புதுச்சேரியில் மதுபானங்களுக்கு 30% கலால் வரியை உயர்த்த வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (09.05.2020) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியின் நிதி நிலையை சரி செய்திட மதுபானங்களுக்கு கலால் வரி ஆயத்தீர்வையை உயர்த்த வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளும் 100க்கும் மேற்பட்ட சாராயக் கடைகளும் 75க்கும் மேற்பட்ட கள்ளுக் கடைகளும் உள்ளன.

மேற்கண்ட மதுபானக் கடைகளில் பிராந்தி, பீர், விஸ்கி, ஜின், ரம், ஒயின் மற்றும் ஓட்கா உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்ட மது வகைகள் விற்பனைச் செய்யப்படுகின்றன.

இதில் பெரும்பாலான மது வகைகள் வெளி மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டு இந்திய கலால் சட்டப்படியும், அதன்கீழ் இயற்றப்பட்ட விதிகளின்படியும், 1970ஆம் ஆண்டு புதுச்சேரி கலால் சட்டப்படியும் விற்பனைச் செய்யப்படுகின்றன.

புதுச்சேரியில் மது வருவாய் நிதி மேலாண்மையில் சுமார் 20 விழுக்காடு பங்கு வகிப்பதால், பிற மாநிலங்களைக் காட்டிலும், புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைவாக உள்ளது.

இதன் காரணமாகவே புதுச்சேரி மாநிலத்திற்கு அண்டை மாநில சுற்றுலா மற்றும் மதுப் பிரியர்கள் மது வாங்க குவிந்து வருகின்றனர். உள்ளூரிலும் வயது வரம்பு மற்றும் கட்டுப்பாடின்றி தனிநபர்களுக்கு மது உச்சவரம்பின்றி விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. மது விற்பனையால் கிடைக்கும் வருமானம், புதுச்சேரி பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக ஆட்சியாளர்கள் நிதிநிலை அறிக்கையில் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

புதுச்சேரிக்கு வருவாயை ஈட்டித் தரும் முக்கிய துறையாக கலால்துறை உள்ளது. கடந்த 45 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவினால் புதுச்சேரியில் மிகப் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், வணிகம் மற்றும் சேவை நிறுவனங்கள், விவசாயம், கட்டுமானம், மீன்பிடி, சுற்றுலா, போக்குவரத்து வரி மற்றும் முத்திரைத்தாள் வரி, உள்ளிட்ட அனைத்து வருவாய் வரிகளும் முழுமையாக சரிந்து விட்டன.

புதுச்சேரியின் சொந்த மற்றும் தற்சார்பு பொருளாதாரம் என்பது அதல பாதாளத்தில் போய்விட்டது. இதில் கண்ணுக்குத் தெரிந்து சரி செய்யக்கூடிய வரி வருவாய் என்றால் அது கலால் வரி மட்டுமே ஆகும். கலால் வரி மூலமாக ஆண்டிற்கு சுமார் 900 கோடி ரூபாய் வருவாய் அரசு ஈட்டுகிறது.

கலால் வரியை புதுச்சேரி அரசு உயர்த்துவதன் மூலம் அரசின் வருவாய் கணிசமாக உயரும்.
இதன் மூலம் மதுபானங்களின் விற்பனை விலையை கணிசமாக உயர்த்துவதன் மூலம் நிதி நெருக்கடியில் இருந்து தற்காலிகமாக விடுபட முடியும்.

மேலும், மதுபானங்கள் அத்தியாவசிய உணவுப் பொருள் பட்டியலில் இல்லை. மதுவால் சமூகத்திற்குத் தீங்கு என்பதாலும், புதுச்சேரியில் மதுவிலக்கு முழுமையாக தளர்த்தப்பட்டதாலும், மதுபானங்கள் மீது சுமார் 30 விழுக்காடு கலால் வரியை உயர்த்த வேண்டுமென அரசுக்கு சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.

இவண்,

கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.

லோகு.அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

பெ.சந்திரசேகரன், தலைவர், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

கோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.

சி. ஸ்ரீதர், அமைப்பாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம்.

பெ.பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்.

தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.

பெ.இரகுபதி, புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

ஆ.பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.