மேனாள் நீதிபதி தண்டபாணி காலமானார்: ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலியும்..

புதுச்சேரியில் பணியாற்றிய மேனாள் நீதிபதி அய்யா என்.தண்டபாணி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. என் பள்ளி வகுப்புத் தோழன் வழக்கறிஞர் திருமாவளவனின் நெருங்கிய உறவினர். பணிக் காலத்தில் எந்தச் சர்ச்சையிலும் சிக்காமல் பணி ஓய்வுப் பெற்ற நேர்மையான நீதிபதி.

2008-இல் வில்லியனூரில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் நிட் நாராயணசாமிக்கு எதிராக பெண்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினர் அப்பெண்கள் மீது தடியடி நடத்தினர். காயமடைந்த பெண்கள் 23 பேரைக் காவல் அதிகாரி ஒருவர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்து வந்தார்.

தகவல் அறிந்த நாங்கள் அதாவது நான், லோகு. அய்யப்பன், உள்வாய்க்கால் சந்திரசேகரன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தோம். அப்போது நான் மருத்துவரிடம் எம்.எல்.சி. போடுங்கள் என வலியுறுத்தினேன். அப்போது அந்தக் காவல் அதிகாரிக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவசரச் சிகிச்சைப் பிரிவு என்பதால் நாங்கள் அமைதியாக வெளியே வந்துவிட்டோம்.

பின்னர் நான் நடந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் உயரதிகாரிகளுக்குத் தந்தியும் எழுத்து மூலம் புகாரும் அளித்தேன். இந்நிலையில், அந்தக் காவல் அதிகாரி அன்றைய தினமே நள்ளிரவில் என் மீதும், உளவாய்க்கால் சந்திரசேகரன் மீதும் பெரியக்கடை காவல்நிலைதத்தில் புகார் அளித்தார். நானும், சந்திரசேகரனும் அந்தக் காவல் அதிகாரியைப் பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக பிணையில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அப்புகாரைப் படித்தாலே அது பொய் என்று விளங்கும். காவல் அதிகாரியைப் பார்த்து நான் உன் சட்டையைக் கழட்டிவிடுவேன் எனக் கூறி மிரட்டியாதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. என்னைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும் நான் அப்படி எல்லாம் பேசமாட்டேன் என்பது.

இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்த போது அப்போதைய முதல்வர் ரங்கசாமி காவல் கண்காணிப்பாளரை நேரில் அழைத்து கடுமையாகக் கண்டித்தார். இதனால் அப்போது எங்களைக் காவல்துறையினர் கைது செய்யவில்லை.

இந்த வழக்கு விசாரணை அப்போது தலைமை நீதித்துறை நடுவராக இருந்த அய்யா என். தண்டபாணி முன்னிலையில் நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர் மா.நக்கீரன் எவ்விதக் கட்டணமும் பெறாமல் திறம்பட இவ்வழக்கை நடத்தினார்.

2007-இல் ஒதியஞ்சாலை, கிருமாம்பாக்கம் ஆகிய காவல்நிலையங்களில் நடந்த இரண்டு காவல் மரணக் கொலை வழக்குகளில் காவல்துறையினருக்கு 7 ஆண்டுகள் தண்டனை வழங்கி அப்போது இரண்டாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்பு நீதிபதியாக இருந்த அய்யா இராஜசூர்யா (சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி) தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்புகள் குறித்த செய்தி வெளியிட்ட திருச்சி தினமலர் செய்தியாளரும் என் நெருங்கிய நண்பருமான ஜெஸ்டின் இவ்வழக்கில் எமது தரப்புச் சாட்சியாக (Defence witness) விசாரிக்கப்பட்டார். செய்தித்தாள்களும் ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை முடிந்து இவ்வழக்கில் இருந்து இருவரையும் நீதிபதி அய்யா என்.தண்டபாணி விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், காவல்துறை அத்துமீறலுக்கு எதிராகப் போராடி வருவதால் என் மீது போடப்பட்ட பொய் வழக்கு இது என்று தீர்ப்பில் குறிப்பிட்டார். இருவரும் பொய் வழக்கில் இருந்து விடுதலையானோம்.

நேற்று இறப்பு செய்தி அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. ஒருபுறம் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு ஆதரவாக இருந்தவரும், மனித உரிமைச் சார்ந்த வழக்குகளில் உணர்வுடன் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க உழைத்திட்டவருமான உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தங்க.கலைமணி காலமானச் செய்தி. மறுபுறம் நீதிபதி அய்யா என்.தண்டபாணி மறைந்திட்ட செய்தி. துயரத்துடன் கழிந்தது நேற்றைய நாள்.

சட்டத்துறையில் களமாடிய இருவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலும், அஞ்சலியும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.