தலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால் – அ.மார்க்ஸ்

தலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால்

இந்தத் தலைப்பில் இன்று The Hindu நாளிதழில் சின்னக் கட்டுரை ஒன்று வந்துள்ளது. தலித் அரசியலில் ஆர்வமுள்ள நண்பர்கள் தயவு செய்து இதைப் படிக்க வேண்டும். அலகாபாத்தில் உள்ள “ஜி.பி பந்த் சமூக அறிவியல் நிறுவனம்”என்பதன் இயக்குநர் பத்ரி நாராயணன் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.

என்னுடைய இந்தச் சிறு குறிப்பு அதன் மொழியாக்கம் அல்ல. அதனூடான சில எண்ணங்கள் எனலாம்.

இந்த கோவிட் 19 பெருந்தொற்று பல மாற்றங்களை நம் பார்வைக் கோணத்திலும் கூட ஏற்படுத்தியுள்ளது. தலித் சமூகம் ஓரங்கட்டப்படுவது என்பது குறித்த பேச்சுக்கள் விவாதங்கள் தற்போது குறைந்துள்ளன.

புலம்பெயர் தொழிலாளிகள் மோடி அரசால் கைவிடப்பட்டது, அவர்கள் நடந்தே பல நூறு மைல்களை மூட்டை முடிச்சுகளுடன் கடக்க நேர்ந்து, பலர் பாதியிலேயே செத்து வீழ்ந்தது, திரும்பி வந்தவர்களிலும் கூட சிலர் ஊருக்குள்ளேயே நுழைய விடாமல் தடுக்கப்பட்டது, பல மட்டங்களில் தொழிலாளிகள், ஊழியர்கள் முதலானோர் வேலை இழந்து கொண்டிருப்பது, பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சையிலும் கூட அடித்தள மக்கள், ஏழை எளியவர்களுக்குத் தரமான மருத்துவம் கிடைக்காமற் போனது, நெருக்கமான நகர்ப்புறக் குடிசைகளில் வாழும் ஏழை எளிய மக்கள் இந்த நோயால் ஒப்பீட்டளவில் அதிகம் தாக்கப்படும் அபாயம் குறித்த கவலை வெளியிடப்படுவது என்பதாகத்தான் இன்று உரையாடல்கள் முன்னுக்கு வந்துள்ளன. தலித்கள் மீதான வன்முறைகள் ஒடுக்கல்கள் முதலியன சற்றே பின்னுக்குப் போயுள்ளன.

இதில் கவனத்துக்குரிய அம்சம் என்னவெனில் இப்போது நான் சொல்லியுள்ள புலம்பெயர்ந்தோர், நகர்ப்புறச் சேரிவாழ் மக்கள் எனப் பெரும்பாலோர் தலித்கள் என்பதுதான். ஆனால் தலித் இயக்கங்கள் புலம்பெயர் தொழிலாளிகள், நகர்ப்புற குடிசைவாழ் மக்கள் ஆகியோரின் பிரச்சினைகளைத் தலித் கோணத்திலிருந்து பார்க்கவில்லை.

இதன் விளைவு கடந்த நான்கு மாதங்களில் தலித் அரசியல் மற்றும் தலித் சொல்லாடல்களுக்கு பொதுத் தளத்தில் இடமில்லாமல் போய்விட்டது. தலித் கட்சிகள், தலித் தலைவர்கள் ஆகியோரும் சற்றே பின் நிலைக்குச் செல்ல நேர்ந்துள்ளது. பழைய தலைவர்களான மாயாவதி, பாஸ்வான் போன்றோர் மட்டுமல்ல, புதிய இரண்டாம் கட்டத் தலைமை என நம்மைப் போன்றவர்களால் விதந்து கொண்டாடப்பட்ட ஜிக்னேஷ் மேவானி, சந்திர சேகர ஆசாத் முதலானோரும் இன்று காட்சியில் இல்லை.

புலம்பெயர்ந்த தொழிலாளிகள் முதலானோர் கொரோனாவுக்கு முன்பே இந்தியா முழுவதும் கடும் சுரண்டலுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருந்தனர். அப்போதெல்லாம் தலித் இயக்கங்கள் அவற்றைப் பேசியதே இல்லை. இங்கு மேலுக்கு வந்த மொழி இனம் போன்ற பிரச்சினைகளுக்கு அளித்த முக்கியத்துவம் அவற்றுக்கு அளித்ததில்லை.

தலித் அமைப்புகள் தீண்டாமை மற்றும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் பேசுவதும் முதன்மையானவை என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. ஆனால் காவல்துறை அத்துமீறல் முதலானவற்றில் தலித்கள் மற்றுமல்ல, மற்ற அடித்தள மக்கள், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோர், தெரு வணிகர்கள் முதலானோரும் பாதிக்கப்படுகின்றனர். அதை எல்லாம் பேசவே கூடாது என்கிற நிலையும் கூட தலித் அரசியலார் மத்தியில் இருந்தது.

தற்போது சாத்தான்குளம் பிரச்சினைக் காவல்துறை அத்துமீறல் என்கிற வகையில் உலக அளவில் கவனம் பெற்றது. ஆம் உலக அளவில் கவனம் பெற்றது. தந்தையும் மகனும் எந்தக் குற்றமும் செய்யாமலேயே கடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது, பெருந்தொற்றின் ஊடாகப் போலீசுக்குக் கொடுக்கப்படும் அதிகாரம், அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்துவது, காவல்துறையின் நண்பன் எனும் பெயரில் ரவுடிகள் காவல் நிலையங்களில் செய்யும் அட்டகாசம், தொடர்ந்து காவல்துறையால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் சிறு கடைகளின் சொந்தக்காரர்கள் மற்றும் வணிகச் சமூகம் இப்படியான அத்துமீறல்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என நினைத்தது – என்பவை எல்லாம் இந்த மிகப் பெரிய எழுச்சிக்குக் காரணமானது.

அந்த நேரத்திலும் கூட நம் தலித் நண்பர்கள் சிலர் இந்த இரட்டைக் கொலைகள் குறித்துப் பேசுவதை கண்டித்துப் பதிவுகள் செய்தபோது எனக்கு வருத்தமாக இருந்தது. ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் எழுதும் ஒரு உயர் வருண எழுத்தாளர், எனக்கும் மிக வேண்டியவர்தான், ஒரு நாள் தொடர்புகொண்டு தஞ்சைப் பகுதியில் குறவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த நாங்கள் வெளியிட்ட கள ஆய்வு அறிக்கையிலிருந்து சில தகவல்களை எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டார். தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். உடனே அவர் இன்னோரு கேள்வியை முன்வைத்தார். குறவர்கள் மீதான போலீஸ் கொடுமைகள் குறித்து கேட்டார். நான் விரிவாகப் பழங்குடி மக்கள் எவ்வாறெல்லாம் தமிழகத்தில் காவல்துறையால் பொய்வழக்குகள் மற்றும் வன்முறைகளுக்கு ஆளாகின்றனர் எனக் கூறினேன். உடனே அவர் வேறொரு கேள்வி கேட்டார். ஒரு மாதத்திற்கு முன்னர் தஞ்சையில் காவல்துறையால் தேடப்பட்ட பழங்குடிக் குறவர் ஒருவர் தூக்கில் தொங்கினார். காவலர்களே கொன்று தொங்கவிட்டதாக ஒரு கருத்து உண்டு. அது குறித்து என் கருத்தைக் கேட்டார். ‘ஏன் சார் சாத்தான்குளத்தில் இருவர் கொல்லப்பட்டது மட்டும் பெரிய பிரச்சினை ஆகியது, ஆனால் இந்த பழங்குடிக் குறவரின் இறப்பு பெரிய பிரச்சினை ஆகவில்லை?’ என்றார். பதிலுக்கு நான் கேட்டேன் நீங்கள் ஏன் அவர் தூக்கில் தொங்கியபோது அதை ஒரு செய்தியாக்காமல் இப்போது ஒரு மாதத்திற்குப் பின் சாத்தான்குளத்துடன் ஒப்பிட்டு இதைப் பேச வந்துள்ளீரகள். உங்ளின் உள் நோக்கம் என்ன என்றேன்.

வடக்கிற்கும் தெற்கிற்கும் சாதி அமைப்பில் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. இதைப் பலமுறை நான் சொல்லியுள்ளேன். அங்கே சத்திரியர்கள் உண்டு. இங்கே இல்லை. பிற்படுத்தப்பட்டோரே அங்கு இரண்டு மட்டங்களில் உள்ளனர். கன்ஷிராம் இந்த ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களையும் இணைத்து பார்ப்பன – சத்திரிய ஆதிக்கத்திற்கு எதிராக “பகுஜன்” (புத்த பகவன் பயன்படுத்திய ஒரு சொல்) என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்தார். அந்த வழியில் சென்றுதான் மாயாவதியும் ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்தார். ஆனால் பின்னாளில் அவர் பகுஜன் என்பதை ‘சர்வஜன்’ என மாற்றிப் பார்ப்பனர்களுடன் கூட்டணி வைத்தார். இன்று நிலைமை என்ன என்பதை நாம் பார்த்துக் கொண்டுள்ளோம்.

இங்கே நம் தமிழகத்தில் ஒரு தலித் எழுத்தளரை வைத்து “இந்துத்துவ அம்பேத்கர்” என்றொரு நூலை பெருஞ் சங்கிகளில் ஒருவரான பத்ரி சேஷாத்ரி வெளியிட்டார். என்ன கொடுமை. வாழ்நாள் பூராவும் இந்துமதத்தின் சாதீயம், திண்டாமை ஆகியவற்றை எதிர்த்து, “பிறக்கும்போது இந்துவாகப் பிறந்தேன். மரிக்கும் போது இந்துவாக மரிக்க மாட்டேன்” எனச் சொல்லி இந்து மதத்தின் தீண்டாமைக் கருத்தியலை எதிர்த்து அதை விட்டு வெளியேற்றியவர் அவர். அந்த நூலுக்கு பௌத்தவியல் அறிஞர் ஓ.ர.ந. கிருஷ்ணன் அவர்கள்தான் மிக்க பதட்டத்துடன் ஒரு மறுப்பு நூலை எழுதினார். தலித அமைப்புகள் மற்றும் அம்பேத்கரைக் கொண்டாடும் அறிவுஜீவிகள் ஆகியோரிடம் இருந்து எந்த எதிர்ப்பும் அதற்கு வரவில்லை.

அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி இந்தியாவெங்கும் தலித் இயக்கங்கள் ஒரு பேரெழுச்சி பெற்றன. அந்த எழுச்சி இன்று தொய்வுற்றுள்ளதை யாரும் மறுக்க இயலாது. இன்று கோவிட் பெருந்தொற்று எல்லாவற்றையும் மறு சிந்தனைக்கு ஆளாக்கியுள்ளது.

தலித் அமைப்புகளும் இந்தப் பின்னணியிலிருந்து ஒரு மறு ஆய்வைத் தொடங்க வேண்டும். இங்கு ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ளவர்கள், பழங்குடிகள், சிறுபான்மை மக்கள், நகர்ப்புறச் சேரிகளில் வாழ்வோர், புலம்பெயர் தொழிலாளிகள் என்பதாக தலித் அரசியல் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பகுஜன் அமைப்பாக மாற வேண்டும். “வர்க்கம்” எனும் சொல்லையே பிற முதலாளியச் சமூகம் போல தீண்டத்தகா ஒன்றாகப் பார்க்கக் கூடாது.

அ. மார்க்ஸ்

14.07.2020

2 Comments

  1. அன்புள்ள மார்க்ஸ். இந்துத்துவ அம்பேத்கருக்கு எதிராக எழுதப்பட்ட நூலாக நீங்கள் சொல்வது ஒ.ரா.ந. கிருஷ்ணன் அவர்களின் ‘இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா?’ என்ற நூலைத்தான் குறிக்கிறீர்கள் என நினைக்கிறேன். நூலின் பின்னட்டையில் ” இந்து மதத்தின் புதிர்களையும் வன்முறைகளையும் தோலுரித்து மிக விரிவான ஆய்வுகளைச் செய்தவரும், மிகப் பெரிய மக்கள் திரளை இந்து மதத்திலிருந்து விடுவிடுத்து பௌத்தம் தழுவச் செய்தவருமான அண்ணன் அம்பேத்கரை ஓர் இந்துத்துவவாதியாக நிறுவ முயலும் வன்மத்துக்கு எதிர்வினையாக எழுதப்பட்ட அற்புதமான நூல் இது ‘ஆனா துரதிருஷ்டம் என்னவென்றால் இந்த அற்புதமான நூலை! அதே கிழக்குப் பதிப்பகம்தான் வெளியிட்டுள்ளது.

  2. முதலில் இவர்கள் அம்பேத்கரைப் படிக்கவேண்டும். வசுமித்ர தற்சமயம் முகநூலில் எழுதிவரும் பதிவுகளில் திறனாயப்படுகின்ற அம்பேத்கரது கருத்துகளுக்கு எந்த எதிர்வினையையும் தலித்திய, அம்பேத்கரியவாதிகள் தர மறுப்பதின் மர்மமென்ன??

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.