இருளர் சான்று கொடுத்தால் எங்களுக்கு இழிவு ஏற்படும்: ஆதிக்கத்தின் குரல்!

17 வயதே நிரம்பிய பழங்குடி இருளர் மாணவி தனலட்சுமி சாதிச் சான்றுக் கேட்டதற்கு இழிவுப்படுத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் குறித்த புகார் இது. இச்சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், சமூகத்தில் பழங்குடி இருளர் இன மக்கள் அனுபவிக்கும் சாதி ரீதியான கொடுமைகளை எடுத்துரைப்பதாகவும் உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பரங்கினி கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டியின் மகள் தனலட்சுமி (வயது 17) சென்ற 25.07.2020 அன்று, கிளியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகார்:

ஐயா

பொருள்: பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த என்னை பலர் முன்னிலையில் இழிவு செய்யும் விதத்தில் நடந்து கொண்ட பெருமாள் (வயது சுமார் 40) த/பெ ராமகிருஷ்ண கவுண்டர், ஏழுமலை (வயது சுமார் 55), துரைக்கண்ணு(56) த/பெ தேசிங்கு கவுண்டர் மற்றும் கிராம உதவியாளர் கோபால் (37) பெருமாள் கவுண்டர் ஆகியோர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015 இன் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோருதல் – தொடர்பாக.

வணக்கம்.

நான் மேற்படி முகவரியில் என் பெற்றோருடன் வசித்து வருகிறேன். மேற்படி பொருள் தொடர்பாக கீழ்கண்டவற்றை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

(1). பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த நான் மார்ச் 2020 ல் +2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு இதுவரை விண்ணப்பித்தும் இனச்சான்று வழங்கப்படவில்லை. எங்கள் ஊரைச் சேர்ந்த சமூக சேவகர் இரா.சிவராமன் உதவியோடு பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி (எ) கல்யாணி அவர்களைச் சந்தித்து அவரது உதவியோடு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு 18.07.2020 அன்று இனச்சான்றுக்காக விண்ணப்பித்தேன். இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானது.

இதையடுத்து நேற்று (24.07.2020), காலை 10 மணி அளவில், வானூர் ஒன்றியத்தின் மக்கள் நீதி மையம் கட்சியின் செயலாளர் உள்ளிட்டு நால்வர் எங்கள் வீட்டிற்கு வந்து எனது மேற்படிப்பு செலவுக்கு என்று ரூ 10,000/- நிதி அளித்ததுடன், எங்கள் கிராமத்தில் உள்ள 30 இருளர் குடும்பங்களுக்கும் கொரோனா நிவாரணமாக அரிசி உள்ளிட்ட காய்கறிகள் வழங்கினார்.

அடுத்து காலை 11 மணி அளவில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் எங்கள் கிராமத்திற்கு வந்து எங்கள் வீட்டுக் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களை விசாரித்தனர். பின்பு எங்களை எங்கள் ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்திற்கு வரச் சொன்னார்ர்கள்.

2) எங்கள் கிராமத்தின் உதவியாளர் கோபால் என்பவரின் தூண்டுதலின் பெயரில் எங்களுக்கு இந்து இருளர் எனச் சான்று வழங்கக் கூடாது என்று ஒரு மனுவினை தயாரித்து வருவாய் கோட்டாட்சியரிடம் ஊர் மக்கள் சார்பில் ஐவர் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனர்.

விசாரணைக்குக் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சுமார் 12 மணி அளவில் நானும் என்னுடைய பெற்றோர்கள் உறவினர்கள் என 30 பேர் சென்றோம். அப்போது கிராம மக்கள் சுமார் 50 பேர் அங்கு வந்திருந்தனர். அவர்கள் மேற்படி வருவாய் கோட்டாட்சியரிடம், ‘‘இவர்கள் இருளர் கிடையாது.. கூடை கட்டி நாயக்கர்… மெத்தை வீடு வைத்திருக்கிறார்கள்.. நிலமெல்லாம் இருக்கிறது..” என்று கூறினார்கள். நாங்கள் எங்களுக்கான ஆதாரங்களை அசல் சான்றுகளுடன் காண்பித்தும். இதனையடுத்து மேற்படி ஏழுமலை என்பவர், ‘‘இவர்களுக்கு இருளர் எனச் சான்று கொடுத்தால்… கோவிலில் முதல் மரியாதை பெற்று வரும் இவர்களால்.. எங்களுக்கு இழிவு ஏற்படும்.. அவர்களுக்கு இருளர் எனச் சான்று கொடுத்தால் எங்கள் கோவிலில் அவர்களுக்கு முதல் மரியாதை கொடுக்க மாட்டோம்” என்று கூறினார்.

அங்கிருந்த எங்களது உறவினர் ஆறுமுகம் த/பெ ஏழுமலை என்பவர் நாங்கள் பாம்பு, தேள் கடி அனைத்து விஷக் கடிகளுக்கு மருந்து கொடுப்போம் என்றார். அதற்கு மேற்படி ஏழுமலை, ‘‘பாம்பை இப்போது பிடிக்கச் சொல்லுங்கள்..” என்று கூறினார். நாங்கள் அதற்கு எலி, முயல், பாம்பு எல்லாம் பிடித்து வந்தோம். அரசு தடை செய்ததால் இப்போது நிறுத்திவிட்டோம். இப்போதும் எங்கள் வீட்டில் எலிக்கான ஊதுபானை, முயல்கண்ணி, கொளதாரி வலை போன்றவை எங்கள் வீட்டில் உள்ளன என்று கூறினோம்.

அதையெல்லாம் மறுத்து ஊர்க்காரர்கள், ‘‘அவர்களுக்கு எம்.பி.சி என்றுதான் சான்று கொடுக்க வேண்டும்” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘‘எம்.பி.சி என்றால்.. எங்கள் வீட்டில் எங்கள் பெண் எடுப்பீர்களா” என்று கேட்டேன். அதற்கு அங்கிருந்த மேற்படி பெருமாள், ‘‘உனக்கு அவ்வளவு திமிரா” என்று என் தலையில் தட்டி கழுத்தைப் பிடித்து கீழே தள்ளினார். அருகில் இருந்த எனது தாயார் தாட்சாயினி என்னை கீழே விழாமல் தடுத்து விட்டார். உடனே அங்கிருந்த என்னுடைய உறவினர்கள் அனைவரும், ‘‘எப்படி எங்கள் பெண்ணைப் பிடித்து கீழே தள்ளலாம்” என்று கேட்டனர். இச்சம்பவத்தைப் பார்த்து அங்கிருந்த ஊர்மக்கள் சிரித்தனர். எனக்கு மிகவும் கேவலமாகப் போய்விட்டது.

அங்கிருந்த வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டு வருவாய் துறை அதிகாரிகள் எங்களைக் கலைந்து போகும்படி கூறினார்கள். மேலும் மேற்படி சம்பவத்தின்போது மேற்படி துரைக்கண்ணு என்பவர் ‘‘இவர்கள் இந்தச் சாதியைச் சொல்லி அவ்வப்போது போலீசில் புகார் கொடுக்கிறார்கள், இவர்களுக்குச் இந்த சாதிச் சான்று கொடுக்க கூடாது” என்று கூறினார்.

ஐயா அவர்கள், மேற்படி பெருமாள் த/பெ ராமகிருஷ்ண கவுண்டர், ஏழுமலை (55), துரைக்கண்ணு த/பெ தேசிங்கு கவுண்டர் மற்றும் கிராம உதவியாளர் கோபால் த/பெ பெருமாள் கவுண்டர் ஆகியோர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து எங்களுக்கு பாதுகாப்பும் நீதியும் கிடைக்க உதவுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

மேலும், புகாரின் நகலை 1) காவல் கண்காணிப்பாளர்,விழுப்புரம் மாவட்டம், 2) காவல் துணைக் கண்காணிப்பாளர், கோட்டக்குப்பம், 3) சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, விழுப்புரம் ஆகியோருக்கு அனுப்பி உள்ளார்.

தற்போது இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்ற எண். 1797/2020 பிரிவுகள் 3(1)(r), 3(1)(s) எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், 323 இ.த.ச., 4 பெண்கள் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், கிளியனூர் காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் விழுப்புரம் ஊடகவியலாளர் காரல் மார்க்ஸ் எழுதிய ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழ் செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து இப்புகாரை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இப்புகார் குறித்து இரண்டு வாரத்திற்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.