புதிய கல்விக் கொள்கை – சில குறிப்புகள் (2): அ.மார்க்ஸ்

புதிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) சில குறிப்புகள் (2)

மத்தியில் குவியும் அதிகாரங்கள்..

ஜந்த்யாலயா பி.ஜி.திலக் ஒரு முக்கிய கல்வியாளர். ஒரு முப்பதாண்டுக் காலமாக இந்திய அரசின் கல்விக் கொள்கைகளை விமர்சித்து வருபவர். இன்றைய NEP 2020 அறிக்கை குறித்த அவரது கட்டுரை நேற்றைய (ஆகஸ்ட் 03) The Hindu நாளில் வெளிவந்துள்ளது. அதில் அவர் தொடங்கும்போதே “சில துணிச்சலான முடிவுகளை முன்வைக்கும் அறிக்கை” என இந்தக் கல்விக் கொள்கையைப் பாராட்டுகிறார். “கல்வியை மக்களுக்கான ஒரு ‘பொதுப் பொருள்’ (public good)” என இவ்வறிக்கை குறிப்பதைத்தான் அவர் அப்படிச் சொல்கிறார். அப்படிக் கல்வியை எல்லா மக்களுக்குமானப் பொதுப்பொருள் என ஏற்பது “கல்வி குறித்த திட்டமிடல், கல்வியை மக்களிடம் கொண்டு சேர்த்தல், நிதி ஒதுக்கீடு செய்தல் ஆகியவற்றில்” ஒரு முக்கியமான முன்னேற்றம் என வியக்கிறார்.

பா.ஜ.க அரசுகள் இதுவரை கல்வியை இப்படிப் பொதுப் பொருளாக ஏற்றுக் கொண்டதில்லை. இந்த அறிக்கையில் அப்படிச் சொல்லியுள்ளதுதான் அவருக்கு இத்தனை வியப்பு. இது குறித்துச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

கல்விக் கொள்கைக் குறித்த எனது மூன்று நூல்களிலும் இது தொடர்பாக எழுதியுள்ளேன். சற்றுச் சுருக்கமாக இங்கே:

GATT ஒப்பந்தம் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். சோவியத் வீழ்ச்சிக்குப் பிந்திய நவதாராளவாத உலகில் எந்தத் தடையும் இன்றி எந்த நாடும் எந்த நாட்டுக்குள்ளும் புகுந்து வணிகம் செய்து லாபம் சம்பாதிக்க வழி வகுத்ததுதான் GATT ஒப்பந்தம். ஆனால் இதன்படி பொருள்களைத்தான் வாங்கவும் விற்கவும் செய்யலாமே ஒழிய மானுட வாழ்வின் அத்தியாவசியங்களானக் காற்று, தண்ணீர் முதலான இயற்கையின் கொடைகளும், கல்வி, மருத்துவம் முதலான சேவைகளும் அந்த ஒப்பந்தத்திற்குள் அடங்காது. அதாவது அவற்றை வாங்கவோ விற்கவோ இயலாது. ஆனால் லாபம் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட கார்பொரேட் கொடூரர்கள் இவற்றையும் விட்டு வைப்பார்களா? அடுத்து அவர்கள் GATS ஒப்பந்தம் ஒன்றை முன் வைத்தார்கள். அதாவது மேற்குறிப்பிட்ட பணித்துறைகளும் (services) இதன் மூலம் வணிகத்திற்கு உட்பட்டவை ஆயின.

இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட வளர்ச்சி அடைந்த நாடுகள் கூடத் தயங்கின. எனவே இரண்டு கட்டங்களில் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என முடிவாயிற்று. முதல் கட்டக் கையொப்பமிடலுக்கு offer என்று பெயர். அதாவது நமது சேவைகளை வணிகத்திற்கு “அர்ப்பணிப்பது”. இரண்டாம் கட்டமாகக் கையெழுத்திடுவதற்குப் பெயர் commitment. அதாவது கடப்பாடு. அத்ந்தக் கையொப்பமும் ஆகிவிட்டால் அதன்பின் அந்த நாடு அதிலிருந்து மீள முடியாது.

இந்தியாவைப் பொருத்தமட்டில் சுவையான அம்சம் என்னவெனில் இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது பா.ஜ.க தான். இரண்டு முறைகளும், மக்களோடு எந்த விவாதமும் இல்லாமல், சொல்லப்போனால் விவரம் சொல்லாமலேயே கையொப்பம் இட மத்திய அமைச்சர்கள் அனுப்பப்பட்டனர்.

முதல்முறை இது தொடர்பான மாநாட்டை UNESCO கூட்டியபோது இங்கு வாஜ்பேயி பிரதமர். சீனியர் அமைச்சரான முரளி மனோகர் ஜோஷி சென்று கையொப்பமிட்டு வந்தார். இரண்டாம் முறை கையொப்பமிட நாடுகள் தயங்கின. எனவே அடுத்த பத்தாண்டுகளுக்குப் பின்தான் இந்த மாநாட்டை நைரோபியில் கூட்ட முடிந்தது அப்போதும் பாஜக ஆட்சி. நரேந்திர மோடி அமைச்சரவையிலிருந்த வணிகத்துறை அமைச்சர் சென்றார் கையெழுத்திடத் தயாராக. ஆனால் இம்முறையும் உலக நாடுகள் ஒப்புதல் அளிக்கத் தயங்கியதால் அது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

முதல்முறை முரளி மனோகர் ஜோஷி கையெழுத்திட்டபோது அங்கு என்ன சொன்னார் தெரியுமா?

“உயர்கல்வி என்பது படிக்கிற அந்தத் தனிநபருக்குத்தான் பயனளிக்கிறது. சமூகத்திற்கு அதனால் எந்தப் பயனும் இல்லை. எனவே அதற்குச் செலவிடும் தொகைக்கு அந்தத் தனிநபரே பொறுப்பேற்க வேண்டும். ஆகையால் உயர்கல்வியை ஒரு ‘பொதுமக்களுக்கான பொருளாக’ (public good) கொள்ள முடியாது. அதை ஒரு ‘திறன்சாராப் பொருள்’ (non-merit good) என்றே கொள்ள வேண்டும்” என்றார் ஜோஷி.

காற்று, நீர், கல்வி எல்லாம் மக்களுக்கான பொதுப் பொருட்கள். இயற்கை நமக்கு உவந்தளித்த கொடைகள். அவற்றை விற்றுக் காசாக்கத் துணிந்தவர்கள் அதற்கு ஆதாரமாகக் கல்வி ஒரு பொதுப் பொருள் அல்ல எனச் சொல்லத் துணிந்தனர். இன்று சொந்த நாட்டுக்குள்ளேயே தண்ணீரை விற்கத் துணிந்திருப்பவர்கள் தானே. எதைத்தான் விற்கத் துணியமாட்டார்கள் இந்த தேஷ்பக்தாஸ்!

அப்படிச் சொல்லி வந்த இவர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் ஓரிடத்தில் கல்வி ஒரு மக்கள் சொத்து, பொதுச் சொத்து- public good – எனச் சொன்னால் ஜந்த்யாலா சாருக்கு வியப்பு வரத்தானே செய்யும்.

ஆனால் இவர்களிடமிருந்து வரும்போது இதற்கெல்லாம் எந்தப் பொருளும் கிடையாது. இதையும் அவர்கள் எந்த இடத்தில் சொல்கிறார்கள் என்பது முக்கியம். கல்வியை வணிகமயப்படுத்துவது குறித்துப் பேசும்போதுதான் இதைச் சொல்ல வருகிறார்கள். தனியார் துறை குறித்துப் பேசும்போது அவற்றின் மீது “light but tight regulation” மேற்கொள்ளப்படுமாம். “மெலிதான ஆனால் இறுக்கமான” – என்றால் இதெல்லாம் என்ன வார்த்தை விளையாட்டு! தனியார் துறை லாபம் கொழிக்க என்னென்ன செய்வார்கள் என்பது நமக்குத் தெரியாதா? கோவிட் 19 கொடுமையைப் பயன்படுத்தித் தனியார் மருத்துவமனைகள் அடிக்காத கொள்ளைகளா? “ஒவ்வொரு நிறுவனமும் தனது நிதி வரத்து குறித்து வெளிப்படையாக இருக்க வேண்டும்” என இந்த அறிக்கையில் சொல்லப்படுகிறது, சொன்னால் போதுமா? ஏதோ ஒரு கணக்கைக் காட்டிவிட்டு அவர்களுக்குப் போகத் தெரியாதா?

முந்தைய நகல் அறிக்கைகளில் இருந்த சில நல்ல அம்சங்கள் இந்த இறுதி அறிக்கையில் மாயமாக மறைந்துவிட்டன. கல்விக்கான செலவுகள் இரண்டு மடங்கு ஆக்கப்படும் என்று முந்திய நகல் அறிக்கைகளில் சொன்னார்கள். அதாவது மொத்த அரசுச் செலவினங்களில் 20% கல்விக்காக ஒதுக்கப்படும் என. ஆனால் இப்போது கல்விக்கான நிதி ஒதுக்கீடு GDP யில் 6% என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். இது எப்படிப் போதும்?

மாநிலங்களிலும் மத்திய அளவிலும் கல்வி ஆணையங்கள் (education commissions) அமைக்கப்படும் என முன்னர் சொல்லப்பட்டது. இப்போது “மாநில அளவிலான பள்ளி ஒழுங்காற்று அமைப்புகள்” (School Education Regulatory Authority) இப்போது காணோம். மாநிலங்களைப் பொருத்தமட்டில் பள்ளிக் கல்வித்துறைதான் ஆக உச்சமான அமைப்பு.

எல்லா மட்டங்களிலும் ஆசிரியப் பணி இடங்களுக்கும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற உத்தரவாதமும் எங்கும் காணோம்.

மத்திய அளவில் Advisory Board of Education அமைக்கப்படும் எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆக கல்வி தொடர்பான எல்லா அதிகாரங்களும் மத்தியில் உள்ள பா.ஜ.க அரசிடம் போய்க் குவிகிறது.

கல்வி என்பது மாநிலங்களின் முழுமையான அதிகாரத்தில் இருந்த நிலமை போய் இன்று மத்தியிலேயே எல்லா அதிகாரங்களும் குவிக்கப்பட்டிருப்பது எத்தனைக் கொடுமை?

(தொடரும்)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.