புதுச்சேரியில் முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.01.2018) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்படும் 2 சதவீத இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் 2010ம் ஆண்டு முதல் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அப்போது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முஸ்லிம்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென அரசுக்குப் பரிந்துரை அளித்தது, ஆனால், அப்போதய அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையப் பரிந்துரையை ஏற்று முஸ்லிம்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கவில்லை.

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டுமென எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அதன் தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் தலைமையில் சென்ற 14.11.2017 அன்று மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து மனு அளித்தனர். முதல்வர் நாராயணசாமியும் முஸ்லிம் இடஒதுக்கீட்டை உயர்த்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிக் கூறியுள்ளார். ஆனால், புதுச்சேரி அரசு இதற்கான எவ்வித முயற்சியும் செய்யவில்லை.

முஸ்லிம்களின் நிலைக் குறித்து விசாரித்த நீதிபதி ராஜேந்தர் சச்சார் ஆணையம் தனது அறிக்கையில் இந்தியாவில் முஸ்லிம்கள் எந்தளவுக்குப் பிந்தங்கி உள்ளனர் என்பதை எடுத்துக் கூறியுள்ளது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் சிறுபான்மையினருக்கு மொத்தம் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும், அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமெனவும் மத்திய அரசுக்குப் பரிந்துரை அளித்துள்ளது.

புதுச்சேரியில் அரசுக் கணக்குப்படி மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 6.05 சதவீதம் உள்ளனர். இதன்படி பார்த்தாலும் முஸ்லிம்களுக்கு தற்போதும் வழங்கப்படும் இடஒதுக்கீடு குறைவானதாகும். எனவே, புதுச்சேரி அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்தி அரசாணைப் பிறப்பிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*