இராம் அவதேஷ் சிங் மறைந்தார்!

[18.6.1937 – 20.7.2020]

தம் வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காக அரும்பாடுபட்டவரும் பி.பி.மண்டல் குழு அமைய காரணமாக இருந்தவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர் பேரவைத் தலைவர், இராம் அவதேஷ்சிங் அவர்கள் 20.7.2020 அன்று மாலை பீகார் தலைநகர் பாட்னாவில் இயற்கையெய்தினார் என மிக்கத் துயரத்துடன் தெரிவிக்கிறோம்.

19.8.1978-இல் சென்னையில் அமைக்கப்பட்ட அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் வகுப்பினர் பழங்குடியினர் மதச் சிறுபான்மையினர் பேரவை (All India Federation of Backward Class, Scheduled Castes, Scheduled Tribes and Religious Minorities)-இன் தலைவராக இருந்து செயல்பட்டார்.

17.9.1978 முதல் 19.10.1978 வரை பீகாரின் எல்லா மாவட்டங்களிலும் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவை மேற்படி ஒடுக்கப்பட்டோர் பேரவையின் புரவலர் தலைவர் வே.ஆனைமுத்து, சீர்காழி மா.முத்துசாமி ஆகியவர்களை எழுச்சி உரையாற்றச் செய்து கொண்டாடினார். இதன் விளைவாக பீகார் மாநில அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு முதன்முதலாக 31.10.1978 அன்று 20% இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்.

23.3.1979 அன்று புதுதில்லியில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும் மேற்படி பேரவையும் இணைந்து தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாப் பேரணியும் பொதுகூட்டமும் நடத்தியது. இந்நிகழ்வில் அப்போதைய துணைப் பிரதமர் பாபு ஜகஜீவன்ராம் அவர்களும் அப்போதைய உள்துறை துணையமைச்சர் தணிக்லால் மண்டல் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

25.3.1979-இல் அப்போதையப் பிரதமர் மொரார்ஜி தேசாயை வே.ஆனைமுத்துவும் இராம் அவதேஷ்சிங்கும் மற்றும் பல மாநிலங்களின் பிரதிநிதிகளும் சந்தித்ததன் அடிப்படையில்தான் பிந்தேசுவரி பிரசாத் மண்டல் (B.P.Mandal) தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவின் பரிந்துரை நாடாளுமன்றத்தில் வைக்கப்படவும் அது செயலாக்கம் பெறவும் இடைவிடாது நாடாளுமன்றத்தில் போராடிய பெருமகன் இராம் மனோகர் லோகியா கொள்கை வழி வந்தவரான தோழர் இராம் அவதேஷ்சிங் அவர்கள்.

பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும் (1969 – 71), நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் (1977 – 79), நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் (1986 – 92) தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினராகவும் (2007 – 2010) அவர் பணியாற்றியவர்.

அந்தப் பெருமகனாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் மனம் கசிந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.