தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி கொடுப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

புதுச்சேரியிலுள்ள சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (11.05.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:

புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி கொடுப்பதை அரசு தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதிய கல்விக் கொள்கையின் காரணமாக புதுச்சேரியில் புற்றீசல் போல் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் கிராமங்கள் மற்றும் நகரங்களில் இயங்கி வருகின்றன.

மேற்கண்ட தனியார் பள்ளிகளில் பிரிகேஜி, எல்கேஜி, யூகேஜி முதல் ஆரம்ப நிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை வரையிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உரிய வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாதம்தோறும் பெற்றோர்கள் செலுத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு மற்றும் 144 தடைச் சட்டம் நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வேலை இல்லாமல் வருமானமின்றி கடன்பட்டு வாழ்ந்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகையச் சூழலில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்திட வேண்டும் என வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக புகார்கள் வந்துள்ளன.

வேலை மற்றும் வருமானம் இல்லாமல் பட்டினியில் வாழும் பெற்றோர்களிடம் சிறிதும் மனிதநேயம் இல்லாமல் கல்விக் கட்டணத்தைக் கேட்டு தனியார் பள்ளிகள் மன உளைச்சல் ஏற்படுத்தி வருவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

பெற்றோர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணத்தைப் புதுச்சேரி அரசு முற்றிலுமாக நீக்கி உத்தரவுப் பிறப்பிக்க வேண்டும்.

மேலும், தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நீக்க இயலாத நிலை ஏற்பட்டால், கல்விக் கட்டணத்தைப் புதுச்சேரி அரசே செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் அரசை வலியுறுத்துகிறோம்.

இவண்,

கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.

லோகு.அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

பெ.சந்திரசேகரன், தலைவர், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

கோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.

சி. ஸ்ரீதர், அமைப்பாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம்.

பெ.பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்.

தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.

பெ.இரகுபதி, புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

ஆ.பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.