தோழர் கவி.வெ.நாரா நூற்றாண்டு விழா

வெற்றிவேல் – திரிபுரசுந்தரி தம்பதியினரின் இரண்டாவது மகனாக 21.08.1920 ஆம் நாள் புதுச்சேரியில் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி. 1942-இல் தோழர் வ. சுப்பையா புதுச்சேரியில் பிரெஞ்சு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கினார். 1943ம் ஆண்டு முதல் கவி.வெ.நாராவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

புதுச்சேரி பஞ்சாலைத் தொழிலாளர் சங்க அலுவலக ஊழியராக பணியாற்றவும் துவங்கினார். 1943ல் “பாரத தேசமடா தோழா”என்ற தலைப்பில் எழுதிய பாடல் முதல் முதலில் ஜனசக்தி நாளிதழில் வெளியானது. பாட்டாளி வர்க்கக் கவிஞராக இவர் மக்களுக்கு அறிமுகம் ஆனார்.

பிரெஞ்ச் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தனது கவிதைகளை வாளாகக்கொண்டு கலை ஆயுதம் ஏந்தி வீரச்சமர் புரிந்தவர். 1952ம் ஆண்டு பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தால் வெளியேற்றப்பட்டு தலைமறைவாக கவி.வெ.நாரா சுதந்திர இந்தியாவின் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து தோழர் வ.சுப்பையா பண்டித ஜவகர்லால் நேருவிடம் சிறையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதினார். பண்டித நேருவின் தலையீட்டின் பேரில் சிறையில் இருந்த கவி.வெ.நாரா வெளிவந்தார்.

1952 ஆகஸ்டில் பிரெஞ்சு இந்திய அகதிகள் மாநாட்டினைச் செயலாளராக பொறுப்பேற்று மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். புதுச்சேரியின் விடுதலை இயக்க வரலாற்றிலும், புதுச்சேரியின் பொதுவுடைமை இயக்க வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க முன்னணித் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தவர்.அடக்குமுறை, தலைமறைவு, சிறை என இன்னல்களுக்கு ஆளானவர்.

புதுச்சேரி விடுதலைக்கு முன்பும் பின்பும் சுமார் 40 ஆண்டுகள் நகரமன்ற உறுப்பினராக, உழவர்கரை கொம்யூன் பஞ்சாயத்து மேயராக, பிரதிநிதித்துவ சபை உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து பொதுவாழ்வில் தூய்மையுடன் எளிமையான நேர்மையான வாழ்க்கை வாழ்ந்தவர்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், இலக்கிய பேராசான் ஜீவா, மக்கள் தலைவர் வ.சுப்பையா, என்.குருசாமி ஆகியோரின் அன்பிற்கு பாத்திரமானவர். பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் ஒருசேர எதிர்த்துப் போராடியவர்கள் புதுச்சேரியின் விடுதலைக்குப் போராடிய வீரர்.

அத்தகைய வீரர்களின் தீரச் செயலைப் பாராட்டி மத்திய அரசாங்கம் வழங்கிய தாமிரப்பட்டய விருதும், மத்திய, மாநில விடுதலைப் போராட்ட வீரருக்கான ஓய்வூதியமும் அளிக்கப் பெற்ற சிறப்புக்குரியவர் கவி.வெ.நாரா. பிரச்சாரங்களாலும், கனல் சிந்தும் கவிதைகளாலும் தொழிலாளர்களையும், மக்களையும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணி திரட்டிய தோடு ஆயுதம் ஏந்தியும் ஆயுதம் தயாரிக்க தெரிந்த ஒரு கொரில்லாப் போர் பயிற்சி பெற்ற போராளியாகவும் தோழர் கவி.வெ.நாரா விளங்கியுள்ளார்.

பேராசிரியர் எ.மு.ராஜன் ஆலோசனையின்படி 1984ம் ஆண்டில் தனது கவிதைகளை தொகுத்து “வியர்வைத்துளிகள் ” என்ற நூலினை வெளியிட்டார். இந்த நூல் சோவியத் நாட்டின் உயரிய விருதான நேரு இலக்கிய பரிசினைப் பெற்றது.

தன்னுடைய 81ஆம் வயதில் உடல் நலக்குறைவால் 23.11.2001ஆம் ஆண்டு அன்று இயற்கை எய்தினார். கவி. வெ.நாரா அவர்களின் நூற்றாண்டு நாளில், அவரின் மக்கள் பணியையும் மகத்தான நினைவுகளையும் போற்றுவோம்!!!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.