அரசுக் கல்லூரியில் சிறைச்சாலை அமைப்பதைக் கைவிட வேண்டும்!

புதுச்சேரிலுள்ள சமூக அமைப்புகள் சார்பில் இன்று (28.04.2020) கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி கதிர்காமம் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடத்தில் சிறைக் கைதிகளை தற்காலிகமாக மாற்றும் சிறைச்சாலை திட்டத்தைப் புதுச்சேரி அரசும் மாவட்ட நிர்வாகமும் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

நாடு தழுவிய அளவில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.

புதுச்சேரியிலும் ஊரடங்குச் சட்டம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அனைத்துப் பிரிவு மக்களையும் முடக்கி வைத்துள்ளது.

புதுச்சேரி அரசு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தொற்றுநோய்க்கு என தனிப் பிரிவை உருவாக்கிச் சிகிச்சை அளித்து வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி அரசு அலுவலகக் கட்டிடங்கள் பல இடங்களில் பயன்பாடு இல்லாத நிலையில் அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படும் நிலையில் உள்ள கட்டிடங்களைத் தற்காலிகச் சிறைச்சாலைக்குப் பயன்படுத்தாமல் கதிர்காமம் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டிடத்தைத் தற்காலிகச் சிறைச்சாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கதிர்காமம் அதை ஒட்டியுள்ள பகுதிகள் மிகவும் மக்கள் தொகை அடர்த்தியான பகுதியாகும். இப்பகுதியில் தற்காலிகச் சிறைச் சாலை அமைக்கப்பட்டால் அப்பகுதி மிகவும் பதற்றமான பகுதியாக மாறும்.

மேலும், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியை தற்காலிகச் சிறைச்சாலையாக மாற்றுவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே, புதுச்சேரி அரசும் முதல்வர் நாராயணசாமியும் மாவட்ட நிர்வாகமும் அரசுப் பள்ளி கல்லூரி கட்டிடத்தைச் சிறைச் சாலையாக மாற்றும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கையினை வலியுறுத்தி சமூக அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்.

இவண்,

கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.

லோகு. அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

பெ.சந்திரசேகரன், தலைவர், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

கோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.

கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம்.

ஆ. பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.

பெ.பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்.

தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.

பெ.இரகுபதி, தலைவர், புதுச்சேரி பூர்வகுடி பாதுகாப்பு இயக்கம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.