சேலம் அரசு மாநகராட்சிப் பள்ளியைப் பாதுகாப்போம்!

மக்கள் கல்விப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், இரா.சுதாகர், அ.சந்திரமோகன் ஆகியோர் 27.06.2020 அன்று சேலம், சஞ்சீவராயன்பேட்டையில் உள்ள அரசு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியைப் பாதுகாக்க அளித்த மனு:

பெறுநர்

1. மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
சேலம் 636001

2. மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், சேலம் மாநகராட்சி, சேலம் 636001

3. காவல்துறை ஆணையர் அவர்கள்,
சேலம் மாநகரம், சேலம்

பொருள் : சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம், தாதகாப்பட்டி – சஞ்சீவராயன்பேட்டையில் செயல்படும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மூன்று வகுப்பறைகள் கையகப்படுத்தியது மற்றும் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் சட்டவிரோதமாக இடிக்கப்படுதல் – உடனடியாக தலையிட வேண்டுதல்.

அன்புடையீர்,

மேற்குறிப்பிட்டுள்ள சேலம், சஞ்சீவராயன்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் வணிக வளாகம் கட்ட, ஆளும் கட்சித் துணையுடன் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் பூமிபூஜை போட்டார். மேலும், ஆதார் அலுவலகத்திற்காக ஒரு வகுப்பறையையே சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்டு மாணவர்களை வெளியேற்றிவிட்டனர். மாணவர்களின் தாய்மார்கள் கடும் கண்டனம் தெரிவித்துப் போராடினர். (மாணவர்களின் தந்தைமார்கள் அரசு டாஸ்மாக் கடைகளில் மூழ்கிவிட்டனர்.) தங்களுடைய குழந்தைகள் 8வது வகுப்புக் கூடப் படிக்க கூடாதா எனத் தாய்மார்கள் கேட்டுப் போராடினர். இந்தப் பள்ளிக்கு கல்வி மீது அக்கறையுள்ள தனியார் ஒருவர் தனது நிலத்தையும் தானாமாக வழங்கியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த ஓ.மாணிக்கம் அவர்கள் சார்பில், இந்த அரசு நடுநிலைப் பள்ளியை பாதுகாக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. பொ.இரத்தினம் அவர்கள் மூலமாக தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, அம்மனுவின் எதிர் தரப்பினருக்கு அறிவிப்பு அனுப்பவும், அப்பள்ளியின் இருக்கும் நிலை status quo-வை கடைபிடிக்கும்படியும் உத்தரவிட்டது.

இந்த வட்டாரத்தில், நான்கு
மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகள் செயல்படுவதாக, அன்றைய முதன்மைக் கல்வி அதிகாரி (CEO) தெரிவித்தார். அப்பகுதியில் உயர்நிலைப் பள்ளித் தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்தியும், இப்பள்ளிக்கு நிலம் போதிய அளவு இருப்பதால் உயர்நிலைப் பள்ளி கட்டலாம் என்பதை தெரிவித்து, பெற்றோர்களை அதற்கான மனுவையும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டார். அதன்படி மனுவும் அனுப்பப்பட்டது. ஆனாலும், அந்த மனு மீது, தமிழக அரசாங்கம் மூலமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த சூழலில், இப்பள்ளியை ஒட்டி அமைந்துள்ள கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தை இடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இது சமீபத்தில் கட்டப்பட்டு உறுதியாக உள்ள கட்டடம் ஆகும். இதைப் பார்த்த திரு. சுதாகர் தொலைபேசியில் வழக்கறிஞர் இரத்தினம் அவர்களுக்குத் தெரியப்படுத்த, 74 வயதுள்ள மூத்த வழக்கறிஞர் இரத்தினம் அவர்கள் நாமக்கல்லில் இருந்து பேருந்தில் பயணம் செய்து வந்து இடிக்கப்படுவதைப் பார்வை இட்டார். திரு. சுதாகர் கைப்பேசியில் படங்கள் எடுத்தார். அச் சமயத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழக்கறிஞர் யார் எனத் தெரியாமல் விசாரித்தனர். அதற்கு வழக்கறிஞர், “ஒரு வலுவான கட்டடத்தை இடிக்கலாமா, கமிஷன் பெறுவதற்காக இப்படி செய்வது தமிழக அரசின் பொருளாதாரத்தை அல்லவா சீரழிக்கும்!” என்று தெரிவித்தார்.

இதே போல, சேலம் மாநகரில், தேர்வீதி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இடிக்கப்படுவதற்கான முயற்சி நடந்தபோது, உயர்நீதிமன்றத்தில் திருமதி. குப்பம்மாள் தெய்வமணி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. கல்வித்துறை சார்பில், “வலுவான நிலையில் உள்ள கட்டடத்தை இடிக்க கூடாது, இடிக்க வேண்டிய தேவை இல்லை” என சத்தியப் பிரமாண பதில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தப் பின்னணியில், வலுவாக உள்ள அரசுக் கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்கள் கட்டுவது ஆபத்தானது; எனவே, கட்டடத்தை இடிக்கும் சட்டவிரோதமான செயலை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறு கோருகிறோம். நாங்களும் ஒத்துழைப்பு தருகிறோம்.

தங்கள் உண்மையுள்ள,

பொ. இரத்தினம்

இரா. சுதாகர்

அ.சந்திரமோகன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.