சாத்தான்குளம் காவல் படுகொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்!

சாத்தான்குளம் காவல் படுகொலை வழக்கைச் சி.பி.ஐ. விசாரிக்கத் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். சி.பி.ஐ. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது.

பாஜகவினர் சாத்தான்குளம் படுகொலை விவகாரத்தில் காவல்துறைக்கு ஆதரவாகவே உள்ளனர். தமிழகப் பாஜக தலைவர் முருகன் ‘இது சின்னப் பிரச்சனை, ஏன் பெரிதுபடுத்துகின்றனர்’ என்று கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அங்கமான சேவா பாரதி அமைப்பினர் “காவல்துறை நண்பர்கள் (Friends of Police)” அமைப்பில் கணிசமாக உள்ளனர். இவர்கள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனால், சாத்தான்குளம் காவல்நிலைதத்தில் இருந்த இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் தலைமறைவாகி உள்ளதாகச் செய்தி வெளியாகி உள்ளது. இதனால், “காவல்துறை நண்பர்கள்” அமைப்பைக் கலைக்க வேண்டும் என்ற குரல் மேலோங்கி உள்ளது.

கண்ணகி – முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் சி.பி.ஐ. சரியாகச் செயல்படாத நிலையை அறிவோம். கொல்லப்பட்ட முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி, மற்றொரு உறவினர் குணசேகரன் ஆகிய இரு தலித்துகளை இவ்வழக்கில் சேர்த்து குற்றவாளியாக்கியது. மேலும், சி.பி.ஐ. தரப்பு அரசு வழக்கறிஞர் வழக்கைச் சரியாக நடத்தாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கில், யாருடைய ஆதரவும் இல்லாத நிலையில் நீதிக் கிடைக்கக் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அது தனிக்கதை.

சி.பி.ஐ. நிலை இப்படி இருக்க சாத்தான்குளம் வழக்கைச் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது சரியானதல்ல. உடனடியாக அந்த உத்தரவைத் தமிழக அரசுத் திரும்பப் பெற வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் இவ்வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க உத்தரவுக்களைப் பிறப்பித்து வருகின்றனர். மேலும், சி.பி.சி.ஐ.டி. புலன்விசாரணையைக் கண்காணித்து தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றனர். இவர்களுக்குக் கோடி நன்றிகள் சொன்னாலும் தகும்.

சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரின் நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. சி.பி.சி.ஐ.டி. மூத்த அதிகாரிகள் களத்தில் இருந்து விசாரணையைக் கண்காணித்தும், திறம்பட நடத்தியும் வருகின்றனர். இது நம்பிக்கை அளிப்பத்காக உள்ளது.

எனவே, உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.சி.ஐ.டி. புலன்விசாரணையே போதுமானது எனக் கருதுகிறேன். மேலும், வழக்கைத் தொடர்ந்து கண்காணித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைப் பெற்றுத் தரவும் விழிப்போடு இருப்போம்.

கோ.சுகுமாரன்

03.06.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.