அரசு சாராய ஆலையில் சட்டத்திற்குப் புறம்பாக சாராயம் விற்றது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!


புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (25.05.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:

புதுச்சேரியில் ஊரடங்கின் போது வடிசாலைச் சாராய ஆலையில் இருந்து சட்டத்திற்குப் புறம்பாக சாராயம் விற்பனைச் செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்குப் பொது முடக்கம் அமுலில் இருந்து வருகிறது. இந்நிலையில் வில்லியனூர் ஆரியபாளையத்தில் உள்ள வடிசாலைச் சாராய ஆலையில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாராயம் சட்டத்திற்குப் புறம்பாக பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனைச் செய்யப்பட்டுள்ளது என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் புதுச்சேரி அரசு மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக சாராய ஆலையின் தலைவியும் நெட்டப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயவேணி சாராயம் விற்பனைச் செய்ததை ஒத்துக்கொண்டு பேட்டி அளித்துள்ளார்.

சட்ட விரோதமாக சாராய விற்பனைச் செய்ததில் பல கோடி ரூபாய் அரசுக்குச் சேரவேண்டிய பணம் ஆட்சியாளர்களுக்கு சென்றுள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தெளிவாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா காலத்தில் கடும் நிதி நெருக்கடியில் புதுச்சேரி அரசு சிக்கித் தவிக்கும் நிலையில் அரசுக்கு வர வேண்டிய வருவாயைத் தடுத்து ஆலையின் தலைவி விஜயவேணி ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டுக் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

எனவே, சாராய ஆலையில் சட்ட விரோதமாக சாரயம் விற்பனைச் செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவண்,

கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.

லோகு.அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

பெ.சந்திரசேகரன், தலைவர், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

கோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.

சி. ஸ்ரீதர், அமைப்பாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம்.

பெ.பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்.

தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.

பெ.இரகுபதி, புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

ஆ.பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.