மேட்டுப்பாளையத்தில் 17 தலித்துகள் சுவர் இடிந்து இறப்பு: இடைக்கால அறிக்கை!

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 தலித் மக்கள் இறந்த கொடுமைக் குறித்து அதற்குக் காரணமானவர்களின் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பபட வேண்டும் என நாங்கள் இரண்டு நாள் முன்னர் கோவையில் பத்திரிகையாளர் சந்திப்பில் அளித்த இடைக்கால அறிக்கை இங்கே:

(இது முழுமையான அறிக்கை அல்ல. விரிவான அறிக்கை வெளியிடப்படும்)

தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (National Confederation of Human Rights Organisation – NCHRO) (அரசு சாராத அமைப்பு)

கோயம்புத்தூர்.
டிசம்பர் 14, 2019

சென்ற டிசம்பர் 02 அன்று அதிகாலை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்த அவலம் குறித்து நேற்று முழுவதும் எமது அமைப்பினர் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர். பேரா. அ,மார்க்ஸ், கோ.சுகுமாரன், வழக்குரைஞர் எம்.ரகமத்துல்லா, வழக்குரைஞர் ஜமீல்ஷா, மருத்துவர் குணசேகரன், கோவை எஸ்.கே நவ்ஃபல், முகமது ரஃபி ஆகியோர் இக்குழுவில் பங்குபெற்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள், அப்பகுதி மக்கள், விபத்து நடந்த அன்று கோரிக்கைகள் வைத்து ஆர்ப்பாட்டம் செய்த மருத்துவமனையில் அப்போது இருந்த மருத்துவர்கள், கைது செய்யப்பட்டுப் பிணையில் வெளிவந்துள்ளவர்கள் ஆகியோரை இவர்கள் சந்தித்தனர். மாலையில் மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி அவர்களையும் சந்தித்து விரிவாக உடனடிக் கோரிக்கைகளை முன்வைத்தனர். அது குறித்த இடைக்காலக் குறிப்பு இது.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொறுமையாக எங்கள் கோரிக்கைகளைக் கேட்டதோடு அவற்றில் அவர் ஏற்றுக்கொண்டு உடனடியாகச் செயல்படுத்துவதாக உறுதி அளித்தவை இங்கே:

1. உரிய அனுமதி பெறாமலும், தாங்கும் அளவிற்கான பொருத்தமான அடித்தளம் இல்லாமலும், அருகில் உள்ள ஏழை எளிய தலித் மக்களின் அச்சம் மற்றும் வேண்டுகோள்களைப் புறக்கணித்துக் கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து இன்று 17 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதற்குக் காரணமான தொழிலதிபர் சிவசுப்பிரமணியம் மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு முன்னதாக 304 (ஏ) (Causing death by negligence) பிரிவின் கீழ் பதியப்பட்டது. தற்போது அச்சட்டப் பிரிவு நீக்கப்பட்டு 304(2) (Culpable homicide). இது உடனடியாக மாற்றப்பட்டு மீண்டும் 304 (ஏ)க்கு மாற்றப்பட வேண்டும். தவிரவும் பாதிக்கப்பட்ட அனைவரும் தலித்கள். இவ்வழக்கு எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் [SC and ST (Prevention of Atrocities) Act Sections 3(y), 3(z)] பதியப்பட வேண்டும். எங்கள் கோரிக்கை கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்படும் என ஆட்சியர் உறுதி அளித்தார்.

2. தற்போது இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு இலட்சம் ரூபாய் உடனடியாக ஆட்சியர் அவர்களின் முயற்சியில் வழங்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பலர் இளம் வயதினர், மிகவும் எளிய மக்கள். இவ்வாறான இறப்புகளில் இழப்பீடுகள் அளிப்பது குறித்து இப்போது உச்சநீதிமன்றம் மிக விரிவான வழிகாட்டல்களை அளித்துள்ளது. அந்த வகையில் எமது அமைப்பினர் தலையிட்டு அறிக்கை அளித்த “நெல்லிக்குப்பம் சுப்பிரமணியம் த/பெ ஏகாம்பரம்’ என்பவரின் காவல்நிலையச் சாவு ஒன்றில் அவரின் குடும்பத்திற்கு 35 லட்சம் ரூபாய் இழப்பீடு வட்டியுடன் கொடுக்க உத்தரவாகியுள்ளது (W.P. No. 9267 of 2017 Dt 04-09-2019). 17 பேர் மரணமடைவதற்குக் காரணமான இன்றைய இந்த விபத்து நடக்கும் வாய்ப்பு குறித்துப் பலமுறை உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி சுமார் 22 அடி உயரத்திற்கு காம்பவுண்ட் சுவர் எழுப்பிய வீட்டுக்காரரிடமும் பலமுறை முறையிடப்பட்டுள்ளது. எனினும் அரசும் வீட்டுக்காரரும் அதைக் கண்டு கொள்ளாததன் விளைவே இந்தக் கொடும் விபத்து. இந்நிலையில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு மிகக் குறைவானது. எனவே வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்றப் பரிந்துரைகளின்படி இழப்பீடு கணக்கிடப்பட்டு இறந்த ஒவ்வொருவருக்கும் 30 லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் இழப்பீடு அளிக்க வேண்டும். எங்களின் இந்தக் கோரிக்கை குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் எனவும் உரிய சட்டங்கள் முதலியவற்றைப் பரிசீலித்து முடிவெடுக்கப் பரிந்துரைப்பதாகவும் ஆட்சியர் கூறினார்.

3. இடிந்து வீழ்ந்த மூன்று வீடுகளூம் புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை உறுதியாக நிறைவேற்றுவதாக ஆட்சியர் வாக்குறுதி அளித்தார். இந்த வீடுகளும் அங்குள்ள இதர தலித் குடியிருப்புகளும் மீண்டும் ஆபத்திற்குள்ளாகும் நிலையில் அந்த உயரமான காம்பவுண்ட் சுவர் முழுமையாக இடிக்கப்பட வேண்டும் என்பது ஒன்று. மற்றது தற்போது அந்தத் தலித் குடியிருப்பு முழுவதும் பள்ளத்தில் உள்ளதால் காம்பவுண்ட் சுவர் நீக்கப்பட்டாலும் மழைக்காலத்தில் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து உள்ளது. எனவே அந்தத் தலித் குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளும் எவ்வகையிலும் பாதிக்கப்படாத அளவிற்குப் பாதுகாப்பானதாக உரிய முறையில் அரசு கட்டித்தர வேண்டும். அப்படிக் கட்டித்தரப்படும் வீடுகள் தொலைவில் அமைந்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சென்னையில் இதைக் கண்கூடாகக் காணலாம். எனவே மாற்றி அமைக்கப்படும் இந்தக் குடியிருப்பு அங்கேயே அமைவது அவசியம். எங்கள் பரிந்துரையைக் கவனமாகப் பரிசீலிப்பதாக ஆட்சியர் வாக்குறுதி அளித்தார்.

4. விபத்து நடந்த அன்று மருத்துவமனையில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து நின்ற மக்களில் 40 பேர் அன்று கைது செய்யப்பட்டு, அதில் 25 பேர் ‘ரிமாண்ட்’ செய்யப்பட்டனர். அவர்களில் 24 பேர் தற்போது பிணையில் கைதாகி வெளியில் வந்து கையொப்பமிட்டுக் கொண்டுள்ளனர். நாகை திருவள்ளுவன் மட்டும் இன்று சிறையில் உள்ளார். அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார் எனும் செய்தி இன்று பரவியுள்ளது. குழந்தைகள் உட்பட 17 தலித் மக்கள் இறந்த ஒரு உணர்ச்சிகரமான சூழலில் நியாயம் வேண்டி நின்ற ஒரு இயக்கத் தலைவரை குண்டர் சட்டத்தில் அடைப்பது எனும் நிலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதோடு மற்றவர்கள் மீதான நிபந்தனைகளும் நீக்கப்பட்டு வழக்குகளும் கைவிடப்பட வேண்டும். இதுகுறித்து, நாகை திருவள்ளுவன் மீது உறுதியாக குண்டர் சட்டம் பிரயோகிக்கப்படாது எனவும் உரிய சட்டவிதிகளின்படி அவர் உடனடியாக விடுதலை செய்யப்படுவார் எனவும் ஆட்சியர் வாக்குறுதி அளித்தார்.

5. தற்போது விபத்து நடந்த மேட்டுப்பாளையம் பகுதியில் வேறு சில கட்டிடங்களும் பாதிக்கப்பட உள்ளதையும், முன்கூட்டியே அதைத் தடுக்க உரிய முறையில் குடியிருப்பவர்களைப் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டோம். அப்படியான கட்டிடங்கள் குறித்த விவரங்களைத் தந்தால் உடன் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறினார். எமது வழக்குரைஞர்கள் அவ்வாறான பட்டியல் ஒன்றைத் தர உள்ளனர்.

இச்சந்திப்பின்போது உடனடியான கோரிக்கைகளை மட்டுமே நாங்கள் முன்வைத்தோம். விரிவான எங்கள் அறிக்கை அடுத்த வாரம் சென்னையில் வெளியிடப்படும். பொறுமையாக எங்கள் கோரிக்கைகளைச் செவிமடுத்துச் சாதமான பதில்களை அளித்த ஆட்சியருக்கு நன்றிகள்.

தொடர்பு எண்கள்: 96292 29728; 89032 81824

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.