காவல்நிலைய மரணத்திற்கு காரணமான போலீசார் அனைவரையும் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 27.04.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தாமோதரன் போலீஸ் காவலில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய மேட்டுப்பாளையம் மற்றும் முதலியார்பேட்டை காவல்நிலைய போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்வதோடு கைது செய்ய வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசை வற்புறுத்துகிறோம்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள டி.கே. மண்டபத்தை சேர்ந்தவர் தாமோதரன். வயது 35. இவர் மேட்டுப்பாளையத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் கட்டிட மேஸ்திரியாக வேலைப் பார்த்து வந்தார். திருக்கோவிலூரை சேர்ந்த ஜெயசங்கர் என்பவர் கடந்த 24ந் தேதியன்று மேட்டுப்பாளையத்தில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணைக்காக தாமோதரனை கடந்த 25-ந் தேதி மதியம் 2 மணியளவில் மேட்டுப்பாளையம் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அவரோடு திருக்கோவிலூரை சேர்ந்த ராஜேந்திரன், சந்தோஷ், பாலு, ராமு, தட்சணாமூர்த்தி ஆகியோரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன்பின்னர் மேற்சொன்ன அனைவரையும் முதலியார்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது மேட்டுப்பாளையம் மற்றும் முதலியார்பேட்டை போலீசார் மேற்சொன்ன அனைவரையும் அடித்துத் துன்புறுத்தி உள்ளனர். அப்போது அங்கு இரவு சுமார் 7 மணியளவில் போலீசாரின் சித்திரவதையை தாங்க முடியாமல் தாமோதரன் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரையும், அவருடன் ராஜேந்திரன், பாலு, சந்தோஷ் ஆகிய மூவரையும் ஒரு போலீஸ்காரர் ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தாமோதரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

ஒருவரை விசாரணைக்கு அழைத்து சென்று போலீஸ் காவலில் வைத்திருக்கும் போது அந்த நபருக்கு என்ன நேர்ந்தாலும் தொடர்புடைய காவல்துறையினர் தான் முழுப் பொறுப்பு என உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி பார்த்தால் தாமோதரன் போலீஸ் காவலில் இறந்தது மட்டுமல்லாமல், இது காவல் மரணம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெள்ள தெளிவாகிறது.

இதுகுறித்து குற்றவியல் நடைமுறை சட்டம் 176 (1 ஏ) பிரிவின்படி நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிடவும், பிரேத பரிசோதனையை ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் செய்யவும், வீடியோவில் பதிவு செய்திடவும் வலியுறுத்தி அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள், தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் ஆகியோருக்கு நேற்று தந்தி அனுப்பியிருந்தோம். இதனை தொடர்ந்து தற்போது நீதித்துறை நடுவர் விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீஸ் காவலில் நடந்த மரணத்தை நேரில் பார்த்த சாட்சிகளான ராஜேந்திரன், சந்தோஷ், பாலு, ராமு, தட்சணாமூர்த்தி ஆகியோரை போலீசார் மிரட்டி வருவதாக அறிகிறோம். இந்த வழக்கின் கண்ணால் கண்ட முக்கிய சாட்சிகளான இவர்களுக்கு அரசும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

புதுச்சேரி அரசு உடனடியாக இந்த சம்பவம் குறித்த வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்கு விசாரணையை சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்ற வேண்டும். இந்த சம்பவத்தோடு தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்வதோடு கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு உடனே வழங்க வேண்டும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுக்கும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கும் விரிவான அறிக்கை ஒன்றை அனுப்ப உள்ளோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*