வீரப்பன் வழக்கில் சிறையிலுள்ள பிலவேந்திரன் மரணத்தின் விளிம்பில்..

கர்நாடக மாநிலம் அனூர் வட்டம், மார்டல்லி என்ற ஊரைச் சேர்ந்தவர் பிலவேந்திரன். மேட்டூர் அணைக் கட்டப்பட்ட நேரத்தில் தண்ணீரில் மூழ்கிய நியாயம்பாடி என்ற ஊரிலிருந்து பிழைக்க வழிதேடி மார்டல்லியில் குடியேறிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இவருடைய அப்பா மோரிஸ் கவுண்டர் தாலுகா போர்டு உறுப்பினராக இருந்தவர். எலக்டிரிகல் வேலை செய்துவந்த பிலவேந்திரனுக்கு அந்த சுற்றுப் பகுதியில் உள்ள ஊர்கள் அனைத்தும் தெரியும்.

1991 – 92 ஆண்டுகளில் வீரப்பன் நல்லூரை ஒட்டிய காட்டுப் பகுதியிலிருந்தார். அப்போது, பிலவேந்திரன் தோட்டத்து வழியாக நிறைய பேர் வீரப்பனைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.

தகவல் தெரிந்து பிலவேந்திரனும் போகிறார், வீரப்பனை சந்திக்கிறார். வீரப்பன் பேச்சில் மயங்கிய பிலவேந்திரன் அரிசி, பருப்பு எல்லாம் வாங்கி கொடுக்கிறார்.

14.2.1992, அன்று வீரப்பனின் முக்கிய கூட்டாளியான ஆசாரி குருநாதன் என்பவரை கர்நாடக அதிரடிப்படையினர் (STF) கைது செய்கிறார்கள். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பிலவேந்திரன் அரசு, பருப்பு வாங்கிக் கொடுத்த தகவல் தெரிகிறது.

போலீஸ் தேடுகிறது…

குழந்தைகளின் எதிர்காலம் கருதி மார்டல்லியில் இருந்து குடும்பத்தோடு கிளம்பி விடுகிறார்.

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பக்கத்தில் ஒரு தோட்டத்தைக் குத்தகைக்குப் பிடித்து கரும்பு நடவு செய்கிறார். தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் மின் கம்பம் நடும் வேலைக்கும் போகிறார்.

இந்த நேரத்தில் வீரப்பன், இராமாபுரம் காவல் நிலையத்தைத் தாக்கி ஐந்து போலீசாரைச் சுட்டுக் கொல்கிறார். மின்னியம் காட்டில் மைசூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஹரிகிருஷ்ணா, போலீஸ் எஸ்.ஐ. ஷகீல் அகமது உள்ளிட்ட ஆறு பேரைச் சுட்டுக் கொல்கிறார்.

பாலாறு வனப் பகுதியில் வீரப்பன் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி போலீசார் உட்பட 22 பேர் கொல்லப்படுகிறார்கள். இந்த மூன்று வழக்கிலும், பிலவேந்திரன் பெயரும் பொய்யாக சேர்க்கப்படுகிறது.

23.5.1993 அன்று வெள்ளோடு வந்த கர்நாடக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கிடுசாமி, மந்தப்பா இருவரும் பிலவேந்திரனை பிடித்துக் கொண்டு போகிறார்கள். அடுத்த சில நாட்களுக்குப் பிறகுச் சிறைக்கு அனுப்புகிறார்கள். மூன்று தடா வழக்குகளும் 2001–ல் விசாரணை முடிந்தது.

போலீசார் கொண்டுவந்த பொய்ச் சாட்சிகளில் பிலவேந்திரன் உள்ளிட்ட எட்டு பேருக்கு வாழ்நாள் தண்டனைக் கிடைக்கிறது. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில் எட்டுப் பேருக்கு விடுதலை கிடைத்தது.

பிலவேந்திரன், மீசை மாதையன், ஞானப்பிரகாசம், சைமன் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவருக்கானக் கருணை மனுவை ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு பிரணாப் முகர்ஜி 2013- ல் தள்ளுபடி செய்தார்.

ஒன்பது ஆண்டுகளாக மனுவைப் பரிசீலிக்காமலிருந்ததைக் கண்டித்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதியரசர் சதாசிவம் (தலைமை நீதிபதி) தலைமையிலான முதல் அமர்வு வீரப்பன் கூட்டாளிகள் நால்வர் உள்ளிட்ட 15 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது.

ஆயினும், இந்த நால்வருக்குமான விடுதலை எப்போது என்பது முடிவு செய்யப்பாடாமலே உள்ளது. இந்த நிலையில் கடந்த 2018 மே மாதம் சைமன் சிறையிலேயே உயிரிழந்தார்.

மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிலவேந்திரனுக்கு நேற்று இரவு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக மைசூர் அரசு கே.ஆர்.எஸ். மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட பிலவேந்திரன் இப்போது சுயநினைவு இல்லாத நிலையில் இருக்கிறார்.

பிலவேந்திரன் செய்யாத குற்றத்துக்காக 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். இவரைப்போல பல நிரபராதிகளின் மூச்சு சிறைக்குள்ளேயே அடங்கி விடுகிறது.

தடா என்ற சட்டம் இந்திய அரசியல் அமைப்பு மற்றும் சனநாயகத்துக்கு எதிரானது என்று சொல்லி சட்டத்தை ரத்து செய்த அரசாங்கம், அந்த சட்டத்தின் பேரால் கைது செய்து தண்டிக்கப்பட்டவர்களை 28 ஆண்டுகளாக அடைத்து வைப்பது மனித உரிமை மீறலாகும்.

இந்தியாவெங்கும் இச்சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் விடுதலையே ஆகாமல் சிறைச்சாலையிலேயே மடிந்து போயுள்ளார்கள். எங்கள் வழக்கில் 2018ல் சைமன் சிறைச்சாலையிலேயே மடிந்து போனார். இப்போது பிலவேந்திரன். ஐயா, மற்றவர்கள் இருவரும் சராசரி 80 வயதை கடந்து விட்டார்கள்.

இந்த மரணங்களை ஜுடிசியல் அல்லது நிர்வாக கொலை என்று சொல்லலாமா?

சஞ்சை தத் முன் மண்டிப் போடும் சட்டம் இந்த குரலற்ற மனிதர்களின் உரிமைகளை மறுப்பது எந்த விதத்தில் நியாயம்?

தமிழக முற்போக்கு மனித உரிமை செயல்பாட்டாளர்களே..

வீரப்பன் வழக்கு மற்றும் தடா சட்டம் என்ற இரண்டு சொத்தைக் காரணங்களைக் கூறிக் கொண்டு அப்பாவித் தமிழர்களை விடுதலை செய்யாமல் இருக்கும் போக்கைக் கண்டிப்பதுடன் அவர்களின் விடுதலைக்குக் குரல் எழுப்புமாறும் சட்டரீதியாக உதவுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புராஜ், ஈரோடு

16.08.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.