புதுச்சேரி வணிக அவையின் சொத்துக்களை மாற்றம் செய்யக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரியில் பிரெஞ்சு டிகிரியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வணிக அவைக்குச் சொந்தமான சொத்துக்களை உள்ளது உள்ளபடியே (Status Quo) வைத்திருக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தாக்கல் செய்த மனுமீது தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பி. ஜோதிமணி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் 16-ஆம் நாளன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :

புதுச்சேரியிலுள்ள வணிக அவை கடந்த 1849-இல் உருவாக்கப்பட்டது. இதற்கு 1914 மார்ச் 7-இல் சட்டப்படியான அந்தஸ்து வழங்கப்பட்டது. மேலும், வணிகர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு கடந்த 1934 ஜுலை 6-இல் பிரெஞ்சு குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு பிரெஞ்சு டிகிரி உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் செயல்பட்டு வந்தது.

மேற்சொன்ன பிரெஞ்சு டிகிரியில் வணிக அவைக்கு யார் யார் உறுப்பினராகலாம். தேர்தல் நடத்துவது, தேர்தல் நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல் இறுதி செய்வது, பிரச்சினைகள் ஏற்படும்போது தீர்ப்பது குறித்து வரையறை செய்யப்பட்டுள்ளது.

வணிக அவை உருவாக்கப்பட்டபின் அதற்கென சுப்பையா சாலையில் 12 குடோன்கள் வாங்கப்பட்டன. சுய்ப்ரேன் வீதியில் அலுவலகத்திற்கென ஒரு கட்டடம் வாங்கப்பட்டது. இந்த சொத்துக்கள் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான பணத்திலிருந்து வாங்கப்பட்டன. இந்த சொத்துக்கள் அனைத்தும் புதுச்சேரி அரசுக்குச் சொந்தமானவை.

கடந்த 17-07-1966-இல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வணிக அவையின் உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் 1968 டிசம்பர் 3-இல் அரசிதழில் வெளியிடப்பட்டது. தேர்தல் புதுச்சேரி மேயர் தலைமையில் நடந்தது. இதுதான் வணிக அவையில் நடந்த கடைசி தேர்தல். இத்தேர்தலின்படி தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 1975 வரை அதாவது 6 ஆண்டு காலத்திற்குப் பதவியில் இருந்தனர். அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தற்போது வழக்கின் வாதிகளான நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் ஆகியோரும் எஸ்.பாக்கியம் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னரும் மேற்சொன்ன நா. கோவிந்தசாமி, அ. பாலசுப்பிரமணியன் ஆகியோர் தொடர்ந்து உறுப்பினர்களாக நீடித்தனர். மேலும், தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் வணிக அவைக்குச் சொந்தமான சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்த முற்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்தபின்னரும் இதுவரையில் வணிக அவைக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. மேற்சொன்ன நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வணிக அவையின் சொத்துக்களை வாடகைக்கு விடுதல், வாடகை வசூலித்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர்.

இந்திய அரசியல் சட்டம் பிரிவு 294, 295-படி வணிக அவைக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் புதுச்சேரி அரசுக்குச் சொந்தமானவை. அப்போதைய வருவாய்த் துறையால் `பதாந்த்’ என்ற வரி வசூல் மூலம் கிடைத்த தொகையில் இருந்து இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டன. மேலும், வணிக அவைக்கு தேர்தல் நடத்தும் கடமை புதுச்சேரி அரசினுடையது. ஆனால், இவ்வழக்கின் வாதிகளான தலைமைச் செயலர், உள்ளாட்சித் துறை செயலர், புதுச்சேரி நகராட்சி மேயர் ஆகியோர் தேர்தல் நடத்த தவறியதலால் வணிக அவையின் சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதோடு பல்வேறு ஊழலுக்கு வழி வகுத்துள்ளது.

இதன் உச்சகட்டமாக பிரெஞ்சு டிகிரியின்படி உருவாக்கப்பட்ட வணிக அவையை மேற்சொன்ன நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஒரு சங்கமாக புதுச்சேரி சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், சங்கங்களின் பதிவுச் சட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனர். பிரெஞ்சு டிகிரியின்படி உருவாக்கப்பட்ட வணிக அவையின் சொத்துக்கள் அனைத்தையும் இச்சங்கத்தின் சொத்துக்களாக மாற்றியுள்ளனர். மேலும், நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்களைச் சங்கங்களின் பதிவுச் சட்டப்படி பதியப்பட்ட வணிக அவையின் ஆயுள்கால உறுப்பினராக அறிவித்துக் கொண்டனர். இவர்களின் இந்த நடவடிக்கை மாபெரும் பகல்கொள்ளையாகும்.

இதுகுறித்து கடந்த 21-10-2005 அன்று புதுச்சேரி அரசுக்கு, வணிக அவையில் ஊழல், முறைகேடுகள் செய்த நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி மனு அனுப்பி இருந்தேன். ஆனால், இதுநாள்வரை அம்மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த நீதிமன்றத்தில் உரிய நிவாரணம் வேண்டி இம்மனுவை தாக்கல் செய்துள்ளேன்.

எனவே, இந்த நீதிமன்றம் கீழ்காணும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுகிறேன்.

1. சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், சங்கங்களின் பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ள வணிக அவையின் செயல்பாடுகளுக்கு இவ்வழக்கு முடியும் வரையில் இடைக்கால தடை விதித்து உத்திரவிட வேண்டும்.

2. புதுச்சேரி அரசின் தலைமைச் செயலர், உள்ளாட்சித் துறை செயலர், புதுச்சேரி நகராட்சி மேயர் ஆகியோர் வணிக அவையின் நிர்வாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர உத்தரவிடவேண்டும்.

3. பிரெஞ்சு டிகிரியின்படி உருவாக்கப்பட்ட வணிக அவைக்கு தகுதியானவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து புதுச்சேரி நகராட்சி மேயர் உறுப்பினர் பட்டியல் தயார் செய்ய உத்தரவிட வேண்டும்.

4. இவ்வாறு இறுதி செய்யப்பட்ட உறுப்பினர் பட்டியல் அடிப்படையில் பிரெஞ்சு டிகிரியின்படி உருவாக்கப்பட்ட வணிக அவைக்குத் தேர்தல் நடத்த தலைமைச் செயலருக்கு உத்திரவிட வேண்டும்.

5. சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், சங்கங்களின் பதிவுச் சட்டப்படி பதிவு, செய்யப்பட்ட வணிக அவையின் சான்றிதழை செல்லாது என அறிவித்து உத்திரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு மீது கடந்த 27-07-2007 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் கீழ்க்காணும் உத்திரவைப் பிறப்பித்துள்ளது.

வாதிகளான நா.கோவிந்தசாமி, அ.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், அதற்கு இருவரும் வரும் 16-08-2007 அன்று விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே தீர்வு காணப்படும்.

இந்த இடைப்பட்ட காலத்தில், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரையில் வணிக அவையின் சொத்துக்களை உள்ளது உள்ளபடியே வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.கீதா, அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் கே.சசிதரன் ஆஜரானார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.