காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.11.2019) விடுத்துள்ள அறிக்கை:

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி காவலில் இறந்த விசாரணைச் சிறைவாசி ஜெயமூர்த்தியின் மனைவிக்கு 1 லட்சம் ரூபாய் உடனே வழங்க வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகரைச் சேர்ந்த செல்வகுமார் மகன் ஜெயமூர்த்தி (வயது 22) பாகூர் காவல் நிலையப் போலீசார், காலாப்பட்டு மத்திய சிறைத்துறையினர் அடித்துத் துன்புறுத்தியதால் கடந்த 27.11.2018 அன்று இறந்துப் போனார்.

இது குறித்து அப்போதைய பாகூர் காவல் நிலைய எஸ்.ஐ. ஜெயகுருநாதன், உதவி எஸ்.ஐ. திருமால், காலாப்பட்டு மத்திய சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவ அதிகாரி டாக்டர் வெங்கட ரமண நாயக் ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், இவ்வழக்கில் காவலர் புகார் ஆணையம் உத்தரவின்படி எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு, வழக்கு விசாரணை பி.சி.ஆர். பிரிவுக்கு மாற்றப்பட்டது, தற்போது வழக்கு விசாரணையை பி.சி.ஆர். பிரிவு எஸ்.பி. மேற்கொண்டு வருகிறார்.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவ அதிகாரி டாக்டர் வெங்கட ரமண நாயக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதன் மீது விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அவர்கள் கடந்த 17.09.2019 அன்று முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், இவ்வழக்கில் விசாரணை அதிகாரி விசாரணையையே தொடங்காததாலும், குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யாததாலும் இறந்துப் போன ஜெயமூர்த்தியின் மனைவி கெளசல்யாவிற்கு 1 லட்சம் ரூபாய் 14.10.2019 அன்றைக்குள் புதுச்சேரி அரசு வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இத்தொகையை விசாரணையைத் தொடங்காமல் காலதாமதம் செய்த அதிகாரியிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதன் பின்னரே, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எஸ்.ஐ. ஜெயகுருநாதன், உதவி எஸ்.ஐ. திருமால், சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் சரணடைந்து காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை மருத்துவ அதிகாரி டாக்டர் வெங்கட ரமண நாயக் தலைமறைவாக உள்ளார்.

கடந்த 25.10.2019 அன்று துணைநிலை ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், டி.ஜி.பி. ஆகியோருக்கு உயர்நீதிமன்ற உத்தரவு நகலை சமர்பித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 1 லட்சம் ரூபாய் உடனே வழங்க வேண்டுமென மனு அனுப்பி உள்ளோம். ஆனால், புதுச்சேரி அரசு இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உடனடியாக 1 லட்சம் ரூபாய் வழங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.