கருணை வேண்டி நீண்ட நெடும்பயணம் – நீதிபதி கே.சந்துரு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளின் வழக்கு முடிவைத் தாமதப்படுத்தும் ஆளுநரின் முன்…. கருணை வேண்டி நீண்ட நெடும்பயணம்….

தமிழில்: தோழர் தியாகு

பன்வாரிலால் புரோகித், பாத்திமா பீவி ஆகிய இருவரும் தமிழ்நாட்டின் ஆளுநர்களாக 16 ஆண்டு இடைவெளியில் பதவி வகித்துள்ளனர். இவர்களுக்கிடையில் பொதுவாக ஒன்றுள்ளது; அதாவது இருவரும் சட்டத்தை ஒழுகி நடக்காமல் தங்கள் மன்னிப்பு அதிகாரத்தைப் பெரிதாகக் கருதிக் கொண்டுள்ளார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களின் கருணை விண்ணப்பம் அளிக்கப்பட்ட போது இருவருமே அதனைப் புறந்தள்ளி விட்டனர்.

சில வாரம் முன்னதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம் காப்பு விடுப்புக்காக வழக்குத் தாக்கல் செய்த போது, அளவுமீறிய தாமதத்தைக் குறிப்பிட்டு நீதிமன்றம் கூறியது: “அரசமைப்பு வழி அதிகாரப்பொறுப்பில் இருக்கும் தமிழ்நாடு ஆளுநரானவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழு கைதிகளையும் விடுதலை செய்ய அரசு செய்துள்ள பரிந்துரை மீது இவ்வளவு நீண்ட காலம் உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது.”

கடந்த 1999இலும் இதுபோன்ற நிலைமையே ஏற்பட்டது. அப்போது நளினி, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட மரண தண்டனையைத் தணிக்க வேண்டி தமிழ்நாடு ஆளுநரிடம் (பாத்திமா பீவி அவர்களிடம்) கருணை விண்ணப்பங்கள் சமர்ப்பித்தனர். அவர் அவற்றைத் தள்ளுபடி செய்து விட்டார். மாநில அரசின் அறிவுரையைக் கேட்காமல் அவர் எழுதினார்: “பதிவுருக்களைப் படித்தறிந்த வரை, வழக்கு ஏற்புடையதாக இல்லை, எனவே தள்ளுபடி செய்யப்படுகிறது.” நான்கு கைதிகளும் உயர் நீதிமன்றத்தை அணுகி, அமைச்சரவை வழங்கும் அறிவுரை இல்லாமல் ஆளுநர் உறுப்பு 161இன் கீழ் கருணை விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க முடியாது என்று வாதிட்டனர்.

ஆளுநரின் ஆணை செல்லாதென்று அறிவித்த சென்னை உயர் நீதிமன்றம் கூறியது: “வழக்கிற்குள்ளான ஆணையை அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161இன் கீழ் பிறப்பிப்பதற்கு முன்னால் முதல் எதிர்விண்ணப்பர் (ஆளுநர்) அமைச்சரவையிடமிருந்து அறிவுரை பெறும் நடைமுறையை கடைப்பிடிக்கவில்லை என்பதாலும், மேற்கூறிய வழக்குகளில் இந்திய உச்ச நீதிமன்றம் முடிவுரைத்தவாறும் வழக்கிற்குரிய ஆணை சட்டப்படி செல்லாது.” நீதிமன்றம் மாரு ராம் வழக்கின் (1980) தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. அவ்வழக்கில் மாநில அரசு ஆளுநருக்கு அறிவுரை தரலாம், ஆளுநர் அந்த அறிவுரைக்குக் கட்டுப்பட்டவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. பிறகு உரிய அறிவுரை பெறுவதற்காக இவ்வழக்கு கருணாநிதி அமைச்சரவைக்குச் சென்றது. 2000ஆம் ஆண்டு நளினிக்கு மட்டும் தண்டனைக் குறைப்பு பரிந்துரைக்கப்பட்டது. மற்றவர்கள் குடியரசுத் தலைவரிடம் விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பம் 11 ஆண்டு காலத்தாழ்வுக்குப் பின் தள்ளுபடி செய்யப்பட்டது.

மற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. 2014இல் காலதாமதத்தைக் கண்டித்த உச்ச நீதிமன்றம் கூறியதாவது: “அரசாங்கம் குடியரசுத் தலைவருக்கு உரிய காலத்துக்குள் அறிவுரை வழங்கி, அவர் கூடிய விரைவில் முடிவெடுக்க உதவும் படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.” உச்சநீதிமன்றம் மேலும் பணித்தது: “முருகன் என்கிற வி. சிறிகரன், சாந்தன் என்கிற சுதேந்திரராஜா, அறிவு என்கிற பேரறிவாளன் ஆகியோரின் வழக்குகளில் மரண தண்டனையை ஆயுட்காலச் சிறைத் தண்டனையாகக் குறைக்கிறோம்.”

2014 பிப்ரவரி 19ஆம் நாள் தமிழக அமைச்சரவை இவ்வழக்கில் சிறையிலிருந்த எழுவருக்குமே விடுதலை வழங்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. ஒன்றிய அரசு விண்ணப்பம் தாக்கல் செய்து வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றச் செய்தது. வழக்குகளை விசாரித்த அரசமைப்புச் சட்ட ஆயம் ஆயுட்சிறை என்பது வாழ்வின் எஞ்சிய காலம் முழுவதற்குமானது என்ற போதிலும், குற்ற நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 432இன் கீழ் தண்டனைக் கழிவு கோரி விண்ணப்பிக்கலாம் என்று கருத்துக் கூறியது. மரண தண்டனை ஆயுட்சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டுள்ள வழக்குகளுக்கு இது பொருந்தும், அதற்காக எவ்விதத் தணிப்பு கோரினாலும் உரியவாறு பரிசீலிக்கலாம்.
மீண்டும் ஒரு முறை அனைவரும் தண்டனைக் கழிவு கேட்டு ஆளுநரிடம் விண்ணப்பித்தனர். மாநில அமைச்சரவையும் 2018 செப்டெம்பரில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்க அறிவுரை கூறியது. மறுமொழியேதும் இல்லாததால் நளினி நீதிமன்றத்தை அணுகினார். சென்னை உயர் நீதிமன்றம் எவ்விதக் கட்டளையும் தர மறுத்து, வினாத் தொடுக்க இயலாத படி ஆளுநர் காப்புப் பெற்றுள்ளார் என்று கூறி விட்டது, இங்கே, உயர் நீதிமன்றம் சுவரண் சிங் வழக்கில் (1998) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கவனிக்கத் தவறி விட்டது. ”அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161இன் கீழ் ஆளுநர் பிறப்பித்த ஆணையைத் தொட இந்நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்ற மூன்றாம் எதிர்விண்ணப்பருக்கான அறிவுசால் வழக்குரைஞரின் விட்டுக்கொடா வாதுரையை நம்மால் ஏற்க முடியவில்லை” என்றது அத்தீர்ப்பு. இத்தகைய அதிகாரம் தற்போக்கான விதத்திலோ கெடுநோக்குடனோ அரசமைப்புச்சட்டக் கொள்கை நெறிகளை முழுமுதலாக மீறியோ செலுத்தப்படுமானால், அதன் துணைவிளைவாக வரும் ஆணை சட்ட ஒப்புதல் பெற்றதாக இருக்க முடியாது. இவ்வாறான வழக்குகளில் நீதித் துறையின் கை நீளத்தான் வேண்டும்.

போன மாதம் வழக்கு மீண்டும் நீதிமன்றம் வந்தது. இந்த முறை நீதிமன்றத்துக்குத் தரப்பட்ட தகவல் என்னவென்றால், இந்திய நடுவண் புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) பன்னோக்குக் கண்காணிப்பு முகமையின் (எம்டிஎம்ஏ) இறுதி அறிக்கைக்காக இப்போதய ஆளுநர் காத்திருப்பதுதான் கால தாமதத்துக்குக் காரணம் என்பதே. ராஜீவ் காந்தி கொலையின் சதிக் கோணம் பற்றி விசாரித்த நீதியர் எம்.சி. ஜெயின் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைப்படி 1998இல் அமைக்கப்பட்ட எம்டிஎம்ஏ 2018 ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தால் குற்றாய்வு செய்யப்பட்டது. இந்த முகமை ”அதிக முன்னேற்றம்” கண்டிருப்பதாகத் தெரியவில்லை என்றது நீதிமன்றம். அதன் இறுதி அறிக்கையில் இந்த ஏழு கைதிகளுக்கும் எதிரான செய்திகள் இருக்கும் என்று கற்பித்துக் கொண்டாலும், அவர்களுக்கு எதிராக மீண்டும் வழக்கு நடத்தும் பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால் பிரிவு 120-பி என்பதன் படி கொலை மற்றும் சதிக் குற்றத்துக்காக அவர்கள் தண்டிக்கப்பட்டு விட்டனர். அவர்கள் மீது மீண்டும் வழக்குத் தொடுப்பதானால், அது அரசமைப்புச் சட்டத்தின் 20(2) உறுப்பை மீறுவதாகும். ஒரே குற்றத்துக்காக எவரையும் ஒரு முறைக்கு மேல் வழக்குக்கோ தண்டனைக்கோ ஆளாக்க முடியாது என்று இவ்வுறுப்பு உத்திரவாதம் அளிக்கிறது.

தன்முன்னுள்ள செய்திகளைக் கவனத்தில் கொள்ளவும், தேவையெனக் கருதினால் விசாரித்துப் பார்க்கவும் கூட ஆளுநருக்கு உரிமையுண்டு (எபுரு சுதாகர் வழக்கு, 2006). ஆனால் இங்கு இப்படியொரு கேள்வியே எழவில்லை. அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைப்பட்டிருப்பதையும், அமைச்சரவை ஒரே அறிவுரையை ஒருமுறைக்கு மேல் தந்திருப்பதையும் கருதிப் பார்க்கையில் ஆளுநரால் தன் முடிவைக் காரணமின்றித் தள்ளிப்போட முடியாது. நீதிமன்றங்கள் தலையிட்டு, 1999இல் அப்போதைய ஆளுநர் நடந்த வழியே நடக்க விரும்பும் இந்த ஆளுநருக்குச் சட்டநெறிப் புத்தகத்தை விரித்துக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.

(ஆகஸ்டு 17, 2020)

(கட்டுரையாசிரியர் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி)

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

2 Comments

  1. நீதி என்பது வலியவனுக்கும் ஒன்றல்ல என்பதை நினைவுபடுத்துகிறது.

  2. நீதி வலியவனுக்கும் எளியவனுக்கும் ஒன்றல்ல!

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.