புதிய கல்விக் கொள்கை – சில குறிப்புகள் (4) அ.மார்க்ஸ்

ஆசிரியர் பயிற்சி குறித்து அறிக்கை சொல்வதென்ன?

எல்லாவற்றையும் மத்திய அளவில் கொண்டு செல்வது என்பது இந்த அறிக்கை முழுவதும் வெளிப்படுகிறது. கல்வி என்பது மாநில அளவில் உள்ள உற்பத்திகள், தொழில்கள் முதலானவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதால்தான் அது விடுதலைக்குப் பிந்திய காலகட்டங்களில் மாநிலப் பட்டியலில் மட்டும் வைக்கப்பட்டது. அது பின்னாளில் மத்திய – மாநிலப் பட்டியல் என ஆக்கப்பட்ட போது நாம் அதைக் கடுமையாக எதிர்க்கத் தவறினோம். இன்றைய அரசோ மொழிவாரி மாநிலங்களின் தனித்துவங்களை மூர்க்கமாக மறுக்கக் கூடிய ஒன்று. இந்த இந்த அறிக்கையில் மிகத் தீவிரமாக வெளிப்படுவதைக் காணலாம்.

பள்ளிக் கல்வியில் தேசிய அளவிலான மதிப்பீட்டு மையங்கள் (assessment centers) உருவாக்கப்படும் எனவும் மத்திய அளவில் ஒரு கல்வி அறிவுரைப்பு வாரியம் (advisory board of education) அமைக்கப்படும் எனவும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் பெயருக்குத்தான் இனி கல்வி என்பது மத்திய மாநிலப் பட்டியலில் உள்ளது என்கிற நிலை இருக்கும். ஆனால் உண்மையில் கல்வி அதிகாரம் முழுக்க முழுக்க மத்திய அரசிடம் குவிகிறது என்பதற்கு இது இன்னும் ஒரு எடுத்துக்காட்டு. மொழிக் கொள்கையில் கூட இன்று நாம் சுதந்திரமாக இயங்குவதற்கு எத்தனை தடைகளை இந்த அறிக்கை உருவாக்குகிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டுதானே உள்ளோம். மறைமுகமாகவும் நேரடியாகவும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றைத் திணிக்கும் முயற்சியை நாம் மறந்துவிடக் கூடாது.

அடுத்து உயர் கல்வியில் இனி தனியார் நிறுவனங்கள்தான் எனும் நிலை உருவாகி உள்ளதையும், அப்படியான தனியார் நிறுவனங்கள் மீதான பல்கலைக்கழகங்களின் பிடி கடந்த ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டதையும் பார்த்துக் கொண்டுள்ளோம். இந்த அறிக்கை கல்லூரிகளுக்கான பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் (affiliation) என்கிற கருத்தையே முற்றாக நீக்குகிறது.

அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுமே இனி தன்னாட்சி நிறுவனங்க்களாக (autonomous degree awarding colleges of high quality) ஆக்கப்படும் என்கிறது. அதாவது எந்த வெளிப்படையான மேற்பார்வைகள் மற்றும் பாதுகாப்புகள் எதுவும் இல்லாமல் தனியார் கல்வி நிறுவனங்களிடம் ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் ஒப்படைக்கப் படுகிறார்கள். கடந்த இருபதாண்டுகளில் உயர் கல்வி என்பது முழுக்க முழுக்கக் கொள்ளை லாபம் கொட்டிக் கொள்ளும் களமாகி விட்டதைப் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம். தரும சிந்தனையுடன் கல்வி நிலையங்களை உருவாக்குவது என்பதெல்லாம் இன்று பொய்யாய்ப் பழங்கதையாய் ஆகியுள்ளது.

சென்ற ஆண்டு சென்னையில் ஆக உயர்ந்த பாரம்பரியம் உள்ள மிக முக்கியமான தன்னாட்சிக் கல்லூரி ஒன்றில் ஒரு பழங்குடி ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார். நாங்கள் சென்று அந்த நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ள ஒருவரிடம் பாதிக்கப் பட்டவரின் நிலையைச் சொல்லி அவரது பணி நீக்கத்தை ரத்து செய்யுமாறு கோரினோம்.அப்போது நிர்வாகத் தரப்பில் சொல்லப்பட்ட காரணம், அந்தக் குறிப்பான பாடத்தில் போதிய வருமானம் தங்களுக்கு இல்லை என்பது. கடைசியாக எங்களால் முடிந்தது அந்தப் பேராசிரியைக்கு மூன்று மாத ஊதியம் பெற்றுக் கொடுத்தது மட்டும்தான். நிர்வாகம் எங்களுக்கு அளித்த ஒரே உறுதிமொழி மீண்டும் அந்தத் துறையில் ஆளெடுத்தால் அந்தப் பேராசிரியைக்கு இடம் அளிப்போம் என்றார்கள். இன்று காலை அதே நிறுவனத்தில் இன்னொரு துறையில் அப்படி 13 ஆண்டுகளாக அங்கு பணியாற்றும் ஒரு பெண் ஆசிரியை பணி நீக்கப்பட்டுள்ளார் எனவும் கொரோனா ஊரடங்குப் பின்னணியில் அந்தப் பாடத் திட்டத்தில் இந்த ஆண்டு போதிய மாணவர் சேர்க்கை இல்லை எனவும் காரணம் சொல்லப்பட்டுள்ளது. பானைச் சோற்றுக்கு ஒரு பதமாக இந்த உண்மை நிகழ்வுகளை இங்கு குறிப்பிடுகிறேன்.

அடுத்து ஆசிரியர் பயிற்சிக் கல்வி குறித்து இன்றைய கல்விக் கொள்கை சொல்வதைக் காணலாம்.

ஆசிரியர்கள் மத்தியில் சேவை நோக்கம், அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்ளும் ஆர்வம், செயல் நோக்கம் ஆகியன இல்லை என ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுடன் அறிக்கையின் இப்பகுதி தொடங்குகிறது (5-1).

தொடங்கும்போதே இவர்கள் முன்வைக்கும் கருத்து ஆசிரியப் பணிப் பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்குத் “தகுதி அடிப்படையில்” உதவித் தொகை வழங்கப்படும் என்பதுதான் (5-2). நமது நாட்டின் சாதி, தீண்டாமைக் கொடுமைகள் ஆகியவற்றின் பின்னணியில் உருவானதுதான் இட ஒதுக்கீட்டுக் கொள்கை. இது நமது அரசின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. அதே நேரத்தில் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குத் தகுதி அடிப்படையில் ஊக்கத் தொகை அளிக்கும் நிலையும் (Merit Scholarship) இங்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சமூக அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு (SC, ST, OBC) உதவித்தொகை பற்றிப் பேசாமல் வாயை இறுக்கி மூடிக் கொள்ளும் இந்தக் கொள்கை அறிக்கை “தகுதி” என்பதன் ஊடாடாகச் சாதி, தீண்டாமை அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைப் பின்னுக்குத் தள்ளுவதைக் காண வேண்டும்.

இனி நாடு முழுவதும் நான்கு ஆண்டு B.Ed பட்டப் படிப்புக் கல்லூரிகள் ஏராளமாகத் தொடங்கப்படும் எனவும், திறமையான மாணவர்களுக்கு ‘மெரிட் ஸ்காலர்ஷிப்’ வழங்கப்படும் எனவும், அவர்களுக்கு உள்ளூர்களிலேயே பணி வழங்கப்படும் எனவும் முழங்குகிறது. கிராமப் புறத்தில் வேலை செய்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என மீண்டும் கூறுகிறது. கிராமப் புறத்தில் வேலை செய்ய ஊக்கத் தொகை என்பதெல்லாம் நல்ல நடவடிக்கைதான். ஆனால் இன்று வேலை இல்லாத நிலையில் எந்த ஊர்களில் வேண்டுமானாலும் சென்று வேலை செய்ய இளைஞர்கள் தயாராக உள்ள நிலையில் இதெல்லாம் பெரிய சாதனைகள் இல்லை.

ஆசிரியர் இடமாற்றங்கள் நிறுத்தப்படும். தவிர்க்க இயலாத நேரங்களில் மட்டுமே இடமாற்றம். இடமாற்றங்கள் கணினி மூலம் நிறைவேற்றப்படும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது (5.3). சரி.இருக்கட்டும்.

அடுத்து எல்லாமட்டங்களிலும் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (TET / NTA) கட்டாயம். வேலை வாய்ப்பில் அந்த மதிப்பெண்களுக்கு ஒரு பங்கு உண்டு (5.4). தனியார் பள்ளிகளிலும் தகுதித் தேர்வு கட்டாயம். ஆனால் இங்கும் சாதி / தீண்டாமை அடிப்படையிலான ஒதுக்கீடு பற்றி பேச்சில்லை.

சுத்தமான கழிப்பறைகள் எனத் தொடங்கி எல்லா அடிப்படை வசதிகளையும் பட்டியல் இட்டு, இறுதியாக கணினி, இணைய வசதி ஆகியவை பள்ளிகளில் இருக்க வேண்டும் என்கிறது இந்த அறிக்கை (5.5). நல்லது. வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த அளவிற்கு கல்விக்கான நிதி ஒதுக்கீடு இல்லை. அது குறித்துப் பேசாமல் இதை மட்டும் சொல்வதன் பொருள் என்ன என்கிற கேள்வி நமக்கு எழுகிறது.

ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் “தி ஸ்கூல்” எனும் ஒரு தனியார் நிறுவனம் சென்னையில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் தொடங்கி அங்கு மிக அதிகமான கட்டணம் முதலியன வசூலித்தது அது ஒரு பெரிய பிரச்சினையாகியது. டாக்டர் சிவகுமார், நான் உட்பட ஒரு குழு அமைத்து அறிக்கை அளித்தோம். அடிப்படை வசதிகள் மட்டுமல்ல பயிற்சி பெற்ற ஆசிரியர்களும்கூட அங்கு பணி அமர்த்தப்படவில்லை. பின்னர் நீதிமன்றம் தலையிட்டு அத்தனை பள்ளிகளும் மூடப்பட்டன. தனியார் நிறுனங்கள் என்றால் அவை உரிய வசதிகளுடன் இருக்கும் என்பதெல்லாம் பெரும் அபத்தமென்பதை நாம் புரிந்து கொள்ளல் அவசியம்.

அடுத்து நாம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டிய அம்சம் “பள்ளி நிர்வாகக் குழு” என இந்தக் கொள்கை அறிக்கை முன்வைக்கும் திட்டம் (5-11). ஒவ்வொரு பள்ளியிலும் உருவாக்கப்படும் இந்த அமைப்பில் பெற்றோர்களும் உள்ளூர்ப் பிரதிநிதிகளும் (key local stake holders) இருப்பார்கள் என்கிறது இந்த அறிக்கை. பள்ளி நடவடிக்கைகளில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்துவது என்பதெல்லாம் வரவேற்கத் தக்கதுதான். ஆனால் நம்முடைய நாட்ட்டின் ஆகக் கொடூரமான சாபக் கேடான சாதி, மத வேறுபாடுகள் இத்தகைய அமைப்புகளின் ஊடாக என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற அச்சம் நமக்கு ஏற்படுகிறது. அப்படியான ஒரு பிரச்சினையை இம்மியும் கணக்கில் கொள்ளாமல் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை இந்த அம்சத்திலும் அது குறித்து ஒன்றும் பேசவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

(தொடரும்)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.