ஆசிரம சகோதரிகளை ஆசிரமத்திற்குள் தங்க வைத்து அனைத்து வசதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்!

புதுச்சேரியிலுள்ள கட்சி மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் இன்று (27.01.2015) துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங், முதலமைச்சர் ந.ரங்கசாமி. தலைமைச் செயலாளர் சேட்டன் பி சாங்கி, வருவாய்த்துறை செயலர் கந்தவேல், ஆட்சியர் சுந்தரவடிவேலு ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சி.சூ.சாமிநாதன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் என்.எஸ்.கே.அப்துல் சமது, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அமைப்பாளர் எம்.ஏ.அஷ்ரப், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன் ஆகியோர் கையெழுத்திட்டு இம்மனுவை அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

ஆசிரம சகோதரிகள் சென்ற 9.12.2014 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அவர்கள் தங்கியிருந்த ஆசிரம இல்லத்தில் இருந்து கடந்த 17.12.2014 அன்று வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் ஆசிரம சகோதரிகள் ஐந்து பேரும் தங்கள் தாய் தந்தையருடன் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் இரண்டு சகோதரிகள் மற்றும் அவர்களது தாயார் இறந்துப் போனார்கள். எஞ்சிய சகோதரிகள் ஜெயஶ்ரீ, நிவேதிதா, ஹேம்லதா மற்றும் அவர்களது தந்தையார் பிரசாத் உயிர் தப்பியதோடு இப்போது மிகுந்த மன உளைச்சலோடும் துயரத்தோடும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் ஐந்து சகோதரிகளை ஆசிரம இல்லத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டதே தவிர, அவர்கள் ஆசிரமவாசிகளே இல்லை என்று கூறவில்லை. வேறு எந்த நீதிமன்றமும் அவ்வாறு உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

ஆசிரம நிர்வாகிகள் சட்டத்துற்குப் புறம்பாக சகோதரிகளையும், அவர்களது தந்தையாரையும் ஆசிரமத்தில் உள்ள சமாதிக்குச் செல்வதற்கும், அங்குத் தியானம் செய்வதற்கும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் ஆசிரமம் குறித்து நடந்து வரும் பொதுநல வழக்கில் ஆசிரம சகோதரிகள் இறந்ததால் ஆசிரமத்திற்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆசிரம நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஆனால், ஆசிரம சகோதரிகள் இந்த நிலைக்குக் ஆளானதற்குக் காரணம் ஆசிரம நிர்வாகிகள் தான் என்பதை அறிவீர்கள்.

எனவே, தாங்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு ஆசிரம சகோதரிகளுக்கும் அவர்களது தந்தையாருக்கும் ஆசிரமத்திற்குள் தங்க வைத்து அனைத்து வசைதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சகோதரிக்கு உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது போல ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

 இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*