பிராந்திய இடஒதுக்கீட்டை சட்டம் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று ரத்து செய்ய வேண்டும்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 03.07.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:

இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரான பிராந்திய இடஒதுக்கீட்டை புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசு கடந்த 10.8.2006ல் பிராந்திய இடஒதுக்கீட்டை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதன்படி அரசு கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்படிப்பு அனைத்திலும் காரைக்காலுக்கு 18 சதம், மாகேவிற்கு 4 சதம், ஏனாமிற்கு 3 சதம் என மொத்தம் 25 சதவீத இடஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. மேலும், 21.5.2010ல் மீதமுள்ள 75 சதவீத இடங்களையும் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கி அரசாணை ஒன்றை வெளியிட்டது.

பிராந்திய இடஒதுக்கீடு புதுச்சேரி மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் என்பதோடு, இந்திய அரசியல் சட்டத்திற்கும், மண்டல் குழுப் பரிந்துரை தொடர்பான இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் எதிரானது. அப்போது இதனை எதிர்த்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் குரல் கொடுத்தன.

பிராந்திய இடஒதுக்கீட்டை எதிர்த்து பெற்றோர் மாணவர் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. (W.P. No. 13130 of 2010). இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் பிராந்திய இடஒதுக்கீடு செல்லும் என்றும், புதுச்சேரிக்கு 75 சதவித இடங்கள் ஒதுக்கி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்தும் கடந்த 6.8.2010ல் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் தீவிரமாகப் போராடி வருகின்றன. நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்னர் புதுச்சேரி அரசு தன்னிச்சையாக பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்தால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும்.

எனவே, புதுச்சேரி அரசு சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், இடஒதுக்கீட்டுக் கொள்கையில் போதிய தெளிவுடைய சமூக ஆர்வலர்கள் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை உடனடியாக  அமைத்து பிராந்திய இடஒதுக்கீட்டை மறுபரீசிலனைச் செய்ய வேண்டும்.

மேலும், இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்து சட்டம் ஒன்றை இயற்றி ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும்.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விக்கான சென்டாக் கவுன்சலிங் வரும் 9ந்தேதி துவங்க உள்ள நிலையில், புதுச்சேரி ஆளுநர் இக்பால் சிங் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புதுச்சேரி மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் இதனை உடனடியாக போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*