சமநீதி எழுத்தாளர் ஏ.பி.வள்ளிநாயகத்தின் பொதுவாழ்வுப் பயணம் – ஓவியா

1953 பிரிக்கப்படாத நெல்லைச் சீமையான ஆறுமுகநேரியில் 19.08.1953 அன்று ஆறுமுகம் – புஷ்மாம்மாள் தம்பதியருக்கு மூத்த புதல்வனாகப் பிறந்த இவர், தஞ்சை மாவட்ட எழுச்சியினூடே வளர்ந்தவர்.

1965 திமுகவினரால் நிகழ்த்தப்பட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம் மூலம் பொது வாழ்க்கைக்குப் பள்ளிப் பருவத்திலேயே உந்து உணர்ச்சிப் பெற்றவர்.

1970இன் தொடக்கத்தில் தலைவர் பெரியாரின் தலைமையேற்று அமைப்பு ரீதியாகச் செயல்படத் தொடங்கியவர். குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் படித்தபோது திராவிடர் மாணவர் கழகத் தலைவராகவும் தஞ்சை மாவட்ட திராவிடர் மாணவர் – இளைஞரணி செயலாளராகவும் பிரிக்கப்படாத தஞ்சை, திருச்சி, புதுகை மாவட்டங்களின் மண்டல திராவிடர் மாணவர் இளைஞரணி செயலாளராகவும் இருந்தவர். அந்த நேரம் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களுடன் தமிழகமெங்கும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டவர். புரட்சிகர நக்சல்பாரி இயக்க சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டதால் குடந்தை வள்ளிநாயகம் திகவில் தொடர முடியாத சூழல் ஏற்பட்டது.

1980களின் பெரும்பகுதியை ஈழத் தமிழருக்கென செலவிட்டவர். ரஞ்சன் என்றழைக்கப்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF)யின் தலைவரான தோழர் பத்மநாபாவின் மிக நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர். டெல்லி சென்று ஈழத்தமிழர்கள் உரிமைப் பேரணியை, டெல்லிவாழ் தமிழர்களை, குடிசைப் பகுதிகளிலிருந்து அணிதிரட்டி பேரணி நடத்தி, நடுவணரசின் கவனத்தை ஈர்த்தவர். சங்கமி இதழின் ஆசிரியராக இருந்தவர். அந்த காலகட்டத்தில்தான் திக இயக்க இளம்பேச்சாளராக இருந்த, இந்தக் கட்டுரையாளரான மாணவி ஓவியாவைக் காதல் திருமணம் செய்தார். அவர்களின் மகன் ஜீவசகாப்தன் இன்றும் ஊடகவியலாளராகப் பரிணமித்து கருத்துப் பரப்பலில் செவ்வன செயல்பட்டு வருகிறார்.

தோழர் அரணமுறுவலுடன் இணைந்து தமிழ்மொழி உரிமைகளுக்காகக் களம் கண்டவர். நக்சல்பாரி இயக்கத்தில் தோழர் சாருமஜும்தார் வழிவந்த வினோத் மிஸ்ரா தலைமையிலான இகக (மாலெ) நடத்திய தோழர் எஸ்.நடராசன் தலைமையில் உருவாக்கப்பட்ட, ‘தமிழக மக்கள் முன்னணி’ சென்னையில் நடத்திய முதல் மாநாட்டுப் பணிகளில், பின்னாலிருந்து, கட்டமைப்பு வேலை செய்ததில் தோழர் வள்ளிநாயகம் அன்றைய காலகட்டத்தில் தலைமறைவாக இருந்து பணியாற்றிய தோழர் டிஎஸ்எஸ் மணியுடன் இணைந்து செயல்பட்டு முக்கியப் பங்கு வகித்தார். ஆனைமுத்து அய்யாவின் ‘பெரியார் சம உரிமைக் கழக’த்தைப் புரட்சிகரத் தோழர்களுடன் இணைந்து கும்பகோணம், மதுரை நகரங்களில் இளைஞர்களை ஈர்த்து அமைப்பாக்கியவர். கும்பகோணம் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் அண்ணனுடன் இணைந்தே, தி.க.வில் தொடங்கி, வள்ளியின் செயற்பாட்டுத் தளங்கள் அமைந்திருந்தன”.

அதன்பின் தோழர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான திராவிடர் கழகத்தின் மாநிலத் தொழிலாளர் அணிப் பொறுப்பைப் பெற்றவர்.

1990களில் பாட்டாளி மக்கள் கட்சியின் (பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய) மாநிலத் தத்துவ அணித் தலைவராக இருந்தவர். மருத்துவர் ராமதாஸ் அய்யாவுடன் நெருக்கமாக நின்று பணியாற்றியவர். அப்போது நடைபெற்ற தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்திய பொறுப்பாளர்களில் ஒருவர்.

அலைகள் என்ற மாத இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றியவர்.

2000 முதல் தோழர் எஸ்.நடராஜன் அவர்களுடன் இணைந்து தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பேரவையைத் தொடங்கி அதில் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

மத்தியில் பாஜக ஆட்சி நடந்தபோது நாடு முழுவதும் தலித் மக்களிடையே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்துமத வெறுப்புணர்வை எதிர்த்து, ‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ என்ற முழக்கத்துடன் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஊர்தி பயணம் நடத்தி தலித் மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டியவர்.

2001 முதல் 2007 வரை தலித் முரசு இதழில் ஏ.பி.வள்ளிநாயகம் எழுதிய ‘விடுதலை வேர்களும் விழுதுகளும்’ தொடர் கட்டுரை மறைக்கப்பட்ட முதற்குடிகளின் தலைவர்கள் வரலாற்றை உலகறியச் செய்தது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன், மதுரை தலித் ஆதார மையம் நடத்திவரும் அம்பேத்கர் கல்வி மையத்தில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர்.

2005இல் தலித் ஆதார மையம் அவருக்கு ‘விடுதலை வேர்’ என்ற விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது.

2006இல் தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர் எழுத்தாளர் பேரவை தொடங்குவதற்கு அடித்தளமாக இருந்து செயலாற்றியவர்.

2007இல் இவரது மரணத்துக்குப் பின் ‘தலித் முரசு – பாலம் கலை இலக்கிய விருது’ இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

1995 முதல் 2007 வரை எழுத்துத் தளத்தில் கவனம் செலுத்திய ஏ.பி.வள்ளிநாயகம் எழுதிய நூல்கள் :

1. தலைவர் அம்பேத்கர் சிந்தனைகள்.

2. விளிம்பில் வசப்பட்ட மானுடம்.

3. போராளி அம்பேத்கர் குரல்.

4. பாட்டாளி மக்களும் தோழர் பெரியாரும் .

5. பெரியார் பெண் மானுடம்.

6. புரட்சியாளர் அம்பேத்கர்.

7. மானுடத்தில் அழகானவர்கள் தீண்டத்தகாதவர்கள்

8. பெரியார் பிறப்பித்த பெண்ணுரிமைப் பிரகடனங்கள்.

9. மானுடம் நிமிரும்போது.

10.அடிமைகளின் தலைவர் அய்யங்காளி.

11. நாம் இந்துக்கள் அல்லர் – பவுத்தர்கள் குடிசையில்தான் மானுடம் வசிக்கிறது

12. உரிமைப் போராளி இரட்டைமலை சீனிவாசன்

13. அம்பேத்கர் அறைக்கூவல்

14. பவுத்த மார்க்கம் பற்றி விவேகானந்தர்

15. பவுத்தம் ஓர் அறிமுகம்

16. மானுடத்தில் கோலோச்சியவர்கள் பவுத்தர்கள்

17. நமது தலைவர்கள் – எல்.சி.குருசாமி, எச்.எம்.ஜெகநாதன்

18. சமநீதிப் போராளி இம்மானுவேல் சேகரன்

19. அடிமைகளின் தலைவர் அய்யங்காளி விரிவாக்கப்பட்ட 2ஆம் பதிப்பு

20. பூலான்தேவிக்கு முன் ராம்காளி: முன்னி

21. தென்னாட்டு அம்பேத்கர் தளபதி எம்.கிருஷ்ணசாமி

22. இந்துத்துவ வேரறுக்கும் உயிராயுதமும் முதற்குடிகளும்

23. மகாத்மா புலேவுக்கு முன் மகராசன் வேதமாணிக்கம்

24. குடிசையில்தான் மானுடம் வசிக்கிறது

25. தாத்ரி குட்டி

(19-05-2020 வள்ளிநாயகத்தின் 13ஆவது ஆண்டு நினைவு நாள்)

நன்றி : மின்னம்பலம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.