இருளர் என்று சொன்ன பிறகுதான் கும்பல் கூடி அடித்தார்கள்

இருளர் என்று சொன்ன பிறகுதான் கும்பல் கூடி அடித்தார்கள். குடும்பச் செலவுக்கு அடகு வைத்து எடுத்துச் சென்ற 7800 ரூபாய் பணத்தையும் மீதமிருந்த 1 கிராம் தாலிக் குண்டையும் திருடித் தாக்கிய கும்பல்.

விழுப்புரம் மாவட்டம், கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இருளர் அ.மாரி மனைவி வசந்தா (45) இருவரும் திண்டிவனம் அருகே உள்ள வைரபுரம் விஜி என்பவரின் தோட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள்.

சேத்துபட்டு சென்று விட்டு, 27-ஆம் தேதி, இரவு சுமார் 7.30 மணியளவில், வெள்ளிமேடுபேட்டை வந்து கீழ்மலையனூர் வழியாக இருசக்கர வாகனத்தில் மேற்படி வைரபுரம் போய்க் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று சுமார் 5 வயது குழந்தை குறுக்கே ஓடி வந்துள்ளது. குழந்தை மீது மோதுவதைத் தடுக்க திடீரென்று பிரேக் போட்டுள்ளார். அவரும் வண்டியுடன் கீழே விழுந்துள்ளார். குழந்தையும் கீழே விழுந்துள்ளது. இதில் குழந்தைக்கு லேசாக அடிபட்டுள்ளது.

உடனே அங்கிருந்த கோபு, மோகன், பிரபாகரன், ஞானவேல், குமார், ஏழுமலை, கேசவன், வேலாயுதம் உள்ளிட்டோர் கும்பலாகச் சேர்ந்துகொண்டு, மாரியைக் கடுமையாக அடித்துள்ளார்கள்.

அங்கிருந்த ஒரு மின் கம்பத்தில் மாரியைக் கட்டி வைக்க முயற்சித்துள்ளனர்.

‘என்னை அடிக்காதீர்கள்.. நான் இருளர் சாதியைச் சேர்ந்தவன்… இந்த ஊரில் எனக்குச் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள்” என்று கெஞ்சியுள்ளார். அதன்பிறகு மின்கம்பத்தில் கட்டவில்லை. ஆனால் கடுமையாக அடித்துள்ளனர்.

கேள்விப்பட்டு, அந்த ஊரில் உள்ள மாரியின் உறவினர்களான பெருமாள் உள்ளிட்ட உறவினர்கள் சென்றுள்ளனர். ‘‘இவர் அனந்தமங்கலம் ஏரியாவைச் சேர்ந்த எங்கள் சாதிக்காரர்.. எங்கள் உறவினர்தான்…” என்று கூறியுள்ளனர். அதன்பிறகும் பிரபாகரன் என்பவர் மாரியைத் தொடர்ந்து அடித்துள்ளார்.

மாரி தனது, குடும்பச் செலவுக்காக கடன் வாங்கியிருந்த 3000 ரூபாய், மோதிரத்தை அடகு வைத்து வாங்கிவந்த 5000 ரூபாய் என மொத்தம் ரூ. 8000/- த்தில் ரூ.200 செலவு செய்தது போக, மீதமிருந்த ரூ. 7800/- ஐ மேற்படி சட்டைப் பைக்குள் வைத்திருந்துள்ளார். பணத்துடன் அவரது மனைவியின் ஒரு கிராம் எடையுள்ள இரு தாலிக் குண்டும் காணவில்லை. (அடகு வைக்க எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் அடகு வைக்கவில்லை. மோதிரத்தை மட்டும் அடகு வைத்துள்ளார்)

அவரைத் தாக்கிய கும்பலில் ஒருவர் சட்டைப் பையில் கையை விட்டு செல்பேசி உள்ளிட்டவற்றை எடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த, வெள்ளிமேடு பேட்டை போலீசார்தான் மேற்படி நபர்களிடம் இருந்து மாரியின் செல்பேசியை வாங்கிக் கொடுத்துள்ளார். அவர்தான் மாரியில் 7800 ரூபாய் பணத்தையும், 1 கிராம் எடையுள்ள இரு தாலிக் குண்டையும் எடுத்துள்ளார்.

மாரியைத் தாக்கிய கீழ்மலையனூர் வரத ரெட்டியார் மகன்களான கோபு, மோகன், பிரபாகரன் மற்றும் ஞானவேல்குமார், கேசவன், ஏழுமலை, வேலாயுதம் ஆகியோர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 2015-ன்படி நடவடிக்கை எடுத்து, திருடப்பட்ட பணம் மற்றும் நகைகளை மீட்டுத் தருமாறு வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வன்கொடுமைப் புகார்கள் மட்டுமல்லாமல் பொதுவாகவே வெள்ளிமேடுப்பேட்டை காவல் நிலையம் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக செயல்படுவதில்லை. பணம், சாதி ஆதிக்கம் என குற்றமிழைத்தோருக்கு ஆதரவாகவே செயல்படுகின்றது.

மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் வெள்ளிமேட்டுபேட்டை காவல் துறையினருக்குச் சட்டப்படி செயல்பட அறிவுறுத்த வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.