புதிய கல்விக் கொள்கை – சில குறிப்புகள் (3): அ.மார்க்ஸ்

1. கஸ்தூரிரங்கன் அறிக்கையில் இருந்த ஒன்றிரண்டு நல்ல பரிந்துரைகளும் பா.ஜ.க அரசின் இந்த இறுதி அறிக்கையில் காணாமற் போயுள்ளனஎன முந்திய பதிவுகளில் சொன்னேன். அதில் ஒன்று:

“வணிக நோக்கிலான எல்லா தனியார் நிறுவனங்களும் இழுத்து மூடப்படும்”- எனும் முந்தைய வசனம் இப்போது இதில் காணாமல் போய்விட்டது. இதை ஜந்த்யாலயா திலக்கும் சுட்டிக் காட்டுகிறார் . “போதிய தரம் அற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்படும்” – என்று மட்டுமே இப்போது உள்ளது. தனியார் நிறுவங்களின் மீது தாங்கள் light and tight approach மேற்கொள்ளப் போவதாகச் சொல்லியுள்ளது என்பதஎல்லாம் வெற்றுக் கதைகள் என்பதை பார்த்துக் கொண்டுதான் உள்ளோம். பல ஆயிரம் கோடி ரூ கடன்களுக்கு நாமம் போட்டுவிட்டு ஐரோப்பாவுக்கு ஓடி இன்று நீச்சல் குளங்களில் நீந்திக் கொண்டிருக்கும் கார்பொரேட்கள் மீது இன்று என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது?

2. எல்லா மட்டங்களிலும் ஆசிரியப் பணி இடங்களுக்கு முழுமையாக ஆசிரியர்கள் தேர்வு படு தீவிரமாக (robust recruitment mechanism) மேற்கொள்ளப்படும் என இந்த அறிக்கையில் சொல்லப்படுகிறது. ஆனால் நிரப்பப்படாத எல்லா காலி ஆசிரியப் பணி இடங்களும் நிரப்பப்படும் என ஒற்றை வரியில் உறுதியாக எங்கும் கூறப்படவில்லை. ஒரு கணக்குப்படி இன்று 12 இலட்சம் ஆசிரியப் பணிகள காலியாக உள்ளன. அவ்வளவு இடங்களையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் சாத்தியம் இந்த அறிக்கையில் வெளிப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்த நகல் அறிக்கையில் “கல்விக்கான பொதுச் செலவுகள் (public expenditure) இரண்டு மடங்காக்கப்படும்” – எனவும், மொத்த அரசுச் செலவில் 20% கல்விக்கு ஒதுக்கப்படும் எனவும் சொல்லப்பட்டது. அதாவது இப்போது செய்யப்படும் 10% செலவு என்பது இனி இரண்டு மடங்கு, ஆக்குவோம் என்றனர். ஆனால் இன்றைய அறிக்கையில் GDP யில் 6% என டாக்டர் ராதாகிருஷ்ணன், கோத்தாரி காலத்துக் கதையை மட்டுமே மீண்டும் சொல்கிறார்கள். எதை நம்புவது.

3, மாநில அளவிலும், மத்திய அளவிலும் கல்வி ஆணையங்கள் அமைக்கப்படும் என அப்போது, அதாவது ஆட்சிக்கு வந்தபின் நீங்கள் சொன்னது. ஆனால் இப்போது, “மாநில அளவிலான பள்ளி ஒழுங்காற்று அதிகார அமைப்புகள் (School Education Regulatory Authorities) – என்பன குறித்து ஏதும் சொல்லப்படவில்லை. மொத்தத்தில் மாநிலங்களைப் பொருத்தமட்டில் மாநிலக் கல்வித் துறைதான் ஆக உச்சமான அமைப்பு என்பதாக உள்ளது.

(தொடரும்)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.