மாநில அரசுகள் ஒப்பந்தக்காரர்களைப் போல செயல்படுகின்றன – பி.சாய்நாத்

ஆங்கிலத்தில் : பார்த் எம்.என்.

தமிழில் : பீட்டர் துரைராஜ்

வறுமை, கிராமப்புற மக்களின் இடப்பெயர்வு குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர் பி.சாய்நாத்.’ராமன் மகசேசே விருது’ பெற்றவர். First Post என்ற இணைய இதழில் இவருடைய நேர்காணல் 13.5.2020 அன்று வெளி வந்துள்ளது. இதில் பார்த் எம்.என்.(Parth MN) என்ற மும்பையைச் சார்ந்த பத்திரிகையாளர் எழுப்பும் கேள்விகளுக்கு சாய்நாத் பதில் அளித்து உள்ளார். தற்போதைய கொரோனா காலத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள், தொழிலாளர் சட்டத் திருத்தம் குறித்து இதில் பேசப்படுகின்றன. இதனைச் சுருக்கமாக மொழிபெயர்த்தவர் பீட்டர் துரைராஜ்.

மத்திய பிரதேசம் ஔரங்காபாத்தில் 16 தொழிலாளர்கள் தண்டவாளத்தில் இரயில் ஏறி கொல்லப்பட்டுள்ளனர். இதைப் பற்றி ?

சாய்நாத்: எத்தனை ஆங்கில இதழ்கள் அப்படி இறந்து போனவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளன? அவர்கள் முகமில்லாதவர்கள்; பெயரில்லாதவர்கள். இப்படித்தான் ஏழைகள் பற்றி நமது மனோபாவம் உள்ளது. இதுவே விமான விபத்தாக இருந்திருந்தால் உதவி மையம் அமைத்திருப்பார்கள். 300 பேர் இறந்திருந்தாலும் அவர்களுடைய பெயர்கள் செய்தித்தாட்களில் வந்திருக்கும். ஆனால் இறந்தபோன 16 பெரும் மத்திய பிரதேசத்தைச் சார்ந்த ஏழை மக்கள். அதில் ஆறு பேர் ஆதிவாசிகள். அந்த தண்டவாளங்களைத் தொடர்ந்து சென்று தங்கள் வீடு செல்ல விரும்பியவர்கள்.

இந்தியாவில் அதிக அளவில் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு அரசாங்கம் என்ன சொல்ல வேண்டும் ?

130 கோடி பேர் உள்ள நாட்டில், 4 மணிநேரம் கொடுத்து அவர்கள் வாழ்வை முடக்கினோம். அவர்களது அரசாங்கங்கள், ஆலை முதலாளிகள், நம்மைப் போன்ற மத்திய வகுப்பினர் என அனைவரும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லை. அக்கறையற்றவர்கள், கொடுமையானவர்களாக உள்ளோம். இதை அவர்கள் அறிவார்கள். ஒவ்வொரு மணி நேரமும் இதை நாம் நிரூபித்து வருகிறோம். அவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதிகளைப் போட்டு நிரூபணம் செய்கிறோம்.

நீங்கள் பீதியை உருவாக்குகிறீர்கள். இலட்சக்கணக்கான மக்கள் சாலைகளில் இருக்க, ஒட்டுமொத்த குழப்பத்தை உருவாக்குகிறீர்கள். இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், வீட்டற்றவர்களுக்கும் தேவையான வசிப்பிடங்களாகத் திருமண மண்டபங்களையும், பள்ளிகள், கல்லூரிகளையும் மாற்றியிருக்க முடியும். வெளிநாடுகளில் வரும் மக்களுக்கு நட்சத்திர உணவு விடுதிகளைத் தடுப்பு மையங்களாக அறிவிக்கிறோமே.

இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முழுக் கட்டணம் வசூலிக்கிறோம். எல்லோரிடமும் ஸமார்ட் போன் இருப்பதாகக் கருதிக் கொண்டு இணையம் மூலமாக பயணச்சீட்டு வாங்கலாம் என்கிறோம். கர்நாடக மாநிலத்தில் அடிமைகள் தப்பித்து போவதாக ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் இருப்பவர்கள் முதலமைச்சரைச் சந்தித்து முறையிட்டதால், இரயில் ரத்து செய்யப்படுகிறது. ஏழைகளுக்கு ஒருமுறை, பணக்காரர்களுக்கு வேறு முறை என்று நாம் வைத்து இருக்கிறோம்.

இடப்பெயர்ச்சி பல பத்தாண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே. அவர்களின் வாழ்நிலை ஏற்கெனவே மோசமாகத்தானே இருக்கிறது..

பலவிதமான இடப்பெயர்வுகள் உண்டு. அதில் உள்ள வர்க்க வித்தியாசத்தை நீங்கள் பார்க்க வேண்டும். நான் சென்னையில் பிறந்தேன். உயர் கல்வியைப் புதுதில்லியில் முடித்தேன். அங்கு நான்கு ஆண்டுகள் இருந்தேன். பின்பு மும்பைக்குச் சென்று 36 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறேன். ஒவ்வொரு முறை இடம் பெயர்ந்த போதும் அதனால் நான் பலன் அடைந்தேன். ஏனெனில் நான் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன். குறிப்பிட்ட வர்க்கத்தைச் சார்ந்தவன். எனக்கு சமூக மூலதனமும், வலைப் பின்னல்களும் உண்டு. இவையெல்லாம் நீண்ட கால இடப்பெயர்வுகள்.

பருவக் காலங்களில் நடக்கும் இடப்பெயர்வுகள் (seasonal migrants) உள்ளன. உதாரணமாக மகாராஷ்டிராவில் உள்ள கரும்பு விவசாயிகள் கர்நாடக மாநிலத்தில் ஐந்து மாதங்கள் மட்டுமே வேலை செய்து பிறகு, தங்கள் சொந்த கிராமங்களுக்குச் செல்வார்கள்.

வேறு சில பிரிவினர் உண்டு. இவர்கள் அடித்தளமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (footloose migrant workers). இவர்கள்தான் நமது கவனத்திற்கு உரியவர்கள். அவர்கள் இறுதியாக செல்லும் இடம் எதுவென்று அவர்களுக்குத் தெளிவாக தெரியாது. மும்பையில் ஒரு ஒப்பந்தக்காரரிடம் மூன்று மாதம் ஒருவர் பணிபுரிவார். அதன்பிறகு வேறு ஒருவரிடம், மகாராஷ்டிராவில் எங்கோ ஓரிடத்தில் அவர் இருப்பார். இப்படியே இது தொடரும். அவர்களின் வாழ்க்கை கொடூரமானது. நிச்சயமில்லாதது. இப்படி இலட்சக்கணக்கானவர்கள் உள்ளனர்.

தொலைக்காட்சி விவாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு, கிராமங்களில் இருந்து கிராமங்களுக்கு இடம் பெயர்ந்தது குறித்து எத்தனை விவாதங்கள் நடந்துள்ளன.

இடப்பெயர்வுக்கு முக்கியமான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள் ?

விவசாயத்தை சிதைத்து விட்டோம். இதனால் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் நிலைகுலைந்தது. கைத்தறி, கைவினைப் பொருட்கள் போன்றவை விவசாயத்திற்கு அடுத்த பெரிய தொழில்கள். மீனவர்கள், கள் இறக்குபவர்கள், பொம்மை செய்பவர்கள், நெசவாளர்கள் என ஒவ்வொருவரின் தொழிலும் போனபிறகு அவர்கள் வேறு என்ன செய்ய முடியும். வெகு காலத்திற்கு முன்பே கிராமங்களில் அவர்களுக்கு இருந்த வாய்ப்புகளை அழித்து விட்டோம். இதன் மூலம் நமக்கு மலிவான உழைப்பைத் தரும் படையை உருவாக்கியுள்ளோம்.

தொழிலாளர் சட்டங்களை தளர்த்துவதை எப்படி பார்க்கிறீர்கள்?

முதலாவது அவசரச் சட்டம் மூலம் சட்டங்களைத் திருத்துவது என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தையும், தற்போதைய சட்டங்களையும் குறைத்து மதிப்பிடுவதாகும். இரண்டாவது இது கொத்தடிமை முறைக்கு உரிமம் வழங்குவது போலாகும். மூன்றாவதாக நூறு ஆண்டுகளாக நிலவி வந்த வேலை நேரத்தை இது பின்னுக்குத் தள்ளுவதாகும். உலகம் முழுதும் உள்ள, தொழிலாளர் விதிகளில் எட்டு மணிநேர வேலை என்பது அடிப்படையான ஒன்றாகும்.

குஜராத் அறிவிக்கையைப் பாருங்கள். தொழிலாளர்களுக்கு மிகை ஊதியம் (overtime wages) தர வேண்டியதில்லை என்று கூறுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மிகை ஊதியம் உண்டு. ஆனால் ஆறு நாட்களும் 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.

அதைவிட முக்கியமாக தொழிலாளர்கள் கூடுதலாக பணிசெய்ய விருப்பமா இல்லையா என்பது பற்றி கருத்து சொல்ல அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. கூடுதல் நேரம் பணிபுரிந்தால் உற்பத்தித்திறன் (productivity) பெருகும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் இது தவறு என்று பல ஆய்வுகள் சொல்லுகின்றன. அதனால்தான் கடந்த நூற்றாண்டில் எட்டு மணி நேர வேலை என்பது கடைபிடிக்கப்பட்டது. கூடுதல் நேரம் பணி புரிந்தால் களைப்பினாலும், சோர்வினாலும் உற்பத்தித்திறன் குறைவதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.

எப்படி இருந்தாலும் இது மனித உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். இது தொழிலாளர்களை அடிமைப்படுத்துவதாகும். மாநிலங்கள் ஒப்பந்தக்காரரைப் போல செயல்படுகின்றன. பெருநிறுவனங்களுக்கு கொத்தடிமைத் தொழிலாளர்களைத் தரும் தரகரைப் போல மாநில அரசுகள் செயல்படுகின்றன. நிச்சயமாக இது தலீத்துகள், ஆதிவாசிகள், பெண்கள் போன்ற நலிந்த பிரிவினரை இவை அதிகமாக பாதிக்கும்.

இந்தியாவில் 93 சத தொழிலாளர்கள், அமைப்புச் சாராத துறைகளில் பணிபுரிவதால் அவர்களால் உரிமைகளை நிலைநாட்ட முடியாது. “இப்போது மீதமிருக்கும் ஏழு சதவீதத்தினரின் உரிமைகளையும் அழிப்போம்” என்று சொல்ல வருகிறார்கள். தொழிலாளர்கள் சட்டங்களைத் திருத்தினால் முதலீடுகள் வரும் என்று மாநில அரசுகள் சொல்லுகின்றன. ஆனால் நல்ல கட்டமைப்பு வசதிகளும், நல்ல சூழல்களும், பொதுவாக அமைதியான சமூகம் இருக்கும் இடங்களுக்குத்தான் முதலீடுகள் வருகின்றன. உத்திரபிரதேசம் இப்படி எந்த விதத்திலாவது மேம்பட்டு இருந்தால் அந்த மாநிலத்தில் இருந்து பெருமளவிலான தொழிலாளர்கள் நாடு முழுவதும் சென்றிருக்க மாட்டார்கள்.

இதன் தொடர்ச்சி எப்படி இருக்கும்?

உத்திரப்பிரதேசமும், மத்திய பிரதேசமும் மூன்று ஆண்டுகளுக்கு தொழிலாளர்கள் சட்டங்களை நிறுத்தி வைத்து உள்ளன. நிலமைகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்று சொல்லுகிறீர்கள். நீங்கள் மக்களை மனித தன்மையற்றவர்களாக ஆக்குகிறீர்கள். உங்களுக்கு நல்ல காற்றோட்டத்திற்கான உரிமையோ, கழிப்பிடத்திற்கான உரிமையோ, இடைவேளைக்கான உரிமையோ இல்லை என்று சொல்லுகிறீர்கள். இது முதலமைச்சர்கள் வெளியிட்ட அறிவிக்கை (ordinance); இதற்கு சட்டப்பூர்வத் தகுதி கிடையாது.

எப்படி இதை முன்னெடுத்துச் செல்லுவது ?

நாட்டில் உள்ள தொழிலாளர்களின் நிலமையைக் கண்டிப்பாக நீங்கள் மேம்படுத்த வேண்டும். இந்த சமூகத்தில் நிலவும் பெருத்த சமமற்ற தன்மையின் காரணமாக இப்போதைய தொற்றுநோய் அவர்களைப் பாதிக்கிறது. நாம் ஏற்றுக் கொண்டுள்ள பல சர்வதேச விதிமுறைகளுக்கு விரோதமாக இப்போது நாம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

அம்பேத்கர் இதைத் தெளிவாக பார்த்தார். நாம் அரசாங்கத்தைப் பற்றி மட்டுமே நாம் பேச வேண்டியதில்லை.
வியாபாரத்தின் தயவில் வாழும் தொழிலாளர்கள் குறித்து நாம் பேச வேண்டும் என்றார். அவர் உதவி செய்து கொண்டு வரப்பட்ட சட்டங்களை மாநில அரசுகள் நிறுத்தி வைக்கின்றன.

மாநில அரசாங்கத்தில் தொழிலாளர் துறை உள்ளனவே! அவைகளின் பங்கு என்ன?

மாநிலத்தில் உள்ள தொழிலாளர் துறையின் பணி தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகும். ஆனால் உங்களுடைய மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பெருநிறுவனங்கள் சொல்லுவதைக் கேட்கும்படி தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். நீங்கள் எதையாவது மாற்ற விரும்பினால் உங்கள் சமூக ஒப்பந்தத்தை (social contract) மாற்ற வேண்டும். இந்த பூமியில் உள்ள மோசமான, சமமற்ற சமூகத்தைப் பற்றி நீங்கள் அக்கறை கொள்ளவில்லை என்றால் உங்களால் எதுவும் செய்ய முடியாது. இது இன்னும் மோசமாக போகும்; வெகு விரைவாகவும் போகும்.

வீட்டிற்கு திரும்பும் பெரும்பாலான தொழிலாளர்கள் இளைஞர்கள், கோபமாக போகிறார்கள். நாம் எரிமலையின் மீது அமர்ந்து இருக்கிறோமா?

எரிமலை வெடித்துக் கொண்டு இருக்கிறது. அதைப் பார்க்காமல் இருக்க நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அரசாங்கங்களின், ஊடகங்களின், ஆலை முதலாளிகளின், ஒரு சமூகமாக நம்முடைய பாசாங்கை (hypocrisy) பாருங்கள்.

மார்ச்சு 26ம் தேதி வரை நமக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து தெரியாது. திடீரென்று இலட்சக்கணக்கான தொழிலாளர்களை நாம் சாலைகளில் பார்த்தோம். அதை நாம் உணர்ந்தோம், ஏனெனில் அவர்களுடைய சேவை நமக்கு கிட்டவில்லை. 26ம் தேதி வரை அவர்களைத் திட்டிக் கொண்டிருந்தோம். சமமான உரிமைகள் உள்ள மனிதர்களாக அவர்களை நாம் நினைக்கவில்லை.

ஒரு பழைய பழமொழி உண்டு. ‘ஏழைகள் படித்து விட்டால், பணக்காரர்கள் பல்லக்குத் தூக்கிகளை இழப்பார்கள்’. திடீரென்று நாம் பல்லக்கைத் தூக்கிகளை இழந்து விட்டோம்.

இடப்பெயர்வு பெண்களையும், குழந்தைகளையும் எப்படி குறிப்பாக பாதிக்கிறது?

இது குறிப்பாக பெண்களையும், குழந்தைகளையும் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கிறது. ஊட்டச்சத்துக்குப் பற்றாக்குறை ஏற்படும் போது பெண்களும், சிறுமிகளும்தான் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். சுகாதாரக் குறியீட்டில் நம்ப முடியாத அளவுக்குப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இளம் பெண்கள் அடையும் பாதிப்பைப் பற்றி பேசுவது ஒருபுறம் இருக்கட்டும்; யாரும் நினைப்பதுகூட இல்லை. நாடு முழுதும் உள்ள இலட்சக்கணக்கான சிறுமிகளுக்கு இலவசமாக சானடரி நாப்கின் கிடைத்து வந்தது. திடீரென்று பள்ளிகள் மூடப்பட்டன; சானடரி நாப்கின்களுக்கு மாற்று ஏற்பாடு கொடுக்கப்படவில்லை. இலட்சக்கணக்கானப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நீண்ட தொலைவுகளுக்கு நடக்கிறார்கள்.

அவர்கள் நிலமைகள் மேம்பட என்ன செய்ய வேண்டும்?

நாம் இப்போது தேர்ந்தெடுத்துள்ள வளர்ச்சிப் பாதையிலிருந்து ஒட்டுமொத்தமாக தொடர்பற்று (delink) போக வேண்டும். சமத்துவமின்மைக்கு எதிராக பெருந்தாக்குதலை நடத்த வேண்டும். சமமற்ற சூழலின் காரணமாகவே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லல் படுகிறார்கள். “அனைவருக்கும் நீதி : சமூக, பொருளாதார, அரசியல்….” என்று அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளவைகளை அடையாமல் இதைச் செய்ய முடியாது. சமூகம், பொருளாதாரம் என்பது அரசியலுக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது யதேச்சையானது அல்ல. அரசியலமைப்பை எழுதியவர்களுக்குத் தெளிவான முன்னுரிமை இருந்திருக்கிறது என்றே கருதுகிறேன். உங்கள் அரசியலமைப்பே உங்களுக்கு வழி காட்டுகிறது. இந்திய மேட்டிமை குடிகளும், அரசாங்கமும் எப்பொழுதும் போலவே செல்லலாம் என்று உண்மையில் நினைக்கிறது; அந்த நம்பிக்கை நம்ப முடியாத அளவுக்கு கொடுங்கோன்மைக்கும் அடக்குமுறைக்கும், வன்முறைக்கும் இட்டுச் செல்லும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.