இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தல்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 17.03.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:

இலங்கைக்கு எதிரான ஐ.நா. சபை தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்திடும் வகையில் முதல்வர் ரங்கசாமி உடனடியாக அனைத்துக் கட்சி, இயக்கக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின் போது அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தை உலக நாடுகள் பலவும் ஆதரிக்க முடிவு செய்துள்ளன.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமென தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன. இதனை வலியுறுத்தி உலகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன. இதற்காக புதுச்சேரி கல்லூரி மாணவர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உடனடியாக அனைத்துக் கட்சி, இயக்கக் கூட்டத்தைக் கூட்டி இலங்கைக்கு எதிரான ஐ.நா. சபை தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

வழக்கம் போல் முதல்வர் ரங்கசாமி இந்தப் பிரச்சனையிலும் மெளனம் காப்பாரானால் உலகத் தமிழர்கள் அவரை மன்னிக்கமாட்டார்கள் என்பதோடு, வாக்களித்த தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்ற அவப்பெயரை எடுக்க நேரிடும் என எச்சரிக்கின்றோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*