காவல்நிலைய மரணங்களில் உச்சநீமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்த NCHRO வேண்டுகோள்!

சாத்தான்குளத்தில் விதிமீறலுக்கு மரண தண்டனை வழங்கிய காவல்துறை – NCHRO கண்டனம்!

சாத்தன்குளம் காவல் கொட்டடி கொலையில் உயர்நீதிமன்றத்தின் தலையீடு – NCHRO வரவேற்பு!

காவல்நிலைய மரணங்களில் உச்சநீமன்றம் வழங்கிய தீர்ப்பினை நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு NCHRO வேண்டுகோள்!

தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) தமிழகத் தலைவர் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் விடுத்துள்ள ஊடக அறிக்கை:

1. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ABJ மொபைல்ஸ் என்ற கடையை ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் நடத்தி வருகின்றனர். கடந்த 19.06.2020 அன்று மொபைல் கடையை அரசு அனுமதி அளித்த நேரத்திற்கு மேல் திறந்து இருந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரைக் காவல்துறையினர் சாத்தான்குளம் காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். மேற்படி காவல்நிலையத்தில் வைத்து எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் இதர காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மீது காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி சாத்தான்குளம் காவல் நிலையம் குற்ற எண். 312 / 2020 u/s 188, 269, 294(b), 353 and 506(ii) IPC – இன்கீழ் வழக்குப் பதிவு செய்து 20.06.2020 காலையில் சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் மதியம் 02:30 மணிக்கு அடைத்துள்ளனர். காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையிலேயே அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய மருத்துவச் சிகிச்சைக்கூட பெறாமால்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2. இந்நிலையில் 22.06.2020 இரவு சுமார் 07:35 மணியளவில் சிறையில் அடைக்கபட்டிருந்த பென்னிக்ஸ் மூச்சுவிட சிரமமாக இருப்பதாக கூறியதால் சிறைக் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குப் பென்னிக்ஸ் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மேற்படி சிகிச்சைப் பலனின்றி இரவு 09.00 மணிக்குப் பென்னிக்ஸ் இறந்துவிட்டார். மேற்படி பென்னிக்ஸ் இறந்தது தொடர்பாக கோவில்பட்டி சிறைக் கண்காணிப்பாளர் சங்கர் என்பவர் அளித்தப் புகாரின் பெயரில் கோவில்பட்டி கிழக்குக் காவல் நிலையத்தில் குற்ற எண். 649 / 2020 u/s 176(1)(A)(i) Cr.P.C. பிரகாரம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

3. அதேபோல 22.06.2020 இரவு சுமார் 10:20 மணிக்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறைக் கண்காணிப்பாளர் உத்தரவுபடி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி 23.06.2020 அதிகாலை 05:40 மணிக்கு ஜெயராஜ் இறந்து விட்டார். மேற்படி ஜெயராஜ் இறப்பு தொடர்பாக கோவில்பட்டி சிறைக் கண்காணிப்பாளர் சங்கர் என்பவர் அளித்தப் புகாரின் பெயரில் கோவில்பட்டி கிழக்குக் காவல் நிலையத்தில் குற்ற எண். 650 / 2020 u/s 176(1)(A)(i) Cr.P.C பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

4. மேற்படி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும் காவல்நிலைய சிறைக் கொட்டடி கொலைதான் என்பது மிக தெளிவாக தெரிய வருகிறது. மக்கள் கொரோனா நோயின் பாதிப்புக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து வரும் இந்தச் சூழலில் சாதாரண விதி மீறலுக்காக ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்நிலையத்தில் வைத்து இருவரையும் கடுமையாகத் தாக்கி அவர்களின் மரணத்திற்குச் சாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகள் காரணமாகியுள்ளனர். மேற்படி காவல்நிலைய கொட்டடி கொலைகளை NCHRO வன்மையாக கண்டிக்கிறது.

5. மேற்படி வழக்கில் பாதிக்கப்பட்ட ஜெயராஜின் மனைவியும், பென்னிக்ஸின் தாயாருமான செல்வராணி அவர்கள் மாண்புமிகு மதுரை நீதிமன்ற கிளையில் அவரது வழக்கறிஞர்கள் திரு P.M.விஷ்ணுவர்தணன், S.மாடசாமி ஆகியோர் மூலமாக பிரேதப் பரிசோதனையை வீடியோ எடுப்பது, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பல்வேறு கோரிக்கைகளுடன் மனு தாக்கல் செய்து இருந்தார். மேற்படி மனு Crl.O.P. (MD) No. 6651 of 2020 விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

6. அதேபோல மேற்படி செல்வராணி தொடர்ந்த வழக்குடன், காவல் கொட்டடி கொலை வழக்கினை மாண்புமிகு மதுரை உயர்நீதிமன்றக் கிளை தாமாக முன்வந்து W.P.(MD) No. 7042 of 2020 ஆக விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. மேற்படி இரண்டு வழக்குகளும் Video Conference-இல் 24.06.2020 மதியம் 12:30 மணிக்கு மாண்புமிகு நீதியரசர்கள் P.N.பிரகாஷ், B.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. தெண்மண்டல I.G., சண்முக ராஜேஸ்வரன், தூத்துக்குடி S.P., அருண் பாலகோபாலன் ஆகியோர் வீடியோ கான்பிரன்சில் ஆஜராகி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலர்கள் சிலரைத் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாகவும், சாத்தான்குளம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதரனை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளதாகவும் மற்றும் நடந்த நிகழ்வு குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விளக்கம் அளித்தனர்.

7. மாண்புமிகு நீதியரசர்கள் போஸ்ட்மார்ட்டம் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி டீன் தலைமையில் மருத்துவக்குழு முன்பு நடைபெற வேண்டும் என்றும் அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டு மேற்படி வீடியோ மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை சீலிட்ட கவரில் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பபட வேண்டுமென்று உத்தரவிட்டனர் .

8. மேலும் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் எந்தவித தலையீடும் இன்றி சுதந்திரமாகச் செயல்பட்டு இறந்த பிரேதங்களைப் பரிசோதனைச் செய்து பிரேத விசாரணை செய்திட உரிய வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்றும், பிரேத விசாரணை அறிக்கை சீலிட்ட கவரில் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், நடந்த நிகழ்வு குறித்து சாட்சி சொல்லவரும் சாட்சிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் சாட்சி விசாரணை நடத்த உரிய ஏற்பாடுகள் செய்துதரப்பட வேண்டும் என்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றி இறுதிச் சடங்குகள் நடைபெற வேண்டுமென்றும், மேற்படி வழக்கினை உயர்நீதிமன்றம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்றும் நீதி நிலைநாட்டப்படுவதை உயர்நீதிமன்றம் உறுதி செய்யும் என்ற நம்பிக்கையைப் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும், பொதுமக்களிடையே பரவலாக எடுத்துச் சொல்ல மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் மக்களிடையே வெளிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், உள்துறைச் செயலாளர், DGP ஆகியோர் அரசுடன் உரிய ஆலோசனை மேற்கொண்டு கொரொனா காலகட்டத்தில் காவல்துறையினருக்கென தனி SOP விதிமுறைகள் வகுப்பது தொடர்பாக அடிசனல் அட்வகேட் ஜெனரலிடம் தெரிவிக்குமாறும் வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது

9. இதுபோன்ற காவல்நிலைய கொட்டடிக் கொலை வழக்குகளை உரிய நேரத்தில் அதன் வீரியம் உணர்ந்து மாண்புமிகு மதுரை உயர்நீதிமன்றக் கிளைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதை NCHRO மனமாரப் பாராட்டி வரவேற்கிறது.

காவல் நிலைய மரணங்களின் போது மாண்புமிகு உச்சநீதிமன்றம் PUCL வழக்கில் அளித்த உத்தரவுப்படி கீழ்க்கண்ட கோரிக்கைகளைத் தமிழக அரசும் காவல்துறையும் செயல்படுத்த வேண்டும் என்று NCHRO கேட்டுகொள்கிறது.

(1). ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மீது போடப்பட்ட வழக்கான சாத்தான்குளம் காவல்நிலைய குற்ற எண். 312 of 2020, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் இறப்பு தொடர்பாக கோவில்பட்டி கிழக்குக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண்கள். 649 of 2020, 650 of 2020 ஆகிய மூன்று வழக்குககளின் விசாரணையை CBCID விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசையும், காவல் துறையையும் NCHRO கேட்டுக்கொள்கிறது.

(2). இந்த கொட்டடி வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் இதர நபர்கள் மீது கொலை வழக்கிற்கான சட்ட பிரிவுகள் சேர்த்து அவர்களை கைது செய்து போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசையும், காவல் துறையையும் NCHRO கேட்டுக்கொள்கிறது.

(3). மேற்படி வழக்கில் குறிப்பிட்ட காலத்தில் புலன் விசாரணை முடித்து விரைந்து இறுதி அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் தமிழக அரசையும், காவல் துறையையும் NCHRO கேட்டுக்கொள்கிறது.

(4) மேற்படி வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட உடன் தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கினைத் திறம்பட நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்று தர அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞரை சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமனம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசையும், காவல் துறையையும் NCHRO கேட்டுக்கொள்கிறது.

(5) பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் தமிழக அரசையும், காவல் துறையையும் NCHRO கேட்டுக்கொள்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.