பென்னிக்ஸ் முகமும் அகமும்: தியாகு


சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்குப் புலனாய்வை சிபிசிஐடி கையிலிருந்து சிபிஐ கைக்கு மற்றுவது நல்லதில்லை எனக் கருதுகிறோம். இது குறித்துக் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் (JAACT-TN) சார்பில் நேற்று அறிக்கை தந்தோம். ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தினர் சிபிஐ புலனாய்வை வரவேற்றுள்ளனர். சரி, பொறுத்திருந்து பார்ப்போம். யார் புலனாய்வு செய்தாலும் சிபிசிஐடி இது வரை கண்டுள்ள முன்னேற்றத்திலிருந்து பின்னடிக்க இயலாது என்று நினைக்கிறேன். நாமும் எச்சரிக்கையோடு கண்காணித்து வருவோம். அடுத்த முகன்மையான நடவடிக்கை காவல் நிலையச் சித்திரவதையில் சேர்ந்து ஈடுபட்ட “தன்னார்வத் தொண்டர்கள்’ எனப்படுவோரை அடையாளங்கண்டு தளைப்படுத்துவதுதான்.

சிபிஐ புலனாய்வு பற்றிப் பேசும் போது பென்னிக்ஸ் உயிரோடிருக்கையில் முகநூலில் பகிர்ந்த ஒரு பதிவை நேற்று படம்பிடித்துப் போட்டிருந்தேன். 2018 அக்டோபர் 7ஆம் நாள் பென்னிக்ஸ் பகிர்ந்துள்ள அந்தப் பதிவு இந்தியாவின் ஐந்து மூடநம்பிக்கைகளைப் பட்டியலிடுகிறது. இவற்றுள் முதலிடம் பெறுவது “சிபிஐ விசாரணை நடந்தால் நியாயம் கிடைக்கும்” என்பதுதான். இது அவர் குடும்பத்தினர்க்குத் தெரியுமா என்பதறியேன்.

பென்னிக்ஸ் முகநூலில் Beni Imman Immanuvel என்ற பெயரில் இயங்கியுள்ளார். அவர் குமுகப் பணி (social work) பட்ட மேற்படிப்பு (MSW) முடித்துள்ளார் என்பது தெரிந்த செய்தி. இந்தப் படிப்புக்கப்பால் அவருக்கிருந்த சமூக-அரசியல் பார்வைக்கு அவரது முகநூல் பக்கம் சான்றாக உள்ளது.

காவல் நிலையத்தில் தந்தையைக் காவல் விலங்குகள் அடித்த போது துணிந்து தடுக்க முற்பட்ட தனயன் என்ற முறையில் அவர் மீது எனக்குப் பெருமதிப்புண்டு. இந்த அறவுணர்வு அப்பா தொடர்பானது மட்டுமல்ல, அனைத்து வகைக் குமுக அநீதிகளையும் எதிர்த்துக் குமுறுகிற ஒன்று என்பதைச் சற்றொப்ப அகவை முப்பதுக்குட்பட்ட அவ்விளைஞரின் முகநூல் சுவடுகளிலிருந்து அறியலாம். பென்னிக்சின் முகநூல் பதிவுகள் பெரும்பாலும் பகிர்வுகளாகவே இருப்பினும் அவற்றைக் கவனமாகவே தெரிந்தெடுக்கிறார். சொந்த இடுகைகள் சிலவும் உள்ளன. இந்தப் பகிர்வுகளிலும் இடுகைகளிலும் இழையோடும் பென்னிக்சின் குமுக-அரசியல் அவரது பெருமையை நமக்கு உணர்த்தும் போதே. ‘ஐயோ எப்படிப்பட்ட ஒருவரை நாம் பறிகொடுத்திருக்கிறோம்’ என்ற துயரமும் நம் மனத்தில் நிறையச் செய்கிறது.

முள்ளிவாய்க்காலில் உச்சங்கண்ட ஈழத் தமிழர் இனவழிப்பு பென்னிக்ஸ் மனத்தில் ஆழமான தாக்கம் கொண்ட ஒரு நிகழ்வு என்பது அவரது பதிவுகள் பலவற்றிலும் வெளிப்படுகிறது: ப.சிதம்பரம் கைது செய்யப்படார் என்ற செய்தியைப் பகிர்ந்து விட்டு பென்னிக்ஸ் எழுதுகிறார்:

//இலங்கையில் எம் இனம் பதறிய போது குளிரூட்டப்பட்ட அறையில் சோபாவில் அமர்ந்து சோமபானம் அருந்தியது நினைவிருக்கா? என்னமோ தெரியல இப்பல்லாம் மோடி மேல மரியாதை அதிகரிக்குது.// (2019 ஆகஸ்டு 22)

தமிழினவழிப்பில் காங்கிரசுடன் திமுகவுக்கும் பங்குண்டு என்று பென்னிக்ஸ் உறுதியாக நம்புகிறார். என்ன சொல்கிறார் பாருங்கள்:

// காங்கிரஸ் மற்றும் திமுகவின் நாடகம் அதிகமாகக் காணப்படுகிறது. 2008 இலங்கைத் தமிழ் இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் என்பதை சாதி மதம் வேறுபாடின்றி தமிழர் என்ற முறையில் உணர்வுடன் இருக்க வேண்டும். மீண்டும் ஒரு இனப்படுகொலை மீனவப்படுகொலை நடைபெறாமல் வாக்களிக்க உணர்வு வேண்டும்.// (2019 பிப்ரவரி 26)

‘தமிழன் பெருமை’யிடமிருந்து அவரது பகிர்வு:

“இலங்கைத் தமிழர்களைக் கொன்ற காங்கிரசுடன் கூட்டணி வைச்சிட்டு அஇஅதிமுக கூட்டணியை விமர்சிக்க என்ன தகுதி இருக்கு திமுகவுக்கு?” (2019 பிப்ரவரி 21)

மகேஷ்குமார் என்பவரின் காணொலி இடுகையைப் பகிர்கிறார் பென்னிக்ஸ். தலைவர் பிராபாகரன் முதலில் வருகிறார். பிறகு இராசபட்சே தந்தி தொலைக்காட்சிக்கு அளிக்கும் பேட்டியில் இந்தியாவுக்கு நன்றி சொல்கிறார். இராசபட்சேயுடன் கனிமொழி, டி ஆர் பாலு, திருமாவளவன் குழுவினர் சந்திப்பு, கலைஞர் கருணாநிதி, வீரமணி, கனிமொழி, திருமாவளவன் மேடைக்காட்சி, இனவழிப்புக் காட்சிகள் தொடங்கி மு.க. ஸ்டாலின் – இராகுல் காந்தி கூடல், பாலச்சந்திரன் கொலையுண்டு கிடத்தல் என்று பல காட்சிகள் இந்தக் காணொலியில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ் இனத்துரோகி திமுக என்பது இதற்குத் தரப்பட்டுள்ள தலைப்பு, தமிழ் இனத்திற்கு துரோகம் விளைவித்த காங்கிரஸ் மற்றும் திமுகவை இவர்கள் மறுக்கும் கடவுள் மன்னித்து விட்டாலும் தமிழ் மக்களும் ஈழக் கண்ணீரும் என்றும் மன்னிக்காது என்று எழுத்திலும் ஒலியிலும் பறைசாற்றுகிறது இக்காணொலி. (2018 டிசம்பர் 18).

காங்கிரஸ் – திமுகவைச் சாடுகிறார் பென்னிக்ஸ் என்பதால் நரேந்திர மோதியை விட்டு வைக்கிறாரில்லை. மோதியை அதிர அதிர எள்ளி நகையாடும் பகிர்வுகள், படங்கள் ஏராளம். இபிஎஸ் ஒபிஎஸ் பற்றிய கேலிக்குப் பஞ்சமே இல்லை. பாமக மதிமுக தலைமைகளின் அரசியல் சந்தர்ப்பவாதத்தையும் தோலுரிக்கிறார்,

பென்னிக்சின் முகநூல் பக்கத்தை நீங்களும் பார்வையிடலாம்: Benni Imman Immanuvel.

இவ்வளவு உணர்வும் அறிவும் சேர்ந்த உயிர்ப் பெட்டகமாய் பென்னிக்ஸ் இருந்தார் என்பது அவருடைய சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தெரிந்திருக்கக் கூடும். இப்படி ஒருவர் வாழ்ந்தார், இவ்வளவு அநியாயமாகக் கொலையுண்டு மாண்டார் என்பதைச் சமூக ஊடகங்களால் மட்டுமே நம்மால் தெரிந்து கொள்ள முடிந்தது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டைக் கொலைக்கு உரிய நீதி கிடைக்கச் செய்வதுதான் இப்போது நாம் உறுதியாகச் செய்ய வேண்டியது.

– தோழர் தியாகு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.