கூடங்குளம் இன்று : ஒரு நேரடி கள ஆய்வு அறிக்கை

கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை உடனே கைவிடு !

அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், வழக்குரைஞர் ரஜினி, மு. சிவகுருநாதன்

‘மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்’, தமிழ்நாடு (People’s Union for Human Rights), ‘மற்றும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’, புதுச்சேரி (Federation for People’s Rights) ஆகிய மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த நாங்கள் நால்வரும் இரண்டு மாதங்களுக்குப் பின் இரண்டாம் முறையாக ஜனவரி 05, 06 (2012) தேதிகளில் கூடங்குளம் சென்று மக்களைச் சந்தித்தோம். இடிந்தகரையில் நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இரண்டு நாட்களும் முழுமையாகக் கலந்து கொண்டோம். போராடும் மக்களுடன் விரிவாகப் பேசினோம். முனைவர் சுப.உதயகுமார் உள்ளிட்ட போராட்டக் குழுவினரிடமும் உரையாடினோம்.

சென்ற மாதத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் ரஷ்யா சென்று அங்குள்ள தலைவர்களிடம் அளித்த வாக்குறுதியை எல்லோரும் அறிவோம். இரண்டு வாரங்களில் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதற் கட்ட அணு உலைகள் செயல்படும் என அவர் கூறியிருந்தார். அவர் கூறி இப்போது சுமார் ஒரு மாதம் ஆகிவிட்டது. அந்தத் திசையில் ஏதும் வேலைகள் நடை பெறுகின்றனவா, போராடும் மக்களின் மனநிலை இப்போது எப்படி உள்ளது முதலானவற்றை நேரில் கண்டறிவதே எங்களின் நோக்கம்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் எவ்விதத் தொய்வுமில்லாமல் நடைபெற்று வருகிறது. இடிந்தகரையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டம் 145 நாட்களாகத் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. தூரப் பகுதிகளிலிருந்து வருகிறவர்களின் சிரமங்களைக் குறைக்கும் பொருட்டு தற்போது கூடங்குளம் மற்றும் இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த மக்களை மட்டுமே தொடர் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளுமாறு போராட்டக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. எனினும் தேவைப்பட்டால் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக் கணக்கில் மக்கள் வந்து கலந்து கொள்ள எப்போதும் தயாராக உள்ளதாகப் போராட்டக் குழுவினர் கூறினர். தொடர்ந்து பல மாத காலங்களாகத் தொழில் செய்யாமல் போராட்டத்தில் கலந்து கொள்வதால் ஏற்படும் வருமான இழப்பைக் குறைக்க வேண்டி தொழில்களுக்குச் செல்லும் ஆண்களுக்கு விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே ஒவ்வொரு நாள் போராட்டத்தின் போதும் அதிக அளவில் பெண்களும் சற்றே குறைந்த எண்ணிக்கையில் ஆண்களும் கலந்து கொள்கின்றனர்.

நாங்கள் அங்கிருந்த இரண்டு நாட்களிலும், ஒவ்வொரு நாளும் சுமார் 300 பேர்கள் உண்ணாவிரதத்தில் பங்கு பெற்றிருந்தனர். ஜனவரி 5 அன்று சென்னையிலுள்ள ஆசிய இதழியல் கல்லூரி மாணவர்கள் வந்து போராட்டத்திலிருந்த மக்களிடம் பல கேள்விகளைக் கேட்டனர். இந்த அணு உலையில் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பில்லை என அப்துல் கலாம் போன்றவர்கள் சொல்வது, இப் போராட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது என மத்திய அமைச்சர்கள் பரப்புகிற செய்தி உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய கேள்விகளும் கேட்கப்பட்டன. மிகவும் உணர்ச்சி வசப்பட்டதோடு கடுமையாகவும் உறுதியாகவும் இக்குற்றச்சாட்டுகளை மக்கள் மறுத்தனர். சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்திற்கு எங்களுக்கு எதற்குப் பணம், தேவைப்படும் எனக் கேட்ட அவர்கள், குறைந்த செலவையையும் கூடத் தாங்கள் எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றனர் என்பதை விளக்கினர். அணு உலை மற்றும் அதன் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி அம்மக்கள், குறிப்பாகப் பெண்கள் கொண்டிருந்த தெளிவு எங்களுக்கு வியப்பை அளித்தது. போராட்டத்தின் ஊடாக மக்களின் உலகியலறிவு பெரிதும் வளர்ந்துள்ளதை எங்களால் காண முடிந்தது.

குழந்தைகளுக்குப் பாலூட்டிக்கொண்டு போராட்டத்தில் கலந்து கொள்ளும் தாய்மார்கள், பீடி சுற்றிக் கொண்டே உண்ணாவிரதமிருப்போர் என்பதாகப் போராட்ட அரங்கு காட்சியளித்தது.

தாங்கள் ஒன்றும் மின் ஆற்றலுக்கு எதிரானவர்கள் அல்ல எனவும் வரும் ஜனவரி 14 முதல் மின் சிக்கனத்திற்காக, அதிக மின் ஆற்றலைக் கோரும் குமிழ் விளக்குகள் (bulbs) பயன்படுத்துவதை நிறுத்தப் போவதாகவும் போராட்டக் குழுவைச் சேர்ந்த மில்டன் எங்களிடம் கூறினார்.

அணு உலை உள்ள வளாகத்திற்குள் போகிற வாகனங்கள், செல்கிற அதிகாரிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை போராட்டக் குழுவினர் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அலுவலகத்தில் அமர்ந்தவாறே கண்காணிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் பகல் ஷிஃப்டிற்கு 120 அதிகாரிகளும் இரவு ஷிஃப்டிற்கு 60 அதிகாரிகளும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களையும் கூட, அணு உலைக்காகக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள யுரேனியம் ஆக்சைட் எரிபொருள் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது முதலான பணிகளுக்காக மட்டுமே அனுமதிப்பதாகப் போராட்டக் குழுவினர் கூறினர். அணு உலையைச் செயல்படுத்தும் நோக்கில் கூடுதலாக ஒருவர் உள்ளே நுழைந்தாலும் அவர்களைத் தடுத்துப் பிடித்து வெளியேற்றுவோம் என உறுதிபடக் கூறினர். மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரையும் கூடக் கூடுதலாக யாரையும் அவர்கள் அனுமதிப்பதில்லை. தமிழக அரசும் உள்ளே போய்வருவோரைக் கண்காணிக்கிறது. மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை அணு உலையைச் செயல்படுத்தக் கூடாது என்கிற சட்ட மன்றத் தீர்மானத்தின் அடிப்படையில் இக் கண்காணிப்பை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்கிறார். தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் என மக்கள் மிக உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளதை நேரில் கண்டோம்.

எனினும் நேற்று அங்கு நடந்த ஒரு நிகழ்வு மத்திய அரசின் சதி நோக்கத்தையும் மக்களின் உறுதியையும் காட்டுகிறது. உள்ளே உள்ள சுமார் 60 மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினருக்கான உணவுக்கான பொருட்களை மட்டும் இதுவரை போராட்டக் குழுவினர் உள்ளே கொண்டு செல்ல அனுமதித்து வந்தனர். திடீரென அதிக அளவில் உள்ளே உணவுப் பொருட்கள் செல்வதைக் கண்டு அய்யப்பட்ட கூடங்குளம் மற்றும் இடிந்தகரையைச் சேர்ந்த பெண்கள் நேற்று (ஜனவரி 5) அணு உலை நுழை வாயிலில் கூடி போக்குவரத்தைத் தடுத்து மறியல் செய்தனர். உள்ளே செல்பவர்களில் கொஞ்சப் பேர்களைத் தினந்தோரும் நிறுத்தி வைத்துள்ளதாகப் போராட்டக் குழுவினரும் மக்களும் ஐயம் கொண்டு இம் மறியல் போராட்டத்தை நடத்தினர். உடனடியாக மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் அங்கு விரைந்து சென்று உள்ளே ஒரு குழுவை அனுப்பி ஆய்வு செய்து நாளைக் காலை (அதாவது இன்று ஜனவரி 7) மக்களிடம் தெரிவிப்பதாக வாக்களித்த பின்னரே மறியல் செய்த பெண்கள் கலைந்தனர்.

கூடங்குளம் மற்றும் இடிந்தகரை ஊரெங்கும் உளவுத் துறையினர் குவிக்கப்பட்டு வெளியூர்களிலிருந்து வருவோர் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கண்காணிக்கப் படுகின்றனர்.

கோரிக்கைகள்:

தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் சற்றும் மதியாமல் இரண்டு வாரங்களுக்குள் அணு உலை செயல்படுத்தப்படும் என ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். அணு உலையைச் செயல்படுத்த அங்கு தற்போது வாய்ப்பே இல்லை. கூடங்குள அணுமின் நிலையத் தலைவர் காசிநாத் பாலாஜி ஃப்ரன்ட்லைன் இதழுக்கு அளித்த பேட்டியில் உள்ளூர் மக்களின் ஒப்புதலும் ஒத்துழைப்பும் இல்லாமல் அணு உலையைச் செயல்படுத்த இயலாது என ஏற்றுக்கொண்டுள்ளதை வரவேற்கிறோம். உள்ளூர் மக்களின் அச்சம் இம்மியும் குறையவில்லை. எக்காரணம் கொண்டும் அணு உலையைச் செயல்படுத்த அவர்கள் அனுமதிக்கப் போவதும் இல்லை. இந்நிலையைக் கணக்கில் கொண்டு உடனடியாக மத்திய அரசு கூடங்குள அணு உலை நிரந்தரமாக மூடப்பட்டதாக அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசின் மின் தொகுப்பிலிருந்து உடனடியாக 1000 மெ.வா மின்சாரத்தை அளிக்க வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தமிழக மக்களின் இவ்விரு கோரிக்கைகளையும் மத்தியில் வற்புறுத்தி நிறைவேற்ற வேண்டும்.
அறிவியல் ஆய்வுகளுக்காக ஒதுக்கப்படும் நிதி அளவை அதிகரிப்பதோடு, அதில் பெருந்தொகையை புதுப்பிக்கத்தக்க மாற்று மின் உற்பத்தித் திட்ட ஆவுகளுக்காகச் செலவிட வேண்டும். மாற்று மின் திட்டங்களைப் பெரிய அளவில் ஊக்குவிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆங்காங்கு கூடங்குளத் திட்டத்தைச் செயல்படுத்து எனக் கோரிக்கை வைத்துச் சிறிய அளவில் போரட்டங்கள் தூண்டிவிடப் படுவது வருந்தத் தக்கது. தமிழக மக்களைப் பெரிதும் பாதிக்கக் கூடிய முல்லைப் பெரியார் அணை குறித்த பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் அளிக்கிற முக்கியத்துவம் பாராட்டுக்குரியது. கூடங்குளப் பிரச்சினையிலும் கவனமாக இருந்து மத்திய அரசின் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*