தாகூர் கவிதைச் சிதைப்பு: அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பிரான்சு தலைநகர் பாரிசில் நடைபெற்ற விழாவில், புதுச்சேரி அரசு, கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் “A Glimpse of Our Own Pondicherry“ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதில், தாகூர் எழுதிய “Where the Mind is Without Fear“ என்ற தலைப்பிலான கவிதையைத் திருத்தி, சிதைத்து வெளியிடப்பட்டிருந்தது.

இது குறித்து, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 23-10-2006 அன்று புதுச்சேரியில் வெளியிட்ட அறிக்கை:

கவிஞர் ரவீந்தரநாத் தாகூரின் கவிதையைத் திருத்தி, சிதைத்து வெளியிட்ட புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டுத் துறைச் செயலர் பி.வி.செல்வராஜ் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

நோபல் பரிசு பெற்ற தாகூரின் “கீதாஞ்சலி“ தொகுப்பிலுள்ள கவிதையைத் திருத்தி, சிதைத்து, “புதுச்சேரி பற்றித் தாகூர்“ எனத் தலைப்பிட்டு, அவருடைய புகைப்படத்துடன் அவரே எழுதியது போல், ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் புதுச்சேரி அரசு சார்பில் வெளியிட்டிருப்பது வரலாற்று மோசடி.

எந்தவொரு படைப்பையும் தழுவி எழுதும்போது, படைப்பாளியின் பெயரைக் குறிப்பிட்டு, “தழுவி எழுதியது“ எனக் குறிப்பிடுவது காலம் காலமாக இருந்து வரும் மரபு. ஆனால், ஒரு படைப்பைத் திருத்தி, சிதைத்து வெளியிடுவது என்பது சட்டப்படி குற்றம்.

உலக அளவில் புகழ்பெற்ற தாகூர், மேற்குவங்க மக்களின் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்பவர். அவரது படைப்பைச் சிதைத்திருப்பது ஒட்டுமொத்த மெற்குவங்க மக்களையும் அவமதித்தது போன்றதாகும். மேலும், இச்செயல் புதைக்கப்பட்ட தாகூரின் உடலைத் தோண்டி எடுத்து சிதைப்பதற்குச் சமமானது.

தாகூர் எழுதிய இசைப்பாடல்கள் அனைத்தையும் “ரவீந்தர சங்கீத்“ என்ற பெயரில் அவரே இசையமைத்து வைத்துள்ளார். இன்றும் அவரது பாடல்கள் மேற்குவங்க மக்களால் ராகம் மாறாமல் பாடப்பட்டு வருகின்றன. 90-களில் அவரது பாடல்களின் ராகத்தை மாற்றி இசையமைத்துப் பாடிய இசைக் குழு ஒன்றின்மீது, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. படைப்பாளிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இப்போக்கை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மேற்குவங்க முதல்வர் புத்தாதேவ் பட்டாச்சாரியா, புதுச்சேரி முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கோரியுள்ளதுபோல், தவறிழைத்த அதிகாரி பி.வி.செல்வராஜ் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புத்தாதேவ் கோரிக்கையின் பின்னால் அரசியல் இருப்பதாக சிலர் அறிக்கை வெளியிட்டிருப்பது தவறு. புத்தாதேவ் அரசியல்வாதி என்பதைத் தாண்டி அவர் மிகச் சிறந்த இலக்கியவாதி. உலகப் புகழ்பெற்ற ஜெர்மன் நாவலாசிரியர் காப்காவின் நாடகங்களை வங்காள மொழியில் மொழிபெயர்த்தவர். உலகம் போற்றக்கூடிய நாடகங்கள் பலவற்றை மொழிபெயர்த்து அரங்கேற்றியவர். ஒரு இலக்கியவாதிக்குத்தான் இலக்கியப் படுகொலையின் தீவிரம் புரியும்.

தவறு செய்த அதிகாரியைக் காப்பாற்றும் நோக்கத்தோடு சிலர், தமிழர் – வங்காளி எனப் பிரச்சினயைத் திசை திருப்புவது கண்டனத்திற்குரியது.

ஒரு அரசு அதிகாரி செய்த தவறு புதுச்சேரி அரசுக்கு மிகப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் விடுவாரானால், இதுவரையில் அவர் கட்டிக் காத்துவரும் நற்பெயருக்கு உலக அரங்கில் களங்கம் ஏற்படும்.

இதுபற்றி, குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்டவர்களுக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.