உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர்களாக புதுச்சேரி வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (25.06.2020) விடுத்துள்ள அறிக்கை:

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கும் போது புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர்களை மட்டுமே நியமிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுப் பிளீடராக இருந்த மூத்த வழக்கறிஞர் காந்திராஜூக்குப் பதவி நீட்டிப்பு வழங்காமல், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த கூடுதல் அரசுப் பிளீடரை அப்பதவிக்கு நியமனம் செய்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளது பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

புதுச்சேரியில் பல திறமையான, அனுபவமுடைய வழக்கறிஞர்கள் இருக்கும்போது, தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களை அரசுப் பிளீடராகவும் (Government Pleader), அரசுக் குற்றவியல் வழக்கறிஞராகவும் (Public Prosecutor) நியமனம் செய்வது கண்டனத்திற்குரியது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்குப் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் போதிய அளவில் நியமிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுப் பல காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், மேற்சொன்னபடி அரசு வழக்கறிஞர்கள் பதவிகளிலும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவது வழக்கறிஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

மேலும், புதுச்சேரி வழக்கறிஞர் சங்கச் செயற்குழுக் கூட்டத்தில் உயர்நீதிமன்றத்திற்குப் புதுச்சேரி சேர்ந்த வழக்கறிஞர்களையே அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

எனவே, புதுச்சேரி அரசு உயர்நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கும் போது புதுச்சேரி சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் கொள்கை முடிவு எடுத்துச் செயல்படுத்த வேண்டும். இதன்மூலம் புதுச்சேரி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.

இது குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், சட்டத்துறைச் செயலர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.