நில அபகரிப்பு வழக்கில் சிக்கியுள்ள மகளிர் ஆணையத் தலைவியைப் பதவி நீக்க வேண்டும்!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (14.05.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:

புதுச்சேரி மகளிர் ஆணையத்தின் தலைவி ராணி ராஜன் பாபு மீது நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால், அவரை உடனே பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி மகளிர் ஆணையத்தில் பெண்களுக்கு ஏற்படும் குடும்பப் பிரச்சனை, உளவியல் பிரச்சனை, சட்ட ரீதியான பிரச்சனை, வரதட்சணை, சொத்து, பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகள் மற்றும் தீர்வுகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்தன.

தற்போது மகளிர் ஆணையத்தின் தலைவியான ராணி ராஜன் பாபு மீது கருவடிக்குப்பம் பகுதியிலுள்ள பாரதி பாடிய குயில் தோப்பினைப் போலி ஆவணம் தயாரித்து அபகரித்தாக சிபிசிஐடி காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகளிருக்கான பிரச்சனைகளைத் தீர்த்துவைத்து பெண்களுக்கு வழிகாட்டக் கூடிய மகளிர் ஆணையத்தின் தலைவி என்பவர் குற்றச்சாட்டுகளுக்கும், வழக்குகளுக்கும் அப்பாற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

மேலும், மகளிர் ஆணையத்தில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் பொதுநல அமைப்புகள் தகவல் கோரினால் தவறான தகவல்களைச் சட்டத்திற்குப் புறம்பாக காலம் தாழ்த்தி பொய்யாக அளித்துவரும் குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது.

இதேபோல், மகளிர் ஆணையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இவர் மீது அடுக்கடுக்கான புகார்களையும் குற்றச்சாட்டுகளையும் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள ராணி ராஜன் பாபு தலைவியாக உள்ளதால் மகளிர் ஆணையம் சீர்கெடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இவர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பது மகளிர் ஆணையத்தின் மாண்புகள் காக்கப்படுவதுடன் பெண் சமூக மேம்பாட்டிற்கும் நல்ல தீர்வாக அமையும்.

இதுதொடர்பாக, ராணி ராஜன் பாபு மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுத் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், சமூகநலத்துறை அமைச்சர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குனர், தேசிய மகளிர் ஆணையம் ஆகியோருக்குப் புகார் அனுப்பி உள்ளோம். ஆனால், இதுவரையில் நடவடிக்கை இல்லை.

எனவே, வழக்கு மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள ராணி ராஜன் பாபு மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அவரை உடனடியாக ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

இல்லையேல், சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடத்துவோம் என அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.

லோகு.அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

பெ.சந்திரசேகரன், தலைவர், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

கோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.

சி. ஸ்ரீதர், அமைப்பாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம்.

பெ.பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்.

தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.

பெ.இரகுபதி, புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

ஆ.பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.