போலீசாரால் பெண் பாலியல் வன்புணர்வு: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.03.2020) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் தனியார் தங்கும் விடுதியில் பெண் ஒருவர் போலீசாரால் பாலியல் வன்புணர்வுச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த இரண்டு ஜோடியினரிடம் பெரியக்கடை காவல்நிலையத்தைச் சேர்ந்த இரண்டு போலீசார் மிரட்டிப் பணம் பறித்ததோடு, அதில் ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்வுச் செய்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி குற்றமிழைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென துணைநிலை ஆளுநருக்கு வாட்சாப் மூலம் வேண்டுகோள் விடுத்து பத்திரிகையில் வந்த செய்தியையும் அனுப்பி வைத்தோம்.

இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ் உயரதிகாரிகள் சதீஷ், சுரேஷ்குமார் ஆகிய இரண்டு போலீசாரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். ஆனால், போலீஸ் உயரதிகாரிகள் பாலியல் வன்புணர்வுச் சம்பவத்தை மூடிமறைத்து குற்றமிழைத்த போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யாமல் அவர்களைக் காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் வன்புணர்வுச் சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது எனக்கூறி மிரட்டியுள்ளனர். தங்கும் விடுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் அழித்துள்ளனர். இதனால், இச்சம்பவம் குறித்து புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது.

எனவே, இச்சம்பவம் குறித்து புதுச்சேரி அரசு உடனடியாக உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்ப உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.