முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி உள்ளிட்டோர் உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும்!

சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் இன்று (18.06.2020) விடுத்துள்ள கூட்டறிக்கை:

புதுச்சேரியில் முதியோர், விதவை, முதிர் கன்னி, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் என சுமார் 1.50 லட்சம் பேர் புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை மூலம் மாதந்தோறும் உதவித்தொகைப் பெற்று வருகின்றனர்.

இந்த உதவித்தொகை மத்திய அரசின் பங்களிப்புத் திட்டத்தின்கீழ் (Contribution Scheme) 90 சதவீதம், மாநில அரசு 10 சதவீதம் நிதி அளிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

மேற்கண்ட உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதிக்குள் அவரவர் வங்கிக் கணக்கில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மூலம் செலுத்தப்பட்டு வந்தது. இத்தொகையினை நம்பிதான் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

புதுச்சேரியில் எத்தகைய நிதி நெருக்கடிகள் வந்தபோதும், இதுபோன்ற உதவித் தொகைகளை நிறுத்தாமல் காலதாமதமின்றி மாதந்தோறும் அரசு வழங்கி வந்தது.

ஆனால், புதுச்சேரி அரசு ஜூன் மாதத்திற்கான உதவித் தொகையினைப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதை வன்மையாக் கண்டிக்கிறோம்.

மேலும், உதவித்தொகை
வழங்குவதற்கான நிதியை அரசு வேறு செலவினங்களுக்கு மடை மாற்றிவிட்டதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

கொரோனா காலத்தில் பெரும் பொருளாதார முடக்கம் ஏற்பட்டு பலதரப்பு மக்களும் மிகுந்த சிரமத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், உதவித்தொகை வழங்காமல் இருப்பது இதையே நம்பி வாழ்பவர்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனவே, புதுச்சேரி அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் முதியோர், விதவை, முதிர்கன்னி, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர்களின் உதவித்தொகையினைஅவரவர் வங்கி கணக்கில் உடனே செலுத்த வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்துகிறோம். இல்லாவிட்டால் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

கோ.அ.ஜெகன்நாதன், செயலாளர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்.

லோகு.அய்யப்பன், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

இரா. மங்கையர்செல்வன், அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள்.

கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

கோ.அழகர், செயலாளர், தமிழர் களம்.

சி. ஸ்ரீதர், அமைப்பாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

இர.அபிமன்னன், தலைவர், இராவணன் பகுத்தறிவு இயக்கம்.

கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம்.

பெ.பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்.

தூ. சடகோபன், தலைவர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம்.

பெ.இரகுபதி, புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம்.

ஆ.பாவாடைராயன், தலைவர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.