புதிய கல்விக் கொள்கை – சில குறிப்புகள் (5): அ.மார்க்ஸ்

ஆசிரியர் பணி நிரந்தரம் மற்றும் பணி உயர்வு குறித்து இந்த அறிக்கை சொல்வன:

கற்பித்தல் தவிர இதர பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என இக் கொள்கை அறிக்கை கூறுவது வரவேற்கத்தக்க ஒன்று (5.12). சென்சஸ் மற்றும் பல்வேறு தேர்தல்கள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதென்பது அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களில் கல்வியைப் பாதிப்பதை அக்கறையுள்ளவர்கள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். அது இனி இருக்காது என இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது. எனினும் இன்னும் சற்று வெளிப்படையாகவே தேர்தல் மற்றும் சென்சஸ் உள்ளிட்ட பிற பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் எனச் சற்று வெளிப்படையாகவே சொல்லி இருக்கலாம்.

ஆசிரியர்கள் தம் திறனை வளர்த்துக்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் 50 மணி நேர அளவு கல்வி சார்ந்த பல துறைகளிலும் கட்டாயமாகப் பயிற்சி அளிக்கபடுவார்கள் (Continuous Professional Development- CPD) என இந்த அறிக்கை சொல்வதும் வரவேற்கத் தக்கது.
அடுத்து பணி மேலாண்மை மற்றும் பதவி மேம்பாடு (Carrier Management and Progression – CMP) குறித்து பேசப்படுகிறது (5.17). சிறந்த பணி மற்றும் பங்களிப்பு செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் பணி அங்கீகரிக்கப்படும் எனவும், அவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்ல பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் பணி நிரந்தரம் ஆக்கப்படுவது, பதவி உயர்வு அளிக்கப்படுவது என எல்லாமே இந்த அடிப்படையில்தான் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இத்தகைய மதிப்பீட்டிற்கான அளவுகோல்களை அந்தந்த மாநில அரசுகள் வகுக்கும். இந்த அளவுகோல்களில் சக ஆசிரியர்களின் மதிப்பீடு, வருகைப் பதிவு, பணி அர்ப்பணிப்பு, துறைசார் பயிற்சி (CPD) எவ்வளவு மணி நேரம் பெற்றுள்ளார் என்கிற அளவு, பணி நிரந்தரமாக்கப்படுவதற்கான கால கெடு மற்றும் பதவி உயர்வு (Probation, Promotion) எல்லாமே இனி இவ்வாறுதான் தீர்மானிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இப்போதும் கூட துறைத் தலைவர் ஆண்டு தோறும் பணி மதிப்பீடு செய்து உரிய குறிப்பேட்டில் பதிவது என்பதெல்லாம் நடைமுறையில் இருந்தாலும் அவை பெரிய அளவில் பணி நிரந்தரம் செய்யப்படுவது, பதவி உயர்வு முதலானவற்றில் இறுக்கமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் இனி இது தீவிரமாகக் கடைபிடிக்கப்படும் என்கிறது இவ்வறிக்கை.
எனவே இனி எதிர்காலத்தில் ஒருமுறை பதவியில் சேர்ந்தால் அந்தந்தக் கால அளவில் தானாகப் பணி நிரந்தரம் ஆவது, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பதவி உயர்வு பெறுவது என்பதெல்லாம் சாத்தியமில்லை என இந்த அறிக்கை சொல்லாமல் சொல்கிறது.

ஆசிரியர்கள் சரியாகப் பணி செய்வதில்லை, அவர்கள் சொந்தமாகத் தொழில் செய்கின்றனர், மாணவர் நலனில் அக்கறையாக இருப்பதில்லை என்பது போன்ற கருத்துக்கள் சமூகத்தில் நிலவுகிறது என்பதை அறிவோம். இவை முழு உண்மை இல்லை என்ற போதிலும் பொதுப் புத்தியில் உள்ள இக்கருத்து நீக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் அது இவ்வறிக்கையில் சொல்லியுள்ளதுபோல இறுக்கமான கண்காணிப்பு மற்றும் மேலதிகாரிகளின் மதிப்பீடு ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுவதில் பல சிக்கல்கள் உள்ளன. சாதி, மத வேறுபாடுகள் உள்ள நம் சமூகத்தில் இன்று இந்த வேறுபாடுகள் கூர்மைப் படுத்தப் படுகின்றன. இந்நிலையில் இப்படியான மதிப்பீடுகள் ஆசிரியர்களைப் பாதிக்கும் வாய்ப்பை யாரும் மறுத்துவிட இயலாது.

கண்காணிப்பு, ஒழுங்குபடுத்தப் படுதல், மதிப்பீடு மேற்கொள்ளல் ஆகியவற்றில் உள்ள இந்தப் பிரச்சினை என்பனவெல்லாம் சாதி மத வேறுபாடுகள் மேலும் மேலும் கூர்மைப்படுத்தப் படும் நிலையில் எங்கு போய் முடியும் என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால் இவ் அறிக்கை அப்படியான ஒரு பிரச்சினைகள் உள்ளதைக் கண்டு கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. குறைந்தப்டசம் இப்படிப் பாதிக்கப்படுகிறவர்களுக்கு ஒரு மேல்முறையீடு வாய்ப்பு என்பது கூட இந்த அறிக்கையில் பேசப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. அதேபோல ஆசிரியர் அமைப்புகளுக்கு இது போன்ற அம்சங்களில் பிரதிநிதித்துவம் அளிப்பது குறித்தும் இந்த அறிக்கை பேசவில்லை. எனவே இந்தக் கொள்கை அறிக்கையில் இந்த அறிவிப்பு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

மேல் நோக்கிய பணி உயர்வு இனி தகுதி அடிப்படையில்தான் இருக்கும் என்பது மீண்டும் மீண்டும் இவ்வறிக்கையில் உறுதி செய்யப்படுகிறது (5.19). அது மட்டுமல்ல ஆசிரியர்களை இப்படியாக மதிப்பீடு செய்வதற்கான “ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான பணித் தர அளவுகோல்கள்” (National Professional Standards for Teachers) 2022க்குள் உருவாக்கப்படுமாம். அது மட்டுமல்ல இப்படியான தர அளவுகோல்களை நிர்ணயிக்க என ஒரு அமைப்பும் (Professional Standard Setting Body – PSSB) உருவாக்கப்படுமாம்.

எத்தனை அமைப்புகள், இப்படியான அமைப்புகளின் ஊடாக எத்தனை நுணுக்கமாக எல்லா அதிகாரங்களும் மத்தியில் குவிக்கப்படுகின்றன எனப் பாருங்கள்!

(தொடரும்)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.