சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை: தீர்ப்பை வரவேற்கிறோம்..

சிறுமியிடம் பாலியல் வன்கொடுமைச் செய்த அபிஷேகப்பாக்கத்தைச் சேர்ந்த மின்துறை ஊழியர் வினோத்திற்கு புதுச்சேரி போக்சோ தனி நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 2000 தண்டமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

சென்ற 15.05.2019 அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் ‘மீட்டர் ரீடிங்’ எடுக்கச் சென்ற போது இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளான் வினோத். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பாகூர் காவல்துறையினர் அவனை உடனே கைது செய்தனர்.

அப்போது பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதிக் கேட்டு வன்னியர் அமைப்பினர் பாகூரில் போராட்டம் நடத்தினர். அதோடு, மனித உரிமை அமைப்புகள் என்ன செய்கின்றன என்ற கேள்வியும் எழுப்பினர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து பேசினோம். மிகவும் வறுமையிலுள்ள குடும்பம். அப்பா எப்போதும் குடித்துவிட்டு வேலைக்குப் போவதில்லை. அம்மா புற்று நோய்த் தாக்கி ஜிப்மரில் சிகிச்சைப் பெற்று வந்தார். ஒரு சிறிய சுவர்கள் பூசப்படாத ‘ஷீட்’ போட்ட வீடு. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு அக்கா, ஒரு தம்பி. மூவரும் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர்.

பின்னர், இவ்வழக்கை விசாரித்த பாகூர் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் அவர்களைச் சந்தித்தோம். அவர் வழக்கு விசாரணை முடிந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்துவிட்டோம். விரைவில் விசாரணை நடைபெறும் என்று கூறினார். விரைந்து விசாரித்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்த அவரைப் பாராட்டினோம்.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைதான் புகார்தாரர். இந்நிலையில், சிறையிலிருந்த குற்றவாளி வினோத் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை மனுத் தாக்கல் செய்தான். அதில், தனக்கும் அச்சிறுமியின் தாய்க்கும் தொடர்பு இருந்ததாகவும், அதனால் அவன் மீது அச்சிறுமியின் தந்தை இவ்வாறு பொய்யாக புகார் அளித்ததாக 100 சதவீதம் பொய்யான தகவலைக் கூறியிருந்தான். குற்றத்தையும் செய்துவிட்டு, அதிலிருந்து தப்பிக்க இப்படியொரு குற்றச்சாட்டைச் சொல்ல எப்படி மனம் துணிகிறதோ?

இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து தன் சேம்பரில் விசாரித்தார். மனுவில் கூறப்பட்டது பொய் என அறிந்து குற்றவாளியை சிறையில் வைத்தே வழக்கை முடிக்க உத்தரவிட்டார். இதனிடையே, அச்சிறுமியின் தாயும் இறந்துபோனார். குழந்தைகள் மூவரும் காப்பகத்தில் தங்கிப் படிக்கின்றனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து சமரசம் செய்ய முயற்சியும் நடந்தது. ஆனால், வழக்கு விசாரணையின் போது அச்சிறுமி மற்றும் அவளது தம்பி ‘குட்டிப்பையன்’ சாட்சியம் அளித்ததோடு, குற்றவாளியையும் அடையாளம் காட்டினார்கள்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமிக்குக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 357-இன்படி இழப்பீடு (Victim Compensation Scheme) வழங்க வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை வைத்து மனு அனுப்பினோம். புதுச்சேரி அரசு அக்குழந்தைக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கியது.

தற்போது இவ்வழக்கில் சென்ற 13.10.2020 அன்று குற்றவாளிக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி தனபால், அரசு சிறப்பு வழக்கறிஞர் பாலமுருகன், விசாரணை அதிகாரியான அப்போதைய பாகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல்துறையினர் என அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.