சேலம் அங்கம்மாள் காலனி தாக்குதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

கடந்த நான்கு ஆண்டுகளாகச் சேலம் புதியப் பேருந்து நிலையத்திற்கருகிலுள்ள அங்கம்மாள் காலனியில் வசிக்கும் 23 குடும்பங்கள் தாங்கள் 50 ஆண்டு காலமாக வசித்து வரும் குடியிருப்பு நிலத்தைக் காப்பாற்றுவதற்கென நிலப் பறிப்பு சக்திகளுக்கு (land mafia) எதிராக நடத்தி வரும் போராட்டம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆக்ரமிப்புச் சக்திகளிடமிருந்து நிலத்தைக் கைப்பற்றி அம் மக்களிடம் திரும்ப வழங்க வேண்டுமெனச் சென்னை உயர் நீதி மன்றம் தெளிவான ஆணை வழங்கியும், நிலப் பறிப்பு சக்திகள் சென்ற ஆட்சிக்கு நெருக்கமாக இருந்ததன் விளைவாக அம் மக்கள் மீண்டும் அங்கம்மாள் காலனியில் குடியேற இயலாமலேயே இருந்து வந்தது. இந் நிலையில் ஆட்சி மாற்றத்தை ஒட்டித் துணிச்சல் பெற்ற மக்கள் சென்ற ஏப்ரல் 22 அன்று அங்கம்மாள் காலனியில் குடிசைகள் அமைத்துக் ‘காவேரி நகர்’ என அதற்குப் பெயரிட்டுக் குடியேறிய செய்தி விரிவாகப் பத்திரிக்கைகளில் வந்தது. எனினும் அச்சத்தின் விளைவாகவும், உரிய வசதிகள் இல்லாததாலும் ஒரு சில குடும்பங்களே அங்கு முழுமையாகக் குடியேறி வசித்து வந்தன. இந்நிலையில் சென்ற ஜூன் 2- 3 இரவு 12.30 மணி அளவில் ஒரு கும்பல் அங்கம்மாள் காலனிக்குள் நுழைந்து அங்கிருந்த மக்களை அடித்தும், குடிசைகளை நொறுக்கியும், தீவைத்தும் துரத்தியுள்ள செய்தியும், இதை ஒட்டி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்படப் பலர் கைது செய்யப்பட்ட செய்தியும் அடுத்தடுத்துப் பத்திரிக்கைகளில் வந்தன. ஆறுமுகம் கைது செய்யப்பட்டது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை என முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டார்.

நில ஆக்ரமிப்புகளை எதிர்த்த மக்கள் போராட்டங்களில் அக்கறை உள்ளவர்கள் என்கிற வகையில் மேற்குறித்த சம்பவம் பற்றின உண்மைகளை அறியும் நோக்குடன் கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. சிவில் உரிமைகளில் அக்கறையுள்ள அய்வர் இதில் பங்கேற்றனர். அவர்கள்:

1. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை,
2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி,
3. ஏ. ஆனந்தன், குறும்பட இயக்குநர், சேலம்,
4. எம். செந்தில், எழுத்தாளர், சேலம்,
5. ஏ. சங்கர், வழக்குரைஞர், சேலம்.

இக்குழுவினர் நேற்று முழுவதும் அங்கம்மாள் காலனி மக்கள், அவர்களின் வழக்குரைஞர்கள், தி.மு.க வழக்குரைஞர்கள், காவல் துறை ஆணையர்கள் ஆகியோரைச் சந்தித்தது.

அங்கம்மாள் காலனி மக்கள் சொன்னது:

அங்கம்மாள் காலனிக்கு எங்கள் குழு சென்று பார்த்தபோது ஒரு குடிசை தவிர அங்கு போடப்பட்டிருந்த மீதி ஒன்பது குடிசைகளும் இருந்த சுவடே இல்லை. அங்கு அப்போது நின்றிருந்த காலனி மக்களான வைரமணி த/பெ ஏழுமலை, கணேசன் த/பெ தாச கவுண்டர், குணசீலன் த/பெ கணேசன், சகுந்தலா க/பெ வெங்கடேசன், சின்னண்ணன் த/பெ சீரங்கன், தேன்மொழி க/பெ மணிவண்ணன், மாரக்கா க/பெ கருப்பண்ணன், தங்கம் க/பெ சீனிவாசன் உட்படச் சுமார் 25 பேர்களைச் சந்தித்துப் பேசினோம். தாக்க வந்த கும்பல் எட்டு குடிசைகளை அங்கிருந்த தொலைக்காட்சிகள் உட்பட எல்லாவற்றையும் உடைத்து நொறுக்கியும், ஒரு குடிசையை முழுமையாக எரித்தும் அழித்துச் சென்றதாகவும் தாங்கள் அழிவுகளை அப்புறப்படுத்தியுள்ளதாகவும் கூறினர். அவர்களின் வழக்குரைஞர்கள் ஹரிபாபு, தமயந்தி, ஜாஹிர் அகமத் ஆகியோர் குடிசைகள் அழிக்கப்படுவதற்கு முன்பிருந்த படங்களையும், அழிக்கும்போது செல்போனில் எடுத்த படங்களையும் காட்டினர். தாக்க வந்தவர்கள் சுமார் 30 பேர்கள் இருக்கலாம் எனவும் அவர்களில் பலர் முகத்தைத் துணியால் மறைத்திருந்தனர் என்றும் கூறினர். எனினும் ஒரு சிலரைத் தங்களால் அடையாளம் காட்ட முடியும் எனவும் ஶ்ரீதர் என்பவரை அவ்வாறு குறிப்பிட்டும் சொன்னார்கள்.

தாக்க வந்தவர்கள் தமது எட்டு வயதுக் குழந்தை கிருத்திகாவைத் தூக்கி எறிந்ததாகக் குழந்தையின் பெற்றோர் சகுந்தலாவும் வெங்கடேசும் கண்ணீர் மல்கக் கூறினர். தன்னை இரும்புக் கம்பியால் வந்தவர்கள் தாக்கியதால் ஏற்பட்ட காயத்தை ஒருவர் சட்டையைக் கழற்றிக் காட்டினார். “வீரபாண்டியாரின் இடத்தில் குடிசை போட நீங்கள் யாரடா?” எனக் கத்திக் கொண்டே தம் குடிசைகள் தாக்கப்பட்டதாக அவ்வளவு பேரும் கூறினர். உடைந்த கண்ணாடி மற்றும் பீங்கான் துண்டுகளைக் கழுத்தில் அழுத்தி மிரட்டியதாகவும், தொடர்ந்து இங்கே இருந்தால் இந்தக் கதிதான் உங்களுக்கும் என எரியும் குடிசையைக் காட்டியதாகவும் அவர்கள் கூறினர்.

தாக்குதல் நடந்தபோது அங்கிருந்த போலீஸ் அவுட் போஸ்ட்டில் யாரும் இல்லை என்ற போதிலும் அதன் பின் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கை திருப்தி அளிப்பதக்ச் சொன்ன அவர்கள் போதிய பாதுகாப்பு தற்போது தரப்பட்டுள்ளதாகவும் கூறினர். இரண்டு ஆய்வாளர்கள், நான்கு உதவி ஆய்வாளர்கள், பத்து காவலர்கள் அங்கே காவலுக்கு நிறுத்தப் பட்டுள்ளதாக ஒருவர் கூறினார். நாங்கள் சென்றிருந்த நேரத்தில் உதவி ஆணையர் கோபி உட்பட பத்துக்கும் மேற்பட்ட காவலர்களும் அதிகாரிகளும் அங்கிருந்தனர். எனினும் மக்கள் மத்தியில் இன்னும் அச்சம் போகவில்லை.

அங்கம்மாள் காலனியின் 20,000 சதுர அடியும் கம்பி முள் வேலி வைத்து எல்லை வகுக்கப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் குடி வந்தபோது தாமே அதைச் செய்ததாகவும், சென்ற 4ந்தேதி அன்று அரசுத் தரப்பில் அது அளக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டதாகவும் மக்கள் கூறினர். தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளதையும் குறிப்பிட்டனர்

2008ல் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்களால் கடத்திச் செல்லப்பட்டு மூன்று நாட்கள் சேலம் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் வைத்து அடித்து மிரட்டப்பட்ட சின்னண்ணன் மற்றும் வைரமணி ஆகிய இருவரும் அந்தச் சம்பவத்தை விரிவாகச் சொன்னார்கள். ஒரு வெள்ளைத் தாளில் தம்மிடம் கையெழுத்துகள் வாங்கப்பட்டதையும் குறிப்பிட்டனர். காலனி மக்களின் வழக்குரைஞர்கள் ஹரிபாபு, தமயந்தி ஆகியோர் அங்கம்மாள் காலனி தொடர்பான நில ஆவணங்கள், 2008ல் நில ஆக்ரமிப்பாளர்கள் மக்களை அடித்து விரட்டி புல்டோசர் வைத்து வீடுகளை உழுத வீடியோக்கள், மக்கள் நடத்திய போராட்டங்கள் தொடர்பான பத்திரிக்கைச் செய்திகள், ஆக்ரமிப்பாளர்களை வெளியேற்றி குடியிருப்பு நிலத்தை மக்களுக்கு மீட்டுத் தர வேண்டுமென உயர் நீதிமன்றத் தலமை நீதிபதி ஏ.கே.கங்கூலி, இப்ராகீம் கலிஃபுல்லா ஆகியோர் அளித்த ஆணை (ஜூன் 27, 2008) ஆகிய ஆவணங்களைத் தந்தனர். அவற்றையும் எம் குழு கவனமாகப் பரிசீலித்தது.

வீரபாண்டி ஆறுமுகம் தரப்பினரின் கருத்து

கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான ராஜாவைச் சந்தித்து அவர்கள் தரப்புக் கருத்தைக் கேட்க விரும்புகிறோம் என நாங்கள் தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டு கேட்டோம். தான் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் இருப்பதாகவும் உடனே வந்தால் சந்திக்கலாம் எனவும் அவர் கூறினார். நாங்களும் உடனையாக அங்கு சென்று காத்திருந்தோம். சிறிது நேரத்திற்குப் பின் அவர் ‘பிசி’யாக இருப்பதாகவும் மாலையில் எம்மை அழைப்பதாகச் சொல்வதாகவும் எங்களிடம் கூறப்பட்டது. நாங்கள் வேறு வழியின்றி வெளியேறினோம். ஆனால் கடைசி வரை எங்களை அவர் தொடர்பு கொள்ளவில்லை. தி.மு.க மாவட்ட வழக்குரைஞர் அணித் தலைவர் சிவ பாஸ்கரைத் தொடர்பு கொண்டு எங்கள் விருப்பத்தைக் கூறியபோது தாம் வேலையாக இருப்பதாகவும் முடிந்தவுடன் அழைப்பதாகவும் கூறி தொடர்பைத் துண்டித்தார். பிறகு அவர் தொடர்பு கொள்ளவேயில்லை. இருவரும் உண்மை அறியும் குழுவுடன் பேசத் தயாராக இல்லை என்பதைப் புரிந்து கொண்டோம். மாலையில் நாங்கள்இன்னொரு முன்னாள் தி.மு.க சட்ட மன்ற உறுப்பினரான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனைச் சந்திக்கத் தொடர்பு கொண்டபோது தாம் ஏற்காடு செல்வதால் சந்திக்க இயலாது என அவர் கூறினார் ஆறுமுகத்தின் வழக்குரைஞர் ஆர்.சீனிவாசன் மாலையில் சந்திக்கலாம் எனச் சொன்னார். நாங்கள் இன்று காலையில்தான் அவருடன் தொடர்புகொள்ள முடிந்தது.. தற்போது தனக்கு நேரமில்லை என அவரும் மறுத்துவிட்டார்.
இதற்கிடையில் தி.மு.க வழக்குரைஞர்கள் எனவும் வழக்குரைஞர் அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் எனவும் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட ஏ.ஜி.நரசிம்மன், எஸ்.மனேக்‌ஷா என்கிற இருவர் எங்களைத் தொடர்பு கொண்டு விரிவாகப் பேசினர். வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் அன்றைய தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும், ஆட்சியில் இல்லாதபோது என்ன தைரியத்தில் அவர் அப்படிச் செய்திருக்க முடியும் எனவும் அவர்கள் வினவினர். ஆறுமுகத்தை சென்னையிலிருந்து சேலத்திற்குக் கொண்டு வந்துப் பின் மீண்டும் சென்னைக்கும், பின் வேலூருக்கும் இழுத்தடித்ததை அவர்கள் கண்டித்தனர். மக்கள் கொடுத்துள்ள புகாரில் அழிக்கப்பட்ட குடிசைகளின் கதவு எண் கொடுக்கப்படவில்லை, காவேரி நகர் எனக் கூறுகின்றனர் அப்படி ஒரு பெயரில் அதிகாரபூர்வமான நகர் ஏதுமில்லை என்பதுபோன்ற புகார்களை முன்வைத்தனர். தற்போது நடைபெற்ற தாக்குதலில் ஆறுமுகத்திற்குத் தொடர்பில்லை எனக் கூறுகிறீர்கள், 2008ல் அம்மக்கள் அடித்து விரட்டப்பட்டதில் அவருக்குப் பங்குண்டா என நாங்கள் கேட்டபோது அது பற்றித் தான் ஒன்றும் கூற விரும்பவில்லை என்றார் நரசிம்மன்.

காவல்துறையின் கருத்து

காவல்துறை உதவி ஆணையர் ஏ.கோபி, ஆணையர் கே.சி.மஹாலி ஆகியோரைச் சந்தித்தோம். தாக்குதல் நடந்த நேரத்தில் அவுட் போஸ்டில் இல்லாமலிருந்த பள்ளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் இடமாற்றமும் உதவி ஆய்வாளர்கள் தேவேந்திரன், பன்னீர்செல்வம் மற்றும் தலைமைக் காவலர் கோவிந்தன் ஆகியோர் தற்போது தற்காலிகப் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள் தமது துறை செயல்பட்டுக் குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் கைது செய்யத் தொடங்கியதாக ஆணையர் கூறினார். முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் உட்பட இதுவரை 19 பேர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் 11 பேர்கள் தேடப்படுவதாகவும் அவர்களைப் பிடிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு ஆய்வாளரைப் பொறுப்பாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் இத் தாக்குதலுக்கும் தொடர்பில்லை எனவும் பழி வாங்கும் நோக்குடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறதே என நாங்கள் வினவியபோது அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாது எனவும், ஆறுமுகம் உட்படத் தாம் யாரையும் முகாந்திரமில்லாமல் (prima facie) கைது செய்யவில்லை எனவும் குறிப்பிட்டார். மீண்டும் அங்கம்மாள் காலனி மக்கள் அங்கு குடியேறுவதற்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்டுமா எனக் கேட்டதற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்.

எமது பார்வைகள்

சேலம் அங்கம்மாள் காலனி என்பது 1959ம் ஆண்டில் சீனிவாச குப்தா என்கிற நகைக் கடை உரிமையாளரால் அவரது பணியாளர்களுக்குக் குடியிருப்பதற்காக தானமாகக் கொடுக்கப்பட்ட இடம். மொத்தம் 20,000 சதுர அடி கொண்ட அவ்விடத்திற்கருகில் அப்போது பேருந்து நிலையம் இருக்கவில்லை. ‘ரியல் எஸ்டேட்’ முக்கியத்துவமும் அது பெற்றிருக்கவில்லை. சுமார் 50 ஆண்டு காலமாகத் தானம் பெற்றவர்களின் சந்ததியினர் அங்கே வசித்து வருகின்றனர். கூட்டுப்பட்டா, நிலவரி ரசீது, மின் தொடர்பு, குடும்ப அட்டை முதலான எல்லா ஆவணங்களும் அவர்களிடமிருந்தன. இருந்தும் இன்று பல கோடி ரூபாய் விலை மதிப்புடையதாகிவிட்ட அந்நிலத்தின்மீது அப்போது தமிழக அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் அண்ணன் மகனும் இன்று கொலை வழக்கில் சிறையில் இருப்பவருமான பாரப்பட்டி சுரேஷ் மற்றும் அவரது பினாமிகள் ஒரு கண் வைத்தனர். போலி ஆவணங்களைத் தயாரித்து அதன் அடிப்படையில் 2008ம் ஆண்டில் ஒரு நாள் அம்மக்கள் அவர்களின் நிலத்திலிருந்து அடித்து விரட்டப்பட்டனர். அவர்களின் வீடுகள் புல்டோசர் வைத்துத் தகர்க்கப்பட்டு நிலங்கள் கைப்பற்றப்பட்டன. ‘குடியுரிமைப் பாதுகாப்பு மையம்’ என்கிற மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த வழக்குரைஞர் ஹரிபாபுவின் முயற்சியால் இதற்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுச் சற்று முன் குறிப்பிட்டவாறு மீண்டும் அக்குடியிருப்பு அம்மக்களுக்குத் திருப்பித் தரப்பட வேண்டுமெனத் தெளிவான ஆணை ஒன்றும் பெறப்பட்டது.

எனினும் அடுத்து மூன்றாண்டுகள் ஆகியும் நீதிமன்ற ஆணை நிறைவேற்றப்படாததற்கு அமைச்சரின் அதிகாரம் பின்புலமாக இருந்ததை யாரும் மறுக்க இயலாது. ஆர்.டி.ஓ விசாரணை ஒன்றை ஏற்பாடு செய்து ஆக்ரமிப்பாளர்களின் போலி ஆவணங்களின் அடிப்படையில் அங்கம்மா காலனி நிலம் ஆக்ரமிப்பாளர்களுக்கே சொந்தம் என அறிக்கை ஒன்றும் அளிக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றத்தில் ‘ஸ்டே’ வழங்கப்பட்ட பின்பும், நிலம் மீட்டுத் தரப்பட வேண்டுமென்கிற உயர் நீதிமன்றத்தின் ஆணை நிறைவேற்றப்படாததற்கும் அமைச்சரின் அதிகாரமே பின்புலமாக இருந்துள்ளது. ஆட்டோ மணி என்கிற கந்து வட்டிக்காரர் ஒருவரை ஆக்ரமிக்கப்பட்ட நிலத்திற்குக் காவலாளியாக நியமித்து அவர் மூலமும், அவரது உறவினர் ஒருவர் மூலமும் அங்கம்மா காலனி மக்களில் சிலர் மீது புகார் கொடுக்கப்பட்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இரு வழக்குகளும் போடப்பட்டன. இது தவிர தங்கள் நிலத்தை மீட்பதற்கான போராட்டத்தில் பங்கு பெற்றதாகவும் ஏழு பேர்கள் மீது வழக்கொன்று உள்ளது. இன்று தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் காவல் துறை சென்ற ஆட்சியில் ஆக்ரமிப்பாளர்களுக்கு ஆதரவாக இருந்ததன் பின்னணியிலும் அமைச்சரின் அதிகாரம் இருந்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது பினாமிகள், அடியாட்கள் ஆகியோரை நோக்கி விசாரணை மேற்கொண்டுள்ளது தவிர்க்க இயலாத ஒன்று எனவே இக்குழு கருதுகிறது. எனினும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் யாருக்கேனும் இத் தாக்குதலில் தொடர்பில்லாத பட்சத்தில் தீர விசாரித்து அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். தாக்குதலுக்குக் காரணமாக இருந்து இன்னும் கைது செய்யப்படாதவர்களும் விரைவாகக் கைது செய்யப்பட வெண்டும்.

பரிந்துரைகள்

1. அங்கம்மா காலனியில் நிலத்தை இழந்த 23 குடும்பங்களும் மீண்டும் உரிய பாதுகாப்புகளுடன் அங்கே குடியமர்த்தப்படவேண்டும். காவல்துறையும் வருவாய்த் துறையும் போர்க்காலத் துரிதத்துடன் செயல்பட்டு இது நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கென மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் வருவாய்த் துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் அடங்கிய நிறைவேற்றுக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

2. மூன்றாண்டுகளாக நிலத்திலிருந்து விரட்டப்பட்டு, இருக்க வீடுமின்றிப் போராட்டம், வழக்குகள் என அலைந்துகொண்டிருந்த அங்கம்மா காலானி மக்களிடம் வீடுகட்டப் போதிய நிதிவசதி இல்லாததை அரசு கவனத்தில் கொண்டு பொருத்தமான அரசுத் திட்டமொன்றின் கீழ் அவர்களுக்கு வீடுகட்ட நிதி வழங்கி உதவி செய்ய வேண்டும்.

3. அங்கம்மா காலனி இப்போது எந்த அடிப்படை வசதியுமில்லாமல் உள்ளது. மின்சாரம், குடிநீர், சாலை, கழிவுநீர் வாய்க்கால் முதலான வசதிகள் உடனடியாகச் செய்து தரப்பட வேண்டும். இது தொடர்பான முயற்சிகள் சில அரசுத் தரப்பில் தொடங்கப்பட்டுள்ளதை இக்குழு வரவேற்கிறது.

4. அங்கம்மாள் காலனி மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும்.

5. கூட்டுப் பட்டாவை மாற்றி 23 குடும்பங்களுக்கும் தனிப்பட்டாக்களை வழங்கி, அதனடிப்படையில் அவர்களுக்குக் குடும்ப அட்டைகளும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

08.06.2012 அன்று சேலத்தில் இலக்குமி அரங்கில் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*