மருத்துவ மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (07.02.2014) விடுத்துள்ள அறிக்கை:

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அஜாக்கிரதையாக இருந்த கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் வழக்குப் பதிவுச் செய்து கைது செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

சென்ற ஆண்டு நவம்பர் 14 அன்று கிருமாம்பாக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் பயிற்சி மருத்துவராக இருந்த லட்சுமி அனுசியா (வயது 24) என்பவர் தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். அவர் தற்கொலை செய்துக் கொண்டது நவம்பர் 17ந் தேதியன்று விடுதி அறையில் இருந்து துர்நாற்றம் வீசிய பின்னர்தான் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட கிருமாம்பாக்கம் போலீசார் தற்போது தற்கொலைக்குத் தூண்டியதாக அதே கல்லூரியில் முதுநிலைப் படிப்பு பயிலும் மாணவரான டாக்டர் பிரசாந்த் (வயது 27) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இரண்டு மாதம் கழித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் காவல்துறையின் நடவடிக்கைப் பாராட்டுக்குரியது.

மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துக் கொண்டதும், அந்தச் சம்பவம் மூன்று நாட்கள் கழித்து வெளியே தெரியவந்ததும் பல்வேறு சந்தேகங்களுக்கு வழி வகுக்கிறது. இதில் விடுதியைக் கண்காணிப்பதும், அங்குத் தங்கியிருக்கும் மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் கல்லூரி நிர்வாகத்தின் பொறுப்பு. கல்லூரி நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் ஒரு மாணவியின் உயிர்ப் போயுள்ளது. மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இச்சம்பவம் 72 மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மூன்று நாட்களுக்குமுன் நடந்தது என தடய அறிவியல் வல்லுநர்கள் கூறியுள்ளது இக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது.

மேலும், இவ்வழக்கில் விசாரணை நடத்தும் அதிகாரி கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சட்டத்துறையிடம் கருத்துக் கேட்டதற்கு அவர்கள் தேவையில்லை எனக் கருத்துரை வழங்கியதாக தெரிகிறது. இதுபோன்று வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் தங்களுக்குச் சட்டப்படி முழு அதிகாரம் இருந்தும் சட்டத்துறையிடம் கருத்துக் கேட்பது சரியல்ல. இதுபோன்று கருத்துக் கேட்பது எந்த சட்ட, விதிகளின்படி என்பதை அரசு விளக்க வேண்டும்.

எனவே, புதுச்சேரி அரசும், காவல்துறையும் அஜாக்கிரதையாக இருந்த கல்லூரி நிர்வாகத்தினர் மீது உரிய சட்டப் பிரிவின்கீழ் வழக்குப் பதிவுச் செய்து, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*