புதுச்சேரி அரசு மதுக்கடைகள் திறப்பதில் அவசரம் காட்டக் கூடாது!

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (17.05.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:

புதுச்சேரியில் தமிழகத்தைப் பின்பற்றி அவசரகதியில் மதுபானக் கடைகளைத் திறக்கப் புதுச்சேரி அரசும் முதல்வரும் அவசரம் காட்டி வருவது மக்கள் நலன் பேணும் அரசுக்கு அழகில்லை என்பதால் மதுக்கடைகளைத் திறக்கும் முடிவை கைவிட வேண்டும்.

ஊரடங்கின் போது சட்டவிரோதமாகக் கள்ள மது விற்பனைச் செய்தது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மற்றும் கள், சாராயக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடைகளிலும் மதுபானக் குடோன்களிலும் உள்ள மது பாட்டில்கள் ஊரடங்கின் போது காலாவதியாகி உள்ளன. அதனைப் புதுச்சேரி கலால் துறை இதுவரை ஆய்வு செய்யவில்லை.

காலவாதியான மதுபானங்கள் விநியோகம் செய்யப்பட்டால், அதை அருந்துவோர் மெல்ல மெல்ல இறப்பதைக் காட்டிலும் ஒரேடியாக இறக்கும் ஆபத்து ஏற்படும்.

மதுக்கடைகளைத் திறந்தால் இரண்டு மாதங்களாகத் தொற்றுநோய் அபாயத்தில் இருக்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மதுக்கடை முன்பு குவிந்தால் பெருமளவில் நோய்த் தொற்று ஏற்பட்டு, மதுவைக் காட்டிலும் வேகமாக கொரோனா வைரஸ் பரவி மக்களை அழித்துவிடும் ஆபத்துள்ளது.

புதுச்சேரி அருகிலுள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மது அருந்துவோர் பெருமளவில் கூட்டமாக வந்து புதுச்சேரியில் நுழையும் அபாயம் ஏற்படும். இதனால், கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகும்.

முன்னரே எமது இயக்கங்கள் சார்பில் மதுபானங்களின் மீது போடப்படும் கலால் வரியை 30 விழுக்காடு உயர்த்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளோம்.

புதுச்சேரி அரசும் முதல்வரும் இதுவரை எமது வேண்டுகோளுக்கு எந்தவொரு பதிலையும் அளிக்காத நிலையில், மதுக் கடைகளை மட்டுமே அவசரகதியில் திறக்க வேண்டுமென ஆர்வம் காட்டி வருவது ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் செயலாகும்.

எனவே, புதுச்சேரி அரசு மதுபானக் கடைகள் திறப்பதில் மிகவும் அறிவியல் பூர்வமான நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். அதை விடுத்து அவசரகதியில் மதுபானக் கடைகளைத் திறந்தால் தொற்று நோய் பரவும் சூழலில் மாநில மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் என புதுச்சேரி அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.

இவண்,

கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.

லோகு.அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

பெ.சந்திரசேகரன், தலைவர், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

கோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.

சி. ஸ்ரீதர், அமைப்பாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம்.

பெ.பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்.

தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.

பெ.இரகுபதி, புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

ஆ.பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.