புதுச்சேரியில் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்டதைத் திரும்ப பெற வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.05.2020) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லாத நிலை உருவாகாத போது அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்டதைத் திரும்பப் பெற வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ள போதிலும், முற்றிலுமாக இல்லாத நிலை உருவாகவில்லை. மேலும், கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்தவர்கள் மூலம் கொரோனா பரவுவதால், அவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனைச் செய்துகொள்ள வேண்டுமெனவும் அரசு அறிவித்துள்ளது.

சென்னை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளது. அங்கிருந்து புதுச்சேரிக்கு வருபவர்களை முற்றிலும் தடுக்க முடியாத நிலையே உள்ளது.

இந்நிலையில், ஊரடங்கைத் தளர்த்தி அனைத்து கடைகளையும் திறக்கலாம் என அரசு உத்தரவிட்டதால் நேற்றைய தினம் மக்கள் லட்சக்கணக்கில் கடை வீதிகளில் குவிந்தனர். சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், கிரிமி நாசினியால் கைகளைத் தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட அரசு விதித்த எந்தக் கட்டுப்பாடுகளையும் மக்களும் வணிகர்களும் பின்பற்றவில்லை. கடைகளில் கிரிமி நாசனி வைத்தல் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால், கொரோனா தொற்று பரவி இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

புதுச்சேரியில் போதிய அளவில் கொரோனா பரிசோதனைச் செய்யப்படவில்லை என்றும், மொத்தம் 14 லட்சம் பேரில் 13 லட்சம் பேருக்குப் பரிசோதனைச் செய்யப்பட்டதாக அரசு கூறுவது தவறு எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

நேற்றைய தினம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் அமைச்சர்களும் அதிகாரிகளும் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்டதை ரத்து செய்யுங்கள் என்று வலியுறுத்தி உள்ளனர். ஆனால், இதனை முதல்வர் நாராயணசாமி ஏற்கவில்லை.

மத்திய அரசு மே 17 வரை ஊரடங்கைக் கடைபிடிக்க உத்தரவிட்ட நிலையில் அவசரம் அவசரமாக அரசு இம்முடிவை எடுத்தது தவறானது. வணிகர்களின் நலனைவிட பொதுமக்களின் உயிர் முக்கியம் என்பதை அரசு உணரத் தவறியுள்ளது. இந்நிலைத் தொடர்ந்தால் கொரோனா தொற்று தீவிரமாகுமே தவிர குறையாது.

எனவே, புதுச்சேரி அரசு அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்டதை உடனே திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.