ஒத்த ரூபாய் தீர்ப்பும் பூஷனின் உச்சநீதிமன்ற வாக்குமூலமும்! – தி.லஜபதி ராய்

வழக்கறிஞர் பூஷனின் கருத்தாழமிக்க வாக்குமூலம் காலத்தால் அழியாதது. 02.08.2020 அன்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 175 பத்திகளையும் 134 பக்கங்களையும் கொண்ட உறுதிமொழித்தாள் ஒன்றை உச்சநீதிமன்றத்தில் அளித்தார் அதில் கூறப்பட்ட விபரங்கள் நீதியின்பால் நம்பிக்கை கொண்டோருக்கு பலத்த அதிர்ச்சியை அளிக்கும்.

பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட காரணமான புகார் அளித்த மஹேக் மகேஸ்வரியின் புகார் நகல் தனக்கு தரப்படவில்லை என்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அவரது கருத்து அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட கருத்துரிமைக்கு உட்பட்டது என்றும்¸ நீதிபதியின் மீதான தனிப்பட்ட அவதூறும் நீதிமன்ற அவமதிப்பும் வேறு வேறென்றும்¸ நல்லெண்ணம் கொண்டு நீதித்துறையை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு உள்ளது எனவும் பூஷன் குறிப்பிட்டார்.

இதுதவிர இந்தியன் எக்ஸ்பிரஸ்¸ தி ஹிந்து¸ தி வயர், தி குயின்ட் போன்ற ஊடகங்களில் கருத்து உரிமைக்கு ஆதரவாக வெளியான செய்திகளையும் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி ஷா போன்ற சட்ட மேதைகளின் கருத்துக்களையும்¸ விமர்சனங்களை ஒடுக்குவதன் மூலம் நீதித்துறையை மதிப்பார்கள் என்பது தவறான எண்ணம் என்றும் சுட்டிக்காட்டினார்.

பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய சிறுசிறு காவி குழுக்களால் பட்டியல் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர் கொல்லப்பட்டதையும் அதன் பின்னணியில் அரசியல் சக்திகள் இருந்ததையும்¸ காவல்துறை மிக அரிதாகவே நடவடிக்கை எடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொய் தகவல்களும் போலி செய்திகளும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பப்பட்டு அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக்கப் பட்டதையும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியன சிறுபான்மையினருக்கும் பட்டியல் இனத்தவருக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டினார் பூஷன்.

2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் மதத்தின் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டுவதையும் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டதையும் பூஷன் பதிவு செய்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டதையும்¸ ஜாமியா கல்வி வளாகத்தில் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதையும் அத்தாக்குதலை காவல்துறையினரே முன்னின்று நடத்தியதையும் அவர் தனது வாக்குமூலத்தில் சுட்டிக்காட்டினார்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆயுதம் தாங்கிய குண்டர்கள் காவல்துறையினரின் பார்வையின் கீழ் அனுமதிக்கப்பட்டு அவர்கள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் அடித்து நொறுக்கியதையும் பின்னர் காவல்துறையினர் அவர்களை பாதுகாத்து பத்திரமாக¸ இரகசியமாக வெளியே அனுப்பியதையும்¸ காணொளி காட்சிகள் மூலம் மாணவர்கள் மீதான மூர்க்கத்தனமான தாக்குதல்கள் நிகழ்ந்தது அம்பலமானதையும் பதிவு செய்தார். ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அம்மாநிலம் மூன்றாக பிளக்கப்பட்டு¸ குடியாட்சியின் சிறு சிறு உரிமைகளைக் கூட பெறாமல் முன்னாள் காஷ்மீர் முதலமைச்சர் சிறையிலடைக்கப்பட்டதையும் பூஷன் குறிப்பிட்டார்.

கடந்த ஆறு வருடங்களில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வேலை இழப்பு ஆகிய இரண்டும் உச்சத்தைத் தொட்டு கோவிட்-19 காலகட்டத்தில் 10 கோடிக்கு மேலானோர் தங்கள் வேலைகளை இழந்துள்ளதையும் பூஷன் பதிவு செய்தார். அரசியலமைப்பு சட்டத்தின் அங்கங்களான தேர்தல் ஆணையம்¸ தலைமைக் கணக்காயர்¸ சி.பி.ஐ¸ நடுவண் விழிப்புணர்வு ஆணையம் போன்ற பொது அமைப்புகள் சீரழிக்கப்பட்டதையும் அவர் பதிவு செய்தார்.

தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களாக பிரதமருக்கும்¸ உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நெருக்கமானவர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையையும் சுதந்திரமும் மிகப்பெரிய கேள்விக்குறியானதையும்¸ விதிகளை பிற்போக்குத்தனமாக மாற்றியதன் மூலம் ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றியதும் முன்னர் 7.5 விழுக்காடு உச்ச வரம்பு பெருநிறுவன நன்கொடைகள் வழங்கும் நிலை மாறி எவ்வித கட்டுப்பாடுமற்ற ரகசிய அரசியல் நன்கொடையை ஊக்குவிக்கும் வழிகளையும் தேர்தல் பத்திரங்கள் மூலம் மறைமுகமாக நன்கொடை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்திய பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் தேர்தல் நன்கொடை மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடந்த மூன்று வருடத்தில் பெற்றதையும் மொத்த நன்கொடைகளில் 90 விழுக்காட்டைப் பெற்றதையும் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சட்ட திருத்தங்கள் மறைமுகமாக பண மசோதா என்ற வடிவில் கொண்டு வரப்பட்டு பாரதிய ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவையில் எவ்வித விவாதமும் இன்றி சட்டப் புறம்பான வழியில் நிறைவேற்றப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட குறிப்பு தலைமை கணக்காயர் அறிக்கைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அரசால் உச்சநீதிமன்றத்தில் தரப்பட்டது பற்றியும் பாராளுமன்ற குழுவிற்கு முழு விபரங்களையும் தராமல் அரைகுறை அறிக்கையை கொடுத்தது பற்றியும், தலைமைக் கணக்காயர் அலுவலகம் அரசுக்குப் பணிந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் லோக்பால் பொறுப்பிற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை எனவும் லோக்பால் அமைப்பு ஒரு வழக்கைக் கூட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை எனவும் லஞ்ச ஊழலை கண்டுபிடிப்பவரின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்ட விசில் புளோயர் சட்டம் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தாமையையும் சுட்டிக்காட்டியுள்ளார் . ரஃபேல் ஒப்பந்தத்தில் அலுவலக ரகசியங்களை பாதுகாக்கும் காலனிய கால சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமென ரஃபேல் ஊழலை வெளிக்கொண்டு வந்தவர்கள் மிரட்டப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

சி.பி.ஐ அமைப்பின் சுதந்திரம் தரம் தாழ்ந்து போனதும்¸ சிபிஐ இயக்குனர் ஒருவர் ரஃபேல் ஒப்பந்தத்தை விசாரிக்க முனைந்ததால் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டதையும் அவருக்குப் பதிலாக நாகேஸ்வர ராவ் என்பவர் இயக்குனராக நியமிக்கப்பட்டதையும் அவர் ஒரே நாளில் 40 பேரை அரசுக்கு ஆதரவாக இட மாற்றம் செய்ததையும் குறிப்பிட்டார்.

மத்திய விழிப்புணர்வு ஆணையத்தின் தலைமையிலிருந்து தலைமை அதிகாரி பல வருடங்களாக நடத்திய சோதனைகளில் சஹாரா மற்றும் பிர்லா குழுமங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பிரதமர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்கள் கணக்கில் வராத பணத்தை பெருமளவில் பெற்றதை காட்டும் ஆவணங்கள் மறைக்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.

தேசியப் புலனாய்வு குழுவானது இந்நாட்டின் மிக நேர்மையான மனித உரிமைப் போராளிகள் மீதும்¸ அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் மீது வழக்குத் தொடுக்கும் கருவியாக மாறியது எனவும் எவ்வித கட்டுப்பாடுமற்ற பெருமுதலாளிகள் நாட்டின் வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் ஏமாற்றி லட்சக்கணக்கான கோடிகளை சூறையாடினர் எனவும் இவர்கள் லண்டன் அல்லது ஆண்டிகுவா அல்லது பெர்முடா போன்ற வரி ஏய்ப்பு சரணாலய நாடுகளில் குடி புகுந்தனர் எனவும்¸ அரசு அவர்களை இந்நாட்டிற்கு பிடித்து வருவதற்காக வெறும் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது எனவும் மத்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் அழிக்கப்பட்டது எனவும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் நீக்கப்பட்டதும் அவருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட உர்ஜித் பட்டேலும் வெளியேற்றப்பட்டார் எனவும்¸ ரகுராம் ராஜன் கடன் மோசடி செய்தவர்களின் சொத்துக்கள் குறித்து விசாரிக்க முயன்றதாலும்¸ உர்ஜித் பட்டேல் ரிசர்வ் வங்கியின் ஒரு லட்சம் கோடி பணத்தை அரசுக்குத் தர மறுத்ததாலும் வெளியேற்றப்பட்டார் எனவும்¸ 90 விழுக்காடு வெகுஜன ஊடகங்கள் அரசின் பிரச்சார நிறுவனங்களாக மாற்றப்பட்டன எனவும் குறிப்பிட்டார்.

நியாயப்படுத்த முடியாத அரசின் நடவடிக்கைகள் மூடத்தனமாக நியாயப்படுத்தப்பட்டன எனவும் கோவிட்-19 முழுஅடைப்பு¸ பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட்டன எனவும்¸ இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு ஊடகங்களால் விசிறி விடப்பட்டது எனவும்¸ நூற்றுக்கணக்கான கோடி அரசு விளம்பரங்கள் மூலம் ஊடகங்கள் கைப்பற்றப்பட்டன எனவும்¸ மறுக்கும் ஊடகங்கள் மிரட்டப்பட்டு வழிக்கு கொண்டு வரப்பட்டன எனவும்¸ பேஸ்புக்¸ டுவிட்டர்¸ இன்ஸ்டாகிராம் போன்றவை அரசால் கட்டுப்படுத்தப்பட்டன எனவும் குறிப்பிட்டார்.

கடந்த நான்கு தலைமை நீதிபதிகளின் காலகட்டத்தில் மக்களுடைய உரிமைகள் நசுக்கப்பட்டன எனவும்¸ அரசின் ஒடுக்குமுறை போக்கை உச்சநீதிமன்றம் கட்டுப்படுத்த தவறியது எனவும், கொலிஜியம் என்ற நீதிபதிகளை நியமிக்கும் உரிமை கொண்ட முதுநிலை நீதிபதிகள் குழுவானது செயலிழந்ததையும்¸ கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட 43 பரிந்துரைகள் ஏற்கப்படாததையும் அவர் சுட்டிக்காட்டினார். நீதிபதி இர்ஷாத் அலி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட பரிந்துரை நிரகாரிக்கப்பட்டதையும்¸ குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி அகில்குரேஷி முதலாவதாக பம்பாய்க்கும் பின்னர் மத்திய பிரதேச தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டதையும் அதன் பின்னர் அவர் திரிபுரா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

காஷ்மீரில் இன்டர்நெட் வசதிகள் தடுக்கப்பட்ட வழக்கையும்¸ ஆட்கொணர்வு நீதிப்பேராணைத் தொடர்பாகவும்¸ ஜவஹர்லால் நேரு கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாகவும் தொடுக்கப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாததையும் திரு. அமித்ஷா அவர்களின் கொலைச் சதி வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா மர்மான முறையில் இறந்தது தொடர்பான வழக்கையும்¸ ரஃபேல் ஊழல் தொடர்பான வழக்கையும் விசாரிக்கும் போது மூடி முத்திரை இடப்பட்ட உறையில் ஆவணங்களை நீதிமன்றத்திற்கு மட்டும் கொடுத்து எதிர் தரப்பிற்கு அவ்வழக்கு ஆவணங்கள் தரப்படாமலேயே அவ்வழக்குகள் முடிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்னாள் தலைமை நீதிபதி கோகாய் சஹாரா பிர்லா புலனாய்வு தொடர்புடைய வழக்கின் போது¸ சஹாரா குழுமத்தில் கைப்பற்ற ஆவணங்களில் ஒன்றில் அன்றைய குஜராத் முதல்வருக்கு 25 கோடி கொடுத்தற்கான குறிப்பு ஒன்று கிடைத்தது எனவும்¸ ஆனால் அந்த ஆவணங்களைப் பெற்ற வருமான வரித்துறையானது சி.பி.ஐ-க்கு அவற்றினை கொடுத்திருக்க வேண்டும் எனவும்¸ ஆனால் அவ்வாறு நடக்கிவில்லை எனவும்¸ மன்மோகன்சிங் தலைமையிலான அரசானது இவ்வழக்கை சரிவர தொடராதது ஆச்சரியம் அளிக்கவில்லை எனவும்¸ அதில் தொடர்புடைய அனைவரும் அவரது ஆட்சிக்கால அதிகாரிகள் எனவும்¸ ஆனால் அடுத்து வந்த அரசும்¸ அவற்றை கிடப்பில் போட்டனர் எனவும் தற்போதைய பிரதமர் தனது தேர்தல் கூட்டங்களில் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்றால் திருமதி.ஜெயந்தி நடராஜன் அவர்களுக்கு ஜெயந்தி வரி கொடுக்க வேண்டும் என்று பேசினார், எனவே பிர்லா குழுமம் டைரி குறிப்புகள் பற்றி அவர் அறிந்திருக்கவேண்டும் எனவும்¸ ஆனால் அன்றைய குஜராத் முதல்வருக்கு 25 கோடிகள் கொடுக்கப்பட்டதாக சொல்லும் டைரி குறிப்பே தற்போதைய அரசு அவ்வழக்கின் விசாரணையை தொடராமல் இருப்பதற்குக் காரணம் எனவும்¸
இது தவிர நவம்பர் 2014ஆம் ஆண்டு திருவாளர் மோடி அவர்கள் அரசாங்கம் அமைந்த போது வருமான வரித்துறை சஹாரா குழுமத்தை சோதனையிட்டது என்றும் பணமாக மட்டும் 137 கோடி கைப்பற்றப்பட்டது எனவும் 113 கோடி ரூபாய் என்று, யாரால்¸ எவ்வாறு¸ எந்த இடத்தில் கொடுக்கப்பட்டது என்ற குறிப்புகளைக் கொண்ட தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன எனவும்¸ குஜராத் முதல்வர் திருவாளர் மோடி அவர்களுக்கு 40 கோடி ரூபாய் 9 தடவைகளாக கொடுக்கப்பட்டதாக குறிப்புகளில் கண்டிருந்ததையும் பூஷன் சுட்டிக்காட்டினார். இது தவிர காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித்¸ மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் போன்றவர்களும் பயன்பெற்றதைக் காட்டும் குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன எனவும்¸ ஆனால் இந்த ஆவணங்கள் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்படவில்லை எனவும்¸ மேற்சொன்ன ஆவணங்கள் லஞ்சம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நடந்ததைத் தெளிவாக காட்டிய பின்னும்¸ வழக்கில் இவ்வாறான டைரி குற்றவியல் புலன் விசாரணைக்கு போதுமானது என உச்சநீதிமன்றத்தின் முன் தீர்ப்புகள் இருந்த போதிலும் பிர்லா சஹாரா தாள்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவேயில்லை எனவும்¸ அந்த விசாரணைக்கு பொறுப்பாக இருந்த கே.வி.சவுத்திரி என்ற வருமானவரி உறுப்பினர் தலைமைக் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட போது அதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஜகதீஷ் சிங் கேகர் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தன எனவும்¸ அவ்வழக்கானது நீதிபதிகள் கேகர் அமர்வில் இருந்து மாற்றப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது எனவும்¸ அவ்வழக்கின் தீர்ப்பு தவறானது என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் துஷ்யந்தவே அவர்கள் எழுதிய கட்டுரையும் அவர் குறிப்பிட்டார்.

நீதிபதி அருண்மிஸ்ரா தனது மருமகன் திருமணத்தை டெல்லி அரசு ஒதுக்கீடு செய்த வீட்டிலும்¸ குவாலியரிலும் நடத்திய போது மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அத்திருமண வரவேற்பு நிகழ்வில் குவாலியரில் கலந்து கொண்டதையும் சஹாரா வழக்கு தீர்ப்பில் அவர் பயன்பெற்றதையும் பூசன் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்றம் தனது நடத்தை விதிகளை வகுத்துள்ளது எனவும் அதன்படி அரசியல் வாதிகளுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும்¸ அவ்வாறான நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது அவ்வாறான விதிகளுக்கு மாறாக தனது வீட்டுத் திருமணத்தில் பங்கு பெற்ற ஒருவரது வழக்கை கையாண்டது சரியல்ல என்றும் குறிப்பிட்டார்.

09.08.2016 அன்று அருணாச்சல பிரதேச முதல்வர் கலிக்கோபுல் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு மூன்று வாரங்கள் முன்னதாக நீதிபதி கேகர் மற்றும் திபக் மிஸ்ரா இருவரும் அவரை பதவி நீக்கம் செய்யும் முக்கிய தீர்ப்பை வழங்கி இருந்தார் எனவும்¸ தற்கொலை செய்த கலிக்கோபுல் தனது தற்கொலை கடிதத்தில் நீதிபதியின் கேகரின் மகன் 49 கோடி ரூபாய் கொடுத்தால் சாதகமான தீர்ப்பு எழுத முடியுமென அவரிடம் கூறியதாகவும் நீதிபதி தீபக் மிஸ்ரா 37 கோடிகள் கேட்டதாகவும் தற்கொலை கடிதத்தில் சொல்லியிருந்ததையும் சுட்டிக்காட்டினார். ஆனால் இன்று வரை அது தொடர்பான புலனாய்வோ விசாரணையோ நடக்கவில்லை.

28.08.2017லிருந்து 01.10.2018 வரையிலான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் பலமுரண்களை கொண்டது. நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவி காலத்தில் 01.08.2017 அன்று பிரசாத் கல்வி அறக்கட்டளை தொடர்பான வழக்கில் இந்திய மருத்துவ குழு பரிந்துரைகளை மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 24.08.2017ஆம் ஆண்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள் பிரசாத் கல்வி அறக்கட்டளையின் தங்களது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டார். இந்திய மருத்துவ குழுவின் அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் வழக்கில் ஒரு வழக்கை மட்டும் தனியாகப் பிரித்து அனுப்பியது வழக்கத்திற்கு மாறானது.

மாணவர்கள் சேர்க்கைத் தொடங்கும்படி பிரசாத் கல்வி அறக்கட்டளைக்கு உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இந்திய மருத்துவ குழு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டில் மறுபடியும் பிரசாத் கல்விக் அறக்கட்டளைக்கு உயர்நீதிமன்றத்தை அணுகும்வாய்ப்பு தரப்பட்டது. பிரசாத் கல்வி அறக்கட்டளை வழக்கில் சி.பி.ஐ. பதிவு செய்த நீதிபதிகள் லஞ்சம் வழங்கியது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் திரு. யாதவ் என்பவர் ஓடிசாவைச் சேர்ந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி குதுசி¸ மற்றும் பவனா பாண்டே என்பவர்களை தொடர்பு கொண்டதாகவும் அவர்கள் மீரட்டிலுள்ள வெங்கடேஸ்வரா மருத்துவகல்லூரியின் சுதுர்கிரி என்பவர் மூலமாக இது தொடர்பான சிக்கல்களை சரி செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

19.09.2017 ஆம் ஆண்டு குற்றச்சதி மூலம் லக்னோவின் பிரசாத் மருத்துவ அறக்கட்டளை வழக்கில் உச்சநீதிமன்றம் நீதிபதிகளின் தொடர்பு பற்றி விசாரிக்க திருமிகு காமினி ஜெய்ஸ்வால் மூலம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா விசாரித்து தள்ளுபடி செய்தது¸ சட்ட நீதிகளுக்கும்¸ நியாயத்திற்கும் புறம்பானது எனவும்¸ சி.பி.ஐ பதிவு செய்த உரையாடல்களில் நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் பிரசாத் அறக்கட்டளை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகளின் அமர்வில் அமர்ந்த நீதிபதிகளுக்கு வழங்க வேண்டிய லஞ்ச பணத்தையும் மற்றும் வழக்கு தொடர்பான விவரங்கள் குறித்த உரையாடல் நடந்ததையும் பூசன் சுட்டிக்காட்டினார். பிரசாத் மருத்துவ அறக்கட்டளை வழக்கில் அலகாபாத் நீதிபதி சுக்லா என்பவர் இடைக்கால தடை உத்தரவு வழங்கப் பணம் பெற்றது தெள்ளத் தெளிவாக தெரிந்த பிறகும் அவர் மீது வழக்கு பதிய உச்சநீதிமன்ற உள்ளரங்க நடவடிக்கை மூலம் மறுத்த தீபக் மிஸ்ரா நீதிபதி சுக்லாவை பாரளுமன்றம் மூலம் பதவி நீக்கம் செய்யவும் பரிந்துரைத்தார். ஆனால் அப்பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. 17.07.2020வில் நீதிபதி சுக்லா ஒய்வு பெற்றார்.

ஜனவரி 2018ல் நான்கு முதுநிலை நீதிபதிகளான செல்லமேஸ்வர்¸ குரியன் ஜோசப்¸ மதன் லோகூர்;¸ ரஞ்சன் கோகாய் ஆகியோர் நீதிபதி தீபக் மிஸ்ராவின் சர்வதிகார போக்கை கண்டித்தும்¸ மிக முக்கிய வழக்குகளை அவரே கையாளுவதைப் பற்றியும்¸ குறிப்பிட்ட சில அமர்வு நீதிபதிகளின் அமர்வில் மட்டுமே அவற்றை ஒப்படைப்பது குறித்தும்¸ மருத்துவ ஊழல்¸ நீதிபதி லோயா இறப்பிற்கான புலன் விசாரணை வழக்கு¸ ஆதார் வழக்கு¸ நீதிபதிகள் நியமன தொடர்பான வழக்கு போன்ற வழக்குகள் கையாளப்பட்ட விதம் குறித்தும் பூசன் அதிருப்தி தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்த போது பீமா கொரேகாவ்ன் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக போராளிகள் மீது புனே காவல்துறையால் புனையப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றம் செய்ய மறுத்தது உச்சநீதிமன்றம்¸ மகராஷ்ராவில் 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தவுடன் தானகவே முன்வந்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டதையும் பின்னர் சமூக போராளிகளும்¸ அறவழியில் நம்பிக்கைடையவர்களுக்கும்¸ பிணை வழங்க உச்சநீதிமன்றம் மறுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களின் பதவிக்காலத்தில் அஸ்ஸாம் தேசிய குடியுரிமை வழக்கு¸ ரபேல் வழக்கு¸ சி.பி.ஐ இயக்குநர் வழக்கு போன்றவற்றை அவர் கையாண்ட விதம் குறித்து பூசன் கவலை தெரிவித்தார். அஸ்ஸாம் தேசிய குடியுரிமை பதிவேடுகள் தொடர்பாக நீதிபதி கோகாய் கையாண்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித பரிகாரம் பெற முடியாத சூழல் ஏற்படும் விதத்தில் நீதிமன்றமே குடியுரிமைப் பதிவேட்டு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நீதி பெறுவது தொடர்பான வழக்கு அனைத்து கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் விவரங்களை மூடி முத்திரையிடப்பட்ட உரைகளில் பெற்று அதன் அடிப்படையில் அவ்வழக்கை கையாண்ட முறை குறித்தும் பூசன் கவலை தெரிவித்தார். தேர்தல் பத்திரம் நடைமுறைக்கு மத்திய ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்தும்¸ விதிகள் வளைக்கப்பட்டு 95 விழுக்காடு தேர்தல் பத்திரங்கள் ஆளுங்கட்சி மட்டுமே பெற்றதையும் பூஷன் சுட்டிக்காட்டினார்.
காஷ்மீரில் ஒரு வருட முழு அடைப்பு நிகழ்ந்ததையும் உறுப்பு 370 நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் காஷ்மீர் மூன்றாக துண்டாப்பட்டதையும்¸ அதன்மூலம் அமைதி திரும்பும் என்ற அரசின் வாதம் காஷ்மீரில் 4ஜி அலைக்கற்றையை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வழக்கில் காஷ்மீரில் வன்முறை நிலவுகிறது என்றும் அரசு முரண்பாடாக வாதம் செய்ததையும் பூஷன் சுட்டிக்காட்டினார்.

காஷ்மீர் தொடர்பான ஆட்கொணர்வு நீதிப்போராணைகளில் மெத்தனப் போக்கை உச்சநீதிமன்றம் கடைபிடித்ததையும்¸ கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் சீதாராம் யெச்சூரி தாக்கல் செய்த வழக்கில் அவசர மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர் யூசுப்தாரிகமி தாமதமாக விடுதலை செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாமர் மசூதி வழக்கில் அவசரம் காட்டிய கோகாய் 40 நாட்கள் தொடர்ச்சியாக அவ்வழக்கை விசாரித்து¸ நீதிமன்ற அவமதிப்பு ஏற்படுத்தி உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பாபர் மசூதியை இடித்தமை சட்ட விரோதம் என தங்கள் 09.11.2019ஆம் ஆண்டு தீர்ப்பில் குறிப்பிட்ட போதிலும்¸ பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என அளித்த தீர்ப்பின் மூலம் சட்ட விரோத மசூதி இடிப்பை நியாயப்படுத்தியதுடன் அது சட்டத்தின் ஆட்சிக்கு முரணான தீர்ப்பு எனவும் பூசன் குறிப்பிட்டுள்ளார். பாபர் மசூதி தீர்ப்பில் தீர்ப்பு அளித்த நீதிபதியின் பெயர் குறிப்பிடாததையும் சட்ட விரோதமான பின்னிணைப்பு ஒன்றை 116 பக்கங்கள் வழங்கியதும் கேள்விக்குரியது எனவும்¸ ஒருமித்த ஆனால் ஒளிந்து கொள்ளும் தீர்ப்பு unanimous but anonymous என நீதிபதி ஏ.பி.ஷா எழுதிய கட்டுரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி கோகாய் மீது நீதிமன்ற இளநிலை உதவியாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு புரிந்தாக குற்றம் சாட்டியவுடன்¸ குற்றம் சாட்டிய பெண்மணி மூன்று முறை பணிமாற்றம் செய்யப்பட்டு இடைக்காலப் பணிநீக்கம் செய்யப்பட்டதையும்¸ டெல்லி காவல்துறையில் பணிபுரிந்த அப்பெண்மணியின் கணவரும்¸ மைத்துனரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். அப்பெண்மணியின் மாற்றுதிறனாளியான இன்னோரு மைத்துனர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டதையும் பூசன் சுட்டிக்காட்டினார். அப்பெண்மணி தாக்கல் செய்த உறுதிமொழி தாள் குறித்த வழக்கில் நீதிபதி கோகாய் தன் மீதான வழக்கைத் தானே அமர்ந்து முடிவு செய்தது அடிப்படை சட்டக்கருத்தான ‘தனது வழக்கில் தானே தீர்ப்பளிக்கக் கூடாது’ என்ற சட்ட மீறல் எனவும் பூஷன் குறிப்பிட்டார். பாலியல் தொந்தரவு வழக்கில் அமைக்கப்பட்ட குழுவின் நீதிபதிகள் அரவிந்த போப்டே¸ இந்து மல்ஹோத்ரா¸ மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம்பெற்ற போதிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வழக்கறிஞர் முன்னிலையாக அனுமதிக்காததால் புகார் கொடுத்த பெண்மணி அக்குழுவின் முன் முன்னிலையாக விரும்பாததையும் பூசன் குறிப்பிட்டார். நீதிபதி கோகாய் மீதான குற்றச்சாட்டு மூன்று நீதிபதிகள் குழுவினால் முடித்துவைக்கப்பட்டாலும் அதன் இறுதி அறிக்கை வெளியிடப்படவேயில்லை என்பதையும்¸ அப்பெண்மணி மறுபடியும் பணி அமர்த்தப்பட்டதையும்¸ அவர்களது மைத்துனர்களுக்கு பணி வழங்கப்பட்டன எனவும். ஆனால் கோகாய் விவகாரம் திரை மூடிய மர்மமாகவே இன்றும் இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

நீதிபதி கோகாய் தலைமையிலான கொலிஜியம் என்ற முதுநிலை நீதிபதி குழு குஜராத் மாநிலத்தில் அரசுக்கு எதிராகப் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கிய அகில் குரேஷி பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி பின்னர் மத்திய பிரதேச தலைமை நீதிபதியாக பரிந்துரைத்து, இறுதியில் திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக்கப்பட்டதையும் பூசன் குறிப்பிட்டார்.
ஓய்வுப் பெற்ற நான்கு மாதங்களில் நீதிபதி கோகாய் மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்றதையும்¸ சாமானிய மனிதர்களுக்கு நீதித்தறை அமைப்பின் மீது உள்ள நம்பிக்கை சிதைந்து போனதையும் ‘உதவிக்குப் பதவி’ என்ற அடிப்படையில் நீதிபதியும்¸ அரசும் கைகோர்த்து கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிபதி போப்டே அவர்கள் குடியுரிமைத் திருத்த சட்டம் தொடர்பான வழக்குகளில் மக்களைக் காப்பாற்றத் தவறியதையும்¸ டெல்லி கலவரத்தில் டெல்லி எரிந்த போது நீதிபதி முரளிதரன் அவர்கள் 26.02.2020 முதல் தகவல் அறிக்கைப் பதிய உத்தரவிட்டதையும் அன்று நள்ளிரவே அவர் மாற்றம் செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டினார் . இது தவிர புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வழக்கு¸ காஷ்மீர் வழக்கு 4ஜி அலைக்கற்றை வழக்கு ஆகியவற்றில் நீதிபதியின் போப்டே அவர்களின் உத்தரவுகள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாக இல்லை என பூஷன் சுட்டிக்காட்டினார்.

இது தவிர ஏராளமான தரவுகளை தான் தர முடியும் எனவும், மேற்சொன்ன நிகழ்வுகளின் அடிப்படையிலேயே தான் கடந்த ஆறு ஆண்டுகளில் குடியாட்சி சிதைக்கப்பட்டதையும் அதில் நான்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பங்கு குறித்தும் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டதாகவும், அவ்வாறு கூற அரசியலமைப்பு சட்டம் 19(1)(ஏ)யின் படி தனக்கு கருத்துரிமையுள்ளது எனவும்¸ ஆகஸ்ட் மாதம் இரண்டாம் நாள் 2020ஆம் ஆண்டில் தனது உறுதி மொழி வாக்குமூலத்தை அளித்தார்.

மேற்சொன்ன உறுதிமொழி வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று பூசனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு உட்பட பல வழக்குகளில் பல அரசியல்கட்சிகள் நீர்த்து போன கருத்துகளை கூறி வந்த சூழலில் பூசனின் உச்சநீதிமன்ற வாக்குமூலம் மகிழ்ச்சி அளிக்கிறது.


தி. லஜபதி ராய், வழக்கறிஞர், மதுரை.

31.08.2020


பின்குறிப்பு: உதவிய சீனி,புஷ்பவல்லி,நர்கிஷ் ஆகியோருக்கு நன்றி.!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.