புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை: சமூக அமைப்புகள் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என சமூக அமைப்புகள் குற்றச்சாட்டுக் கூறியுள்ளன.

இதுகுறித்து சமூக அமைப்புகள் சார்பில் இன்று (29.03.2020) கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதைச் சமூக அமைப்புகளின் சார்பில் புதுச்சேரி அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம். நகரங்களில் மட்டுமே சில பணிகள் நடக்கின்றன. கிராமப்புறங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன.

இந்நிலையில், புதுச்சேரி அரசுக்குக் கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:

1) புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப் பரப்பினைப் பேரிடர் பாதித்தப் பகுதியாக உடனே அறிவிக்க வேண்டும்.

2) தேவையானப் பேரிடர் மேலாண்மை நிதியினைப் போர்க்கால அடிப்படையில் மத்திய அரசிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3) புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனைகள் (GH), சமுதாய நலவழி மையங்கள் (CHC), ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC) என அனைத்திலும் உயிர் காக்கும் மருந்துகளை உடனே வழங்கிட வேண்டும்.

4) பேரிடர் மேலாண்மைக் குழுக்களை நகரங்கள், கிராமங்கள் தோறும் அமைத்திட வேண்டும், சுகாதாரக் குழு, உணவுப் பொருட்கள் வழங்கும் குழு, கண்காணிப்புக் குழு போன்ற குழுக்களை உள்ளூர் மட்டத்தில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5) அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள், படுக்கை வசதி, மருத்துவக் கருவிகள் போதிய அளவில் இல்லாத சூழலில் அரசு கொரோனா பாதிப்பை எப்படி தடுக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அரசு உடனடியாக மேற்சொன்ன அடிப்படை கட்டமைப்புப் பணிகளில் கவனம் செலுத்திட வேண்டும்.

6) தற்போழுது தெளிக்கப்படும் கிரிமி நாசினி மருந்துக்கள் போதுமானதாக இல்லை என்பதால், அரசு மாநிலம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் கிரிமி நாசனி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7) உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8) நடுவண் அரசு வறுமையில் உள்ளவர்களுக்கு ரூ.1000 நிவாரணம், அரசி, கோதுமை என பலவற்றை அறிவித்த நிலையில், புதுச்சேரி அரசு ரூ. 2000 நிவாரணம் அறிவித்திருப்பது என்பது போதுமானதாக இருக்காது. எனவே, அரசு உடனடியாக குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 10,000 அறிவிக்க வேண்டும். அதனைக் காலதாமதம் செய்யாமல் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9) முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு ரூ. 1000 நிவாரணம் அறிவித்துள்ளது. இதில் புதுச்சேரி அரசு 10 சதவீதம் மட்டுமே நிதி அளிக்க வேண்டியுள்ளது. எனவே, மேற்சொன்ன நிவாரணத் தொகையினை ஏப்ரல் முதல் வாரத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10) புதுச்சேரி அரசு கோரோனா தடுப்பு நடவடிக்கைகள் கால வரிசைப்படி என்ன என்ன செய்யப் போகிறது என்பதை விளக்கி எல்லா அம்சங்களும் உள்ளடக்கிய அறிக்கை
(Comprehensive Report) ஒன்றை உடனடியாக வெளியிட வேண்டும்.

11) கோரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தேவையான நிதியினை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்காக துணைநிலை ஆளுநரும், முதல்வரும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவண்,

1)கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.

2) லோகு.அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

3) கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

4) கோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.

5) ஆ.பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.

தொடர்புக்கு:

கோ.அ.ஜெகன்நாதன்: 9566822751

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.