புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலை அவமதிப்பு: குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (26.07.2020) விடுத்துள்ள அறிக்கை:

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடந்த 23.07.2020 அன்று புதுச்சேரி வில்லியனூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவித் துண்டை அணிவித்து சில விஷமிகள் அவமரியாதைச் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் வில்லியனூர் காவல்துறையினர் இதுவரையில் குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை.

மேலும், மன நலமில்லாமல் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் எம்.ஜி.ஆர். சிலையை அவமதித்ததாக வழக்கை முடித்துவிட காவல்துறையினர் முயற்சிக்கின்றனர். உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் காவல்துறையினர் செயல்படுகின்றனர்.

தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் இச்சம்பவத்தைக் கண்டித்ததோடு குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமெனக் கோரியும் புதுச்சேரி அரசு குற்றவாளிகளைக் கைது செய்வதில் அலட்சியமாகவே உள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அண்மைக் காலமாகத் தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் இழிவான செயல் அதிகரித்து வருகிறது. இதனால், சமூகத்தில் தேவையில்லாத பதட்டமான சூழல் உருவாகிறது. அரசு கடும் நடவடிக்கை எடுத்து சிலை அவமதிப்பு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் எம்.ஜி.ஆர். சிலை அவமதிப்புக் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.