புதுச்சேரி சிறையில் கைதி சாவு: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ரூ. 3 லட்சம் இழப்பீடு!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (08.01.2014) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி சிறையில் மர்மமான முறையில் இறந்துப் போன கைதி சரவணன் குடும்பத்திற்கு தேசிய மனித உரிமைகள் ஆணயத்தின் உத்தரவுப்படி ரூ. 3 லட்சம் இழப்பீட்டுத் தொகையை சிறைத்துறை நிர்வாகம் வழங்கியுள்ளது.

திண்டிவனத்தைச் சேர்ந்த பழங்குடி குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் புதுச்சேரியில் தங்கி இருந்து கொத்தனார் வேலை செய்து வந்தார். 2009ல் இவர் மீது ஒதியஞ்சாலை மற்றும் காலாப்பட்டு போலீசார் சந்தேக வழக்குகள் பதிவுச் செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்துள்ளனர். சரவணன் கடந்த 25.06.2009 அன்று சிறையில் மர்மான முறையில் இறந்துப் போனார்.

இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சரவணன் உடலைப் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் பார்த்த போது மூக்கு, காதுகளில் ரத்தம் வழிதிருந்துள்ளது. மேலும் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன. இது குறித்து அவரது மனைவி ஆரியமாலா தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு 29.06.2009 அன்று புகார் அனுப்பி உள்ளார். அதில் தன் கணவரின் சாவுக்குக் காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

மேலும், சிறைத்துறை நிர்வாகமும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விதிப்படி  இச்சம்பவம் பற்றி விசாரித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

இவற்றைப் பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் சரவணனை இழந்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் சென்ற 18.12.2013 அன்று சிறைத்துறை தலைமைக் கண்காணிப்பு அதிகாரி (Chief Superintendent of Jails) இறந்துப் போன சரவணனின் மனைவி ஆரியமாலாவிற்கு ரூபாய் இரண்டரை லட்சம் மற்றும் அவரது தாயார் நீலவேணிக்கு ரூ. 50 ஆயிரம் தொகைக்கான காசோலையை நேரில் வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கி உத்தரவிட்ட தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கும், அதனை உடனே வழங்கிய சிறைத்துறை நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டு இருப்பதன் மூலம் சரவணன் இறப்புக்குக்குக் காவல்துறையும் சிறைத்துறையும்தான் பொறுப்பு என்பது உறுதியாகி உள்ளது. எனவே, சரவணன் இறப்புக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*