கோரோனாவால் இறந்தவர் உடல் அவமதிப்பு: 6 வாரத்திற்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (18.08.2029) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் கொரானா தொற்றால் இறந்தவர் உடலைப் புதைக்கும்போது அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் குறித்து 6 வாரக் காலத்திற்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி கோபாலன்கடை பகுதியில் வசித்து வந்த ஜோதிமுத்து என்பவர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

கடந்த 05.06.2020 அன்று இறந்தவர் உடலைக் கோபாலன்கடை இடுகாட்டில் புதைக்கும்போது சுகாதாரத்துறை, நகராட்சி ஊழியர்கள் உடலைப் புதைக் குழிக்குள் உருட்டித் தள்ளிவிட்டு அவமதிப்பு செய்தனர். இதன் வீடியோ காட்சிகள் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவின.

கொரானாவால் இறந்தவர்களின் உடல்களைக் கையாளுவது குறித்து மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் அப்பட்டமாக கடைபிடிக்கப்படாமல் மீறப்பட்டன. இறந்தவர்களின் உடல்களைக் கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பும் மீறப்பட்டது.

இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென துணைநிலை ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், சுகாதாரத் துறை செயலர், சுகாதாரத் துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு அனுப்பி இருந்தோம்.

மேலும், கடந்த 07.06.2020 அன்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் விரிவானப் புகார் மனு அனுப்பினோம்.

இப்புகாரைப் பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் புகார் மனுவை அனுப்பி வைத்து அதன்மீது 6 வாரக் காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 24.07.2020 அன்று உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.