந் தேதியன்று இரவு, நெஞ்சு வலி காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் முன்னதாகவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

‘ஆந்திர பிரதேச சிவில் உரிமைக் குழு’ பொதுச்செயலாளாராக இருந்து நக்சலைட்களுக்கு எதிரான அரச வன்முறையை எதிர்த்துப் போராடியவர். காவல் மரணங்கள், போலி மோதல், மரண தண்டனை ஒழிப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி செயல்பட்டவர்.

வன்முறை எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததால் நக்சலைட் அமைப்போடு கருத்து மாறுபாடு கொண்டு, தனியே ‘மனித உரிமை அமைப்பு’ நிறுவி செயல்பட்டவர்.

போலி மோதல் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வாதாடி, போலி மோதல் நடந்தால் இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்கீழ் போலீசார் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பெற்றுத் தந்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர்.

இடதுசாரி சிந்தனையுடைய தலைச் சிறந்த எழுத்தாளர். அவரது எழுத்தில் வெளிப்படும் நேர்மையும், கறாரான பார்வையும் அறிவுத் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று.

1992 முதல் அவரோடு நான் நெருக்கமான உறவுக் கொண்டவன். 1996-இல் போலீசாரின் அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் அந்திராவின் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த நான்கு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, போலி மோதல் குறித்து ஆய்வு மேற்கொண்டது மறக்க முடியாதது.

1998-இல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்த போது, அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர். அவரது ஆலோசனைப்படி புதுச்சேரியில் அகில இந்திய அளவிலான இரண்டு நாள் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

2008-இல் ஒரிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கிறித்துவர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்த உண்மை அறியும் குழுவில் இடம்பெற்று அவரோடு பணியாற்றினேன். அதுதான் நான் அவரை கடைசியாக பார்த்தது. தன் இறுதிக் காலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களினால் பழங்குடியின மக்களின் நிலங்கள் பறிபோவதை எதிர்த்துப் போராடியுள்ளார்.

அவரது மறைவுக்கு ஆந்திராவிலுள்ள காங்கிரஸ் முதல் மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட் கட்சி வரை அனைத்துக் கட்சி, அமைப்புத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அமைப்பினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*