காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 30.11.2019 சனியன்று, காலை 10 மணியளவில், புதுச்சேரி செகா கலைக் கூடத்தில் கட்சி, சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.

கூட்டத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீரமோகன், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்புத் தலைவர் சீ.சு.சாமிநாதன், இலக்கிய பொழில் இலக்கிய மன்றத் தலைவர் பெ.பராங்குசம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அமைப்பாளர் சி.ஶ்ரீதர், சோசலிஸ்ட் யூனிடி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) – (SUCI) மாநிலக்குழு உறுப்பினர் சி.சிவக்குமார், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பரகத்துல்லா, தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகத் தலைவர் தூ.சடகோபன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், புதுச்சேரி நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கப் பொருளாளர் சதீஷ் (எ) இரவீந்திரன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், தமிழ்த் தேசிய பேரியக்கச் செயலாளர் இரா.வேல்சாமி, ஐந்தாவது தூண் (Fifth Pillar) தலைவர் கோ.சக்திவேல், ஒருங்கிணைப்பாளர் முகமது அமீன், இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின், கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கத் தலைவர் இரா.இராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

1) புதுச்சேரி, நெட்டபாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விபல்குமார் காவல்துறை உயர் அதிகாரிகளின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டார். தற்போது இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகள் மீதே குற்றச்சாட்டு உள்ளதால் இவ்வழக்கைப் புதுச்சேரி போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, காவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி புதுச்சேரி அரசு உத்தரவிட வேண்டும்.

2) நெட்டப்பாக்கத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவுச் செய்ய கூடாது, நாள்தோறும் ரூ.10 ஆயிரம் கப்பம் கட்ட வேண்டும் என நெட்டப்பாக்கம் காவல் ஆய்வாளர் கலைச்செல்வம் விபல்குமாருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளார். இதனால் தான் விபல்குமார் தற்கொலை செய்து கொண்டார் என அவரது தந்தையார் போலீஸ் உயர் அதிகாரிகளுக்குப் புகார் அளித்துள்ளார். இதன்மீது இதுவரையில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் தற்கொலைக்குக் காரணமான காவல் ஆய்வாளர் கலைச்செல்வத்தை பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். எனவே, காவல் ஆய்வாளர் கலைச்செல்வம் மீது தற்கொலைக்குத் துண்டியதாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

3) குற்றமிழைத்த காவல் ஆய்வாளர் கலைச்செல்வம் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதனால், ஆய்வாளர் கலைச்செல்வம், அவரது தம்பி காவல் உதவி ஆய்வாளர் கலையரசன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டி வருகின்றனர். இதுகுறித்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அரசுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளனர். எனவே, குற்றமிழைத்த காவல் ஆய்வாளர் கலைச்செல்வனை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

4) நெட்டப்பாகத்தில் பாலியல் கொடுமைக்கு ஆளான பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெற்று வழக்குப் பதிவு செய்து குற்றமிழைத்தவர்கள் அனைவரையும் உடனே கைது செய்து சிறையில் அடைக்க அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5) மேற்சொன்ன கோரிக்கைகள் அடங்கிய மனுவினை துணைநிலை ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், காவல்துறைத் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) உள்ளிட்டோருக்கு அனுப்புவதும் எனவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் கட்சி, சமூக இயக்கங்கள் சார்பில் தொடர் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.