சுவாமி அக்னிவேஷ் உரிமைகளைத் துறக்காத உண்மைத் துறவி! – எஸ்.வி.ராஜதுரை

■ இந்தியாவின் தலைசிறந்த மனித உரிமை, குடிமை உரிமைப் போராளிகளிலொருவரான சுவாமி அக்னிவேஷ் நேற்று (11.9.2020) மாலை 6.30க்கு டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் உயிர் நீத்தார் என்ற செய்தி இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள மனித உரிமைக் களப்போராளிகள், மதசார்பற்ற, ஜனநாயக, சோசலிச சக்திகளுக்கும் மத, இன, சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டுள்ள இந்திய மக்களுக்கும் பேரிடியாய் வந்து சேர்ந்துள்ளது.

1939 செப்டம்பர் 21இல் ஆந்திராவைச் சேர்ந்த சனாதன பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த அவருக்குப் பெற்றோர்கள் இட்ட பெயர் வேப்பா ஷியாம் ராவ். நான்காம் வயதிலேயே அவரது தந்தை இறந்துவிட்டதால், இன்றைய ஹரியானா மாநிலத்தில் அப்போதிருந்த சமஸ்தானமொன்றில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த அவரது தாய்வழிப் பாட்டனாரால் வளர்க்கப்பட்ட அவர் சட்ட, வணிகப் படிப்புகளில் கல்லூரிப் பட்டதாரியாகி கொல்கத்தாவிலுள்ள புகழ்பெற்ற தனியார் கல்லூரியொன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் சட்டப்படிப்பையும் முடித்துவிட்டு வழக்குரைஞராகவும் செயல்பட்டார்.

காவி யாருடையது?

1968இல் ஹரியானாவுக்கு சென்று ஆரிய சமாஜத்தில் சேர்ந்து சந்நியாசிகளுக்கான உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டார். ஆனால் அவரது முற்போக்குக் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத பிற்போக்குவாதிகளே அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்ததால், அதிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்றாலும் கடைசி வரை உண்மைத் துறவியாக காவி உடையையே தரித்து வந்தார். ‘காவி’ என்பது புனிதமானது என்றும் அதற்கும் இந்துத்துவாதிகளுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் தொடர்ந்து கருத்துப் பரப்புரை செய்துவந்தார்.

ஆரிய சமாஜத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஆரிய சபா என்ற அரசியல் கட்சியை 1970இல் தொடங்கிய அவர், 1977இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ஹரியானா மாநிலத்தில் அமைந்த ஜனதா கட்சி அரசாங்கத்தில் கேபினெட் தகுதி பெற்ற கல்வி அமைச்சராகச் சேர்க்கப்பட்டார். அமைச்சராக இருக்கும்போதே ஹரியானா அரசாங்கத்தின் பிற்போக்குக் கொள்கைகளின் காரணமாக அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அவரை சதி, கொலைக் குற்றங்களில் சம்பந்தப்படுத்தி 14 மாதங்கள் சிறையில் தள்ளியது அந்த அரசாங்கம். ஆனால் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானார்.

கொத்தடிமை மீட்பு

1982இல் டெல்லியின் சுற்றுப் பகுதிகளில் கல் குவாரிகளில் இருந்த கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பதற்காக ‘பந்துவா முக்தி மொர்ச்சா’ என்னும் அமைப்பை நிறுவினார். அதன் செயல்பாடுகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் விரிவடைந்தன. இந்தியா முழுவதிலுமிருந்த பல்வேறு மனித உரிமை இயக்கங்களுடனும் போராளிகளுடனும் தன்னை இணைத்துக் கொண்ட அவர். கொத்தடிமைகளின் நிலையைப் பற்றி ஜெனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் முன் நவீன அடிமை முறைகளைப் பற்றிய விவரங்களை எடுத்துரைத்தார். கணவரை இழந்த பெண்கள் ‘உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தைப் புதுப்பிக்க முயன்ற இந்துத்துவ சக்திகளுக்கு எதிராகப் போராடிய அவர், இந்திய ஒன்றிய அரசாங்கம், ‘ உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும் சட்டம் 1987’ என்பதை இயற்றச் செய்வதில் முக்கியப் பங்காற்றியதுடன் பெண் சிசுக் கொலைகளைத் தடுத்து நிறுத்தும் இயக்கத்திலும் ஈடுபட்டார். சர்வதேசக் கண்னோட்டம் கொண்டிருந்த அவர், கடவுச் சீட்டுகளும் புலம்பெயர்வோருக்கான சட்டங்களும் எல்லா நாடுகளிலும் அகற்றப்பட வேண்டும் என்று பேசி வந்தார்.

தமிழகமும் அக்னிவேஷும்

கொத்தடிமைகளை மீட்கும் இயக்கத்தின் சார்பாகவும், பல்வேறு மதப் பிரிவினரிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காகவும் நடந்த முயற்சிகள் சார்பாகவும் அவர் தமிழ்நாட்டிற்குப் பலமுறை வருகை தந்திருக்கிறார். 1981-82ஆம் ஆண்டுகளில் எம்.ஜி.ஆர்.ஆட்சிக் காலத்தில் நக்ஸலைட்டுகளை ஒடுக்குதல் என்ற பெயரால் நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி, திருப்பத்தூர் பகுதிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட நக்ஸலைட் புரட்சியாளர்கள் ‘ என்கவுன்ட்டர்’ மூலம் கொல்லப்பட்டு, அந்தப் பகுதிகளுக்குள் மனித உரிமை ஆர்வலர்கள் நுழைய முடியாதிருந்த காலத்தில் எனது அழைப்பை ஏற்று தமிழகம் வந்த அவர் 1982இல், காலஞ்சென்ற சோசலிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் மிருணாள் கோரெ, கே.ஜி.கண்ணபிரான், பாரிஸ்டர் ராமச்சந்திரன். பி.வி.பக்தவத்சலம் ஆகியோருடன் இணைந்து அந்தப் பகுதிகளுக்குள் சென்று போலீஸ் தடையையும் மீறி பல்வேறு இடங்களில் சொற்பொழிவாற்றினார். போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட புரட்சியாளர் தர்மபுரி பாலனை பகத்சிங்குடன் ஒப்பிட்டுப் பேசினார். ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கவிதை நடையில் பேசும் ஆற்றல் கொண்டிருந்த அவர், ஆங்கிலத்தைத் தவிர்க்குமாறும் தாய்மொழியிலே பேசுமாறும் என்னைப் போன்றவர்களிடம் கூறுவார்.

உச்சநீதிமன்றத்தின் கண்டனம்

இந்துத்துவத்தையும் சங்கிகளையும் உறுதியாக எதிர்த்து வந்த அவர், முஸ்லிம்களைப் புண்படுத்தும் ‘வந்தேமாதரம்’ பாடலை அரசாங்கம் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி வந்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் மீது ஏவப்பட்டு வரும் ஒடுக்குமுறைகளை எதிர்த்து வந்த அவர், அங்கு முஸ்லிம்களிடமிருந்து காஷ்மீர் பண்டிட்டுகளைப் பிரித்தெடுக்க ஒன்றிய அரசாங்கம் செய்து வந்த முயற்சிகளைக் கண்டனம் செய்தார்.

பூரி ஜகந்நாதர் ஆலயத்திற்குள் இறை நம்பிக்கையுள்ள பிற மதத்தினரையும் அனுமதிக்க வேண்டும், காஷ்மீர் அமர்நாத் குகையில் உள்ள சிவலிங்கம் என்று சொல்லப்படுவது ஒரு பனிக்கட்டிதானே தவிர வேறல்ல என்ற அவரது கருத்துகள் இந்துத்துவவாதிகளால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டன. இரண்டாவதாகச் சொல்லப்பட்ட கருத்து, இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தும் என்று கூறி உச்சநீதிமன்றம் அவரைக் கண்டனம் செய்தது.

2018இல் கர்நாடகாவில் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதைக் கண்டனம் செய்ய ஆளுநர் மாளிகையை நோக்கிய பேரணியில் கலந்து கொண்டார். மாட்டிறைச்சி உண்பது மனித உரிமைகளிலொன்றாகக் கருதிய அவர், பசுப் பாதுகாப்பு என்ற பெயராலும், மாட்டிறைச்சி உண்பதைத் தடைசெய்ய வேண்டும் என்ற பெயராலும் இந்துத்துவ குண்டர்கள் நடத்திவந்த கொலை வெறித் தாக்குதல்களை முழுமூச்சோடு எதிர்த்து வந்தார். இதன் காரணமாக சங்கிகள், அவர் ’கிறிஸ்தவ மிஷனரிகளின் ஏஜென்ட்’ என்ற பரப்புரையை முடுக்கிவிட்டனர்.

ஜார்க்கண்ட் தாக்குதல்

சட்டவிரோத சடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மகாராஷ்டிர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கவுதம் நவ்லாகா, ஆனந்த் தெல்தும்ப்டெ, சுதா பரத்வாஜ் ஆகியோருடன் நட்பு கொண்டிருந்த அவர், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடி மக்கள், உழவர்கள் ஆகியோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டார். அதன் பொருட்டு இரு ஆண்டுகளுக்கு முன் ஜார்கண்ட் மாநிலத்துக்குச் சென்ற அவரை இந்துத்துவக் குண்டர்கள் அடித்துத் துவைத்தனர். அங்குள்ள உழவர்களால் அவர் காப்பாற்றப்பட்டாலும், உடல் முழுவதிலும், குறிப்பாக ஈரல் பகுதியில் விழுந்த கனத்த அடிகள் காரணமாக ஓராண்டுக்காலம் செயலற்றவராக்கப்பட்டு, நீண்டகால மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவருக்கு அந்த சிகிச்சை பலனின்றிப் போனதால் மரணமடைந்தார்.

என்னைவிட அவர் எட்டு மாதங்களே மூத்தவர். டெல்லியில் அவரது வீட்டில் எனக்குக் கிடைத்த விருந்தோம்பலை மறக்கவே முடியாது. நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டிருந்த அவர், “என் வீட்டில் அசைவ உணவு கிடைக்காது என்பதற்காக கோபித்துக் கொள்ளாதீர்கள்” என்று கூறுவார். இந்தியாவிலுள்ள உண்மையான் ஆன்மிக மரபு, மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோசலிசம், காந்தியம் ஆகியவற்றின் கலவையாக விளங்கிய அந்த அற்புதமான மனிதரின் இறப்பு மேற்சொன்ன விழுமியங்களைப் பாதுகாக்க விரும்பும் இந்தியர்கள் எல்லோருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.